நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 மார்ச், 2015

SOUBHAGYA GOWRI VIRATHAM, GANGOUR VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், கங்கௌர் விரதம் (22/03/2015)



சென்ற பதிவின் தொடர்ச்சி..

அன்பர்களுக்கு வணக்கம்!.

சென்ற பதிவில், கௌரி விரதம் அனுஷ்டிக்கும் விதத்தின் முதல் முறையினைப் பார்த்தோம்..அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையினையும், ராஜஸ்தானத்தில், 'கங்கௌர்' என்ற பெயரில் இது அனுசரிக்கப்படுவதையும், 'அருந்ததி விரதம்' என்று, சில பகுதிகளில் அனுஷ்டிக்கப்படும் விதம் குறித்தும் பார்க்கலாம்..

இரண்டாவது முறை:

இம்முறையில், கௌரி தேவியை, ஒரு மாத காலத்திற்கு, இல்லத்தில் எழுந்தருளச் செய்து பூஜை செய்கின்றார்கள். ஆகவே, அதற்கேற்ற முறையில், பூஜிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். கோலமிட்டு அலங்கரிக்கின்றார்கள். ஒரு சுத்தமான தாம்பாளம், குறிப்பாக மரத்தால் ஆனதை, கோலமிட்டு, அலங்கரித்து வைக்கின்றார்கள்.. அதன் நடுவில், நீரால் நிரம்பிய கலசத்தை வைக்கிறார்கள்.. மஞ்சள் பொடியை பிசைந்து, கூம்பு வடிவில் செய்து, ஒரு வெற்றிலையின் நடுவில் வைத்து, அந்த வெற்றிலையை, ஒரு பெரிய அச்சு வெல்லத்தின் மேல் வைத்து, அதனை கலசத்தின் முன்பாக வைக்கின்றார்கள். கலசத்தின் அருகில், (நாம் முளைப்பாரி வைக்கும் மண்பாண்டம் போல்) ஒரு மட்பாண்டம் அல்லது சட்டியில், கோதுமை தானியங்களைத் தூவி வைக்கின்றார்கள்.

பாசிப்பயறு, முழு கடலை, வெந்தய விதைகள் முதலியவற்றையும் தூவுவதுண்டு.. சிலர், கலசம் வைத்த தட்டில், கலசத்தைச் சுற்றிலும் மணல் பரப்பி, இம்மாதிரி தானிய விதைகளைத் தூவுகின்றனர். இதனால், ஒரு மாத நிறைவில், வளர்ந்து நிற்கும் புற்களின் நடுவில் கலசம் அமைந்து, பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும்.

பூஜை முறைகள் எல்லாம் முதலில் சொன்னது போல்தான். நிவேதனங்களில், கோசுமரி,(கோசுமல்லி என்று தமிழகத்தில் வழங்கப்படுவது. ஊற வைத்த பாசிப்பயறுடன், வெள்ளரி அல்லது காரட் துருவல் சேர்த்து, உப்பு, எலுமிச்சை சாறும் சேர்த்து செய்யப்படுவது. கடுகு தாளித்து, தேங்காய் துருவல் சேர்ப்பதும் உண்டு). எலுமிச்சை சாறு சேர்த்த பானகம்,  நீர் மோர் மற்றும் ஏதாவது ஒரு வகை இனிப்பு ஆகியவை கட்டாயம் இடம் பெறும்.

மாலையில் தாம்பூலத்திற்கு வரும் பெண்களுக்கு பாத பூஜை செய்த பின், தாம்பூலம் வழங்குகின்றார்கள்.. சிவன், பார்வதி பிரதிமைகளை வைத்து டோலோத்சவமும் செய்கின்றார்கள்.

அதன் பின்னர், தினமும் இருவேளை, பூஜை மற்றும் நிவேதனம் செய்து வருகின்றார்கள். அக்ஷய திருதியைக்கு அடுத்து, வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அல்லாத சுபதினமொன்றில், கலசத்திலும் மஞ்சளிலும் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை விஸர்ஜனம் (இருப்பிடத்திற்கு எழுந்தருளச் செய்தல்) செய்கின்றார்கள்.

ராஜஸ்தானில் இந்த பூஜை, 'கங்கௌர்' பூஜை என்று அழைக்கப்படுகின்றது.. குஜராத், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இது கொண்டாடப்படுகின்றது.   நல்ல மணவாழ்வு வேண்டியும், ஆண்டு முழுவதும், பயிர்கள் நன்முறையில் விளைய வேண்டியும் இது கொண்டாடப்படுகின்றது..

இல்லத்தில் நடைபெறும் பூஜைகள், மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. ஆயினும், 'கங்கௌர்' மேளா பதினெட்டு தினங்கள் நடைபெறுகின்றது. 'கங்கௌர்' எனும் பெயர், கங்காதரனாகிய சிவனையும், கௌரி தேவியாகிய பார்வதி தேவியையும் இணைத்துக் குறிக்கின்றது. பதினெட்டு நாட்களும் விரதமிருக்கும் நியமமுடைய பெண்கள், அந்த தினங்களில் ஒரு வேளை மட்டும் உணவருந்துகின்றார்கள்.

களிமண்ணைப் பயன்படுத்தி, சிவ பார்வதி பிரதிமைகள் செய்யப்பட்டு, புதுத் துணிமணிகள், அணிகலன்களால் அலங்கரிக்கப்படுகின்றன. அவையே பூஜையில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன. ராஜபுத்திர குடும்பங்களில், பூஜைக்கென, மரப் பிரதிமைகள் இருக்கும். அவை, ஒவ்வொரு வருடமும், வர்ணங்கள் தீட்டி, பூஜையில் வைக்கப்படுகின்றன. 'கங்கௌர்' பூஜையின் முக்கியமான சடங்கு, புனித ஹோமங்கள் நடைபெறும் இடங்களில், ஹோம குண்டங்களிலிருந்து சாம்பலையும், மணலையும் சேகரித்து, அதில் கோதுமை மற்றும் பார்லி விதைகளை விதைப்பதாகும். தினமும் அதற்கு நீருற்றி வருகின்றனர். 18ம் நாள் வரை இதைச் செய்வது வழக்கம். விதைக்கப்பட்ட விதைகள், அழகுற வளருகின்றன. விழாவின் நிறைவு நாளன்று நடைபெறும் ஊர்வலத்தில், இவையும் எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் சேர்க்கப்படுகின்றன.

பூஜையின் 7ம் நாள், திருமணமாகாத பெண்கள், ராஜஸ்தானிய கிராமியப் பாடல்களைப் பாடியபடி, 'குடிலா' என்னும், தீபங்கள் ஏற்றிய, துளைகள் இருக்கும் மட்பாண்டங்களை தலையில் சுமந்து ஊர்வலம் வருகின்றனர். அவர்களுக்கு பரிசுப் பொருட்களும், இனிப்புகளும் வழங்குவது வழக்கம். 10ம் நாள், அந்த மட்பாண்டங்களை உடைத்து, கிணற்றிலோ அல்லது குளத்திலோ சேர்க்கின்றனர்.
 
 மேளாவில் கடைசி மூன்று தினங்களிலும், பெண்கள், புத்தாடை, அணிமணிகள் புனைந்து தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். விழாவின் நிறைவு நாள் மதியம், பிரதிமைகளை, தங்கள் தலையில் ஏந்தி, ஊர்வலம் துவங்குகின்றனர். பூஜை செய்யப்பட்ட பிரதிமைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் சேர்க்கப்படுகின்றன.

அருந்ததி விரதம்:

 சில பகுதிகளில், சைத்ர கௌரி விரதம், 'அருந்ததி விரதம்' என்றும் அழைக்கப்படுகின்றது. வசிஷ்ட மாமுனிவரின் தர்ம பத்தினி அருந்ததி தேவி. கற்பரசிகளில் ஒருத்தி. வசிஷ்டர், தமக்கு சப்தரிஷி மண்டலத்தில் இடமளிக்கப்பட்ட போதும், அருந்ததியையும் அவரோடிருக்க அனுமதிக்கும் வரையில், அதனை ஏற்கவில்லை என்று விரதத்துக்கான புராணக் கதை கூறுகின்றது.  

கணவரின் அன்பை, அவ்விதம் நிரந்தரமாகப் பெற வேண்டி இந்த பூஜை செய்யப்படுகின்றது. இந்த விரதமிருப்பவர்கள், மூன்று தினங்கள், பிரதமை துவங்கி பூஜிக்கின்றார்கள். முதல் நாள், கடும் உபவாசமிருக்கின்றார்கள். நியமங்களிலிருந்து சிறிதும் பிறழாமல் இருக்கின்றார்கள். மறு நாள், கலசம் அமைத்து, அதில் விநாயகரை ஆவாஹனம் செய்து பூஜிக்கின்றார்கள். அருந்ததி, மற்றும் வசிஷ்டரையும் பிரதிமைகளாகச் செய்து பூஜிக்கின்றார்கள். மூன்றாம் நாள், சிவனையும் பார்வதியையும் வழிபாடு செய்கின்றார்கள். திருதியை அன்று  மட்டும் வழிபாடு செய்யும் வழக்கமுள்ளவர்கள், இம்மூன்றையும், ஒரே தினத்தில் செய்கின்றார்கள்.

ஆண்டு முழுவதும் நற்பலன்கள் நடைபெற வேண்டியும், வசந்த காலத்தை வரவேற்கும் முகமாகவும் இம்மாதிரியான இறைவழிபாடுகள் செய்யும் வழக்கத்தை, நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இறைவழிபாடு செய்யும் போது, இவ்வுலகமனைத்திலும் அமைதி நிலவ வேண்டி வழிபாடு செய்வோமாக!..

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி; கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..