நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 26 மார்ச், 2015

KANNANAI NINAI MANAME.. PART 23...கண்ணனை நினை மனமே!.. பகுதி 23...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல் (தொடர்ச்சி).


சாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..
அசுர குணத்தோடு, ஜய விஜயர்கள் பிறந்த நிகழ்வை, 'சந்தியா காலத்தில் உண்டு பண்ணப்பட்ட கெடுதி' என்றே வர்ணிக்கிறார் பட்டத்திரி... கச்யப மஹரிஷியும், திதி தேவியும், அகால நேரமாகிய சந்தியா காலத்தில்  இணைந்ததால் பிறந்த இவர்கள், யமனைக் காட்டிலும், வேறான,  இரண்டு யமன்களைப் போல், துன்பங்களை விளைவிப்பவர்களாக இருந்தார்கள்..

இருவரில்  மூத்தவன், ஹிரண்யாக்ஷன் என்றும் மற்றவன்  ஹிரண்யகசிபு என்றும் பெயர் பெற்றார்கள்...இருவரும், தங்கள் அசுர குணத்தால் அறிவை இழந்து, எம்பெருமானை நாதனாக உடைய அனைத்து உலகங்களையும் கோபங்கொண்டு அழிக்கத் தொடங்கினார்கள்.

ஹிரண்யாக்ஷன், தனக்குச் சமமாகப் போர் புரியக் கூடிய எதிரியைத் தேடி, ஒருவரையும் காணாமையால், பூதேவிப் பிராட்டியை கவர்ந்து சென்று, நீரில் மூழ்க வைத்து விட்டு, தன் கதையுடன், மிகுந்த கர்வம் கொண்டு, கர்ஜனை செய்தவாறு சுற்றி வந்தான்.

அவன் வருணனுடன் சண்டையிடச் சென்ற போது, வருணன் மூலமாக‌, எம்பெருமானே  தன்னுடன் சண்டையிட சமமானவர் என்பதை அறிந்து கொண்டான். அவரைத் தேடிக் கொண்டு சுற்றியலைந்தான்... இந்த நிகழ்வை பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாகவே கேட்போம்!..

ததோ ஜலேஸா²த்ஸத்³ருʼஸ²ம்ʼ ப⁴வந்தம்ʼ
 நிஸ²ம்ய ப³ப்⁴ராம க³வேஷயம்ʼஸ்த்வாம் | 
ப⁴க்தைகத்³ருʼஸ்²ய​: ஸ க்ருʼபாநிதே⁴ த்வம்ʼ
 நிருந்தி⁴ ரோகா³ன் மருதா³லயேஸ² ||

("ஸ்ரீ அப்பனே!.. கருணயென்னும் பெருநிதியே!..(ஹிரண்யாக்ஷன்), வருணன் மூலம், நீர் தான் அவனுடைய பலத்திற்குச் சமமானவர் என்று அறிந்து கொண்டு, உம்மைத் தேடி அலைந்தான். பக்தன் ஒருவனாலேயே காணக்கூடிய நீர், எம்முடைய நோய்களைப் போக்கி அருள வேண்டும்!").

வராஹ அவதாரம்:

ஹிரண்யாக்ஷன், பகவானைத் தேடிக் கொண்டு, சுற்றியலைந்த தருணத்தில்,  பிரஜைகளைச் சிருஷ்டிக்கும் செயலில் ஈடுபட்டிருந்த ஸ்வாயம்புவ மனுவானவர், பூமி மூழ்கி விட்டதைக் கண்டு வருந்தி, முனிவர்களுடன், சத்ய லோகம் சென்று, பகவானின் திருவடித் தியானத்தில் மூழ்கியிருந்த பிரம்மதேவரைக் கண்டு பணிந்தார்.

மிகுந்த வருத்தத்துடன் அவர், 'பிரம்ம தேவரே!.. இதென்ன கஷ்டம்!.. நான் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யும் வேளையில், பூமி நீரில் மூழ்கியதே!.. ஆகையால், மக்கள் வாழத் தகுந்த இடம் ஒன்றை உண்டாக்கித் தருமாறு வேண்டுகிறேன்!' என்று பிரம்ம தேவனைத் துதித்தார்.

இதைக் கேட்ட பிரம்ம தேவர், பகவானின் திருவடித் தியானத்திலேயே ஆழ்ந்தார்.

எப்போதும், எதற்கும் இறைவனது கருணையையே சார்ந்திருக்கும் பிரம்ம தேவர், இப்போதும், இறைவனையே சரணடைந்தார். 'எங்கும் நிறைந்துள்ளவனே (விபோ)!..நான் பிரளய காலத்தில் அதிகமாகவே நீரைக் குடித்தேன். ஆயினும், இப்போது, பூமி நீரில் மூழ்கி விட்டதே!.. கஷ்டம்.. கஷ்டம்..நான் என்ன செய்வேன்?!' என்று இறைவனது திருவடிகளில் சரண்புகுந்த பிரம்ம தேவரின் நாசித் துவாரத்திலிருந்து, பகவான் வெள்ளைப் பன்றிக் குட்டியின் ரூபத்தில் உதித்தருளினார்...

ஹா ஹா விபோ⁴ ஜலமஹம்ʼ ந்யபிப³ம்ʼ புரஸ்தாத்³
அத்³யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம்ʼ கரோமி | 
இத்த²ம்ʼ த்வத³ங்க்⁴ரியுக³ளம்ʼ ஸ²ரணங்க‌தோ(அ)ஸ்ய
நாஸாபுடாத்ஸம்ப⁴வ​: சிசுகோலரூபீ ||  (ஸ்ரீமந் நாராயணீயம், வராஹ அவதாரம்).

பிரான்உன் பெருமை பிறரா ரறிவார்?,
உராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்
தெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை
அடிக்களவு போந்த படி? (பொய்கை ஆழ்வார்).

பகவானுடைய அவதாரம், இந்த கல்பத்தில் வெள்ளைப் பன்றி உருவில் தோன்றியதால், இந்த கல்பத்திற்கு, 'ஸ்வேத வராஹ கல்பம்' என்ற பெயர் ஏற்பட்டது..

​(தொடர்ந்து தியானிப்போம்!).​

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..