நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 22 மார்ச், 2015

SOUBHAGYA GOWRI VIRATHAM, CHAITRA GOWRI VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், சைத்ர கௌரி விரதம்...(22/3/2015)

 

அன்பர்களுக்கு வணக்கம்!..

இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டாடப்படும் பலவகை விரதங்களை, இயன்ற அளவில் பதிவிட்டு வருகின்றேன். குறிப்பாக 'கௌரி விரத'ங்களை அதன் விதிமுறைகளுடனும், இயன்றால் விரத பூஜைக் கதைகளுடனும் பதிவிட்டு வருகின்றேன்.. இந்த பதிவில், சித்திரை மாதம் அனுஷ்டிக்கப்படும், முக்கியமான ஒரு கௌரி விரதம் பற்றி அறிந்து கொள்ளலாம்..

இது, 'சௌபாக்கிய கௌரி விரதம், சைத்ர கௌரி விரதம், உஜ்ஜலி கௌரி விரதம், டோலா கௌரி விரதம், சௌபாக்கிய சாயன விரதம் மனோரத திருதியை' முதலிய பல பெயர்களில் வழங்கப்படுகின்றது..

யுகாதி பண்டிகைக்கு அடுத்து வரும் சுக்ல பக்ஷ திருதியை திதியில் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.. சிலர், பங்குனி மாத சுக்ல திருதியையிலிருந்து ஆரம்பித்து, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாத சுக்ல திருதியைகளில் செய்கின்றார்கள்.. யுகாதி பண்டிகைக்கு அடுத்து வரும் சுக்ல திருதியை திதியில், கௌரி பூஜை செய்வதற்காக‌ வைக்கும் கலசத்தை, அடுத்து வரும் அக்ஷய திருதியை வரை, ஒரு மாதம் பூஜை செய்வதே  பெரும்பான்மையோரின் வழக்கமாக இருக்கின்றது..

இந்த பூஜை, கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகள், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் செய்யப்படுகின்றது.

இந்த கௌரி விரதம், திருமணமான‌ பெண்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. கணவர் மற்றும் குடும்ப நலன் வேண்டியும், வாழ்வில் சகல சௌபாக்கியங்களை அடைவதற்காகவும், கௌரி தேவியை பெண்கள் பூஜிக்கின்றார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில், வட இந்தியர்களின் பஞ்சாங்கத்தின்படியான சித்திரை மாத முதல் தேதியிலிருந்தே (ஹோலி பண்டிகைக்கு அடுத்த தினம்), இந்த பூஜை துவங்கி, தொடர்ந்து பதினெட்டு தினங்கள் நடைபெறுகின்றது. திருமணமாகாத, மற்றும் புதிதாக திருமணமான பெண்கள் இதைக் கண்டிப்பாக அனுஷ்டிக்கின்றார்கள்.

விரதம் தோன்றியதற்கான புராணக் கதை:

அம்பிகை, தாக்ஷாயணி என்ற திருநாமத்துடன், தக்ஷனின் திருமகளாக அவதரித்து, சிவபெருமானை மணந்தார். தன் தந்தையாகிய தக்ஷன், தன் கணவனை அழைக்காது   துவங்கிய யாகத்துக்கு, சிவபிரான் தடுத்தும் கேளாது சென்றார்.  தக்ஷனிடம், அவன் செய்கையில் இருந்த அநீதியை எடுத்து கூறியும் தக்ஷன் கேட்கவில்லை. ஆகவே, தக்ஷனின் யாகத்தீயில் புகுந்து உடலை விட்டார். பின்னர், ஹிமவானின் திருமகளாக மீண்டும் அவதரித்து, பற்பல விரதங்களை அனுஷ்டித்து, தவமியற்றினார். அவர் தவம் பலித்த தினமே 'சௌபாக்கிய திருதியை'. ஆகவே அன்றைய தினம் கௌரி தேவியையும் சிவபெருமானையும் பூஜிக்கின்றனர்.

இது குறித்து மற்றொரு புராணமும் சொல்லப்படுகின்றது. காளி தேவி, கருநிறமுடையவள். தன் திருமேனியின் நிறம் மாறும் பொருட்டு, தவமியற்றியதாகவும். அதன் பலனாக, வெண்மை நிறமுடய (கௌவர்ணம்) கௌரி தேவியாக உருமாறியதாக சொல்கின்றார்கள்.

கௌரி தேவியை வழிபடுபவர்கள், சித்த சுத்தியடைந்து, சத்வ குணம் நிறைந்தவர்களாகிறார்கள். ருக்மணி தேவி, கௌரி தேவியைப் பூஜித்தே, ஸ்ரீகிருஷ்ணரை பதியாக அடைந்தார். சீதா தேவி, ஜனகரின் திருமகளாக வாழும் காலத்தில், தினந்தோறும், மனதுக்கிசைந்த மணாளன் வேண்டுமென்று கௌரி தேவியைப் பூஜித்து வந்தார். இதிலிருந்தே, கௌரி தேவியைப் பூஜிப்பதன் முக்கியத்துவத்தை அறியலாம்..

விரத பூஜை முறைகள்:

இந்த விரதத்திற்கு, இல்லமும், பூஜை செய்யும் இடமும் சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றது.. விரத தினத்திற்கு முன்னரே இல்லத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றார்கள்..பூஜை முறைகள் பொதுவாக, இரு விதமாக இருக்கின்றது.

1..முதல் முறையில், விரதமிருப்பவர்கள், விரத தினத்திற்கு முதல் நாள் மாலையிலிருந்து உபவாசமிருக்கின்றார்கள்.. மறு நாள், விரத தினத்தன்று காலை, மங்கள ஸ்நானம் (எண்ணைக் குளியல்) செய்து, பூஜை நடக்கும் இடத்தைச் சுத்தம் செய்கிறார்கள். பின்னர், அதில் அழகழகான கோலங்கள் வரைந்து, பூஜை மேடையை தயார் செய்கின்றார்கள்.

பூஜைப் பொருட்களையும் நிவேதனப் பொருட்களையும் தயார் செய்து கொண்ட பின்னர், தீபங்களை ஏற்றி, பூஜை துவங்குகின்றார்கள்.. முதலில் விநாயகரைப் பூஜித்து, கற்பூரம் காட்டி வழிபட்ட பின்னர், கௌரி தேவியைப் பூஜை செய்கின்றார்கள்..

2. மஞ்சள் பொடியை பிசைந்து, கூம்பு வடிவில் செய்து, அதில் கௌரி தேவியை ஆவாஹனம் செய்து பூஜை செய்கின்றார்கள். மஞ்சள் கௌரியின் அருகில், கௌரி தேவியின் பிரதிமையையோ, படத்தையோ வைத்தும் பூஜை செய்யலாம்..

3. சில பகுதிகளில், சிவபெருமானையும், கௌரி தேவியையும் சேர்த்தே பூஜை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.   ஷோடசோபசார (16 வகையான உபசார முறைகள்) பூஜை செய்ய வேண்டும்.. கௌரி தேவிக்கு கௌரி அஷ்டோத்திரம் சொல்லி, பூஜை செய்ய வேண்டும். பூஜையில் தவனம் எனப்படும் இலைகளை (பத்ரம்) பயன்படுத்துவது அவசியம்.. பூமாலைகளில், இதைச் சேர்த்தே கட்டுவது வழக்கம். அதனால் அநேகமாக எல்லா பூக்கடைகளிலுமே தவனம் கிடைக்கும்.

4. இயன்றால், இறைவன், தேவியின் பிரதிமைகளுக்கு அபிஷேகங்கள் செய்தும் பூஜிக்கலாம்.

5. .இயன்ற நிவேதனங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. தேங்காய் உடைத்து, வெற்றிலை, பாக்கு பழத்துடன் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்ட வேண்டும்.. பிரதக்ஷிண நமஸ்காரங்களைச் செய்த பிறகு, பூஜையில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைகளை பொறுத்தருள வேண்டி, கௌரி தேவியைப் பிரார்த்திக்க வேண்டும்.

பூஜை பிரசாதங்களை உணவாகக் கொள்ளலாம்.. ஆனால் அன்று முழுவதும் உபவாசமிருப்பதே சிறப்பாகக் கருதப்படுகின்றது.

மாலையில், விளக்கு வைக்கும் நேரத்தில், பூஜை இடத்தில் தீபங்களை ஏற்றி, இயன்ற நிவேதனம் செய்ய வேண்டும். ஒரு தட்டில், மஞ்சள், குங்குமம் கலந்த நீரில், இரு தீபங்கள் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்..

தெரிந்தவர், உறவினர் வீட்டுப் பெண்களை, அம்மையப்பனை தரிசிக்க அழைக்க வேண்டும்.. அவர்களுக்கு, மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் தருதல் அவசியம்.

சில இடங்களில், சிறிய அளவிலான ஊஞ்சல் செய்து, அதில், கௌரி தேவியையும் சிவபெருமானையும் எழுந்தருளச் செய்து, 'டோலோத்சவம்' (ஊஞ்சலை முன்னும் பின்னுமாக, மெதுவாக அசைத்து ஆடச் செய்தல்) செய்து வழிபடுகின்றார்கள். இது 'சிவ டோலோத்சவம்' என்றும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக, குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்த முறையில் வழிபடுகின்றார்கள். இதனால் அவர்களின் குறை தீர்க்கப்படும் என்பது நம்பிக்கை.

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்)

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி; கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

 1. இதுவரை தெரியாத பல புதிய செய்திகள் இந்தப்பதிவின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும் இதுபோன்ற ஆன்மிகச் செய்திகள்.

  பதிலளிநீக்கு
 2. விளக்கங்களுக்கு நன்றி அம்மா... அடுத்த பதிவிற்கு செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து படித்து வருகிறீர்கள்!. மிக்க நன்றி தங்களுக்கு!.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..