நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

SONG # 8...THAYUMANAVADIGAL ARULIYA ..'MALAIVALAR KAATHALI'...பாடல் # 8.... தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி'...


பாடல் # 8.

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து
வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ
நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே
வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.

பொருள்:

பூதமொடு பழகிவள ரிந்திரிய மாம்பேய்கள்
    புந்திமுத லானபேய்கள்
  போராடு கோபாதி ராட்சசப் பேய்களென்
    போதத்தை யூடழித்து..."ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலில், புலன்களாகிய பேய்களும், புத்தி  முதலான பேய்களும், என்னை வெற்றி கொள்வதற்காக, விடாது போராடும் கோபம் முதலான பேய்களும், என் நல்லறிவை உட்புகுந்து அழித்து..." ( ஐம்பூதங்களால் ஆகிய இவ்வுடலை, நம் வினைகளின் பொருட்டே நாம் பெற்றோமாயினும், இப்பிறவி எடுத்ததன் நோக்கம், இறைசிந்தனையில் ஆழ்ந்து, இருவினைகளை அழித்து, நாம் முக்தி பெறுவதேயாகும். அந்த நோக்கத்தை நாம் அடைய விடாமல் பலவித பகைவர்கள் நம்முடனேயே இருந்து நம்மைத் தடுக்கின்றனர்.. அவற்றின் வலிமை அபரிமிதமாக இருப்பதால் அவற்றை, 'பேய்கள்' என்றார்.

நம்முடலில் இருக்கும் இந்திரியங்கள், புத்தி முதலான நான்கு அந்தகரணங்கள், கோபம் முதலானவற்றை 'பேய்கள்' என்றழைத்து, அவை, திருவடிப் பேறு பெற வேண்டும் என்ற நல்லறிவினை கெடுத்து மயக்கத்தைத் தருகின்றன என்றார்.

இவற்றுள் கோபம் முதலானவற்றை, 'அறுபகைவர்கள்' என்று முந்தைய பாடலிலேயே அடிகள் சொல்லியிருக்கிறார்.

நமது இந்திரியங்கள், இறைவனை நோக்கியே, இறைவனுக்கு சேவை செய்வதன் பொருட்டே செயல்பட வேண்டும்.. அது போல், மனம், புத்தி, சித்தம்,அகங்காரம் என்ற நான்கினாலும் எழும் துர்க்குணங்களை அறுத்து,   அவற்றை அழித்தல் வேண்டும். அவ்வாறு செயல்படாமல் இருந்தால், அவை நம் ஆன்மீக வழியின் உட்புகுந்து, நம் நல்லறிவினை, ஆன்ம போத நிலையினைக் கெடுக்கும் என்றார் ).

வேதனை வளர்த்திடச் சதுர்வேத வஞ்சன்
    விதித்தானிவ் வல்லலெல்லாம்
  வீழும் படிக்குனது மவுனமந் த்ராதிக்ய
    வித்தையை வியந்தருள்வையோ.."இவ்விதம், (உடலுடனே உறைகின்ற பேய்கள் என் நல்லறிவைக் கெடுத்து) வேதனை வளர்க்குமாறு, நால்வகை வேதங்களில் வல்லவனான பிரம்மதேவன் என் விதியை எழுதினான். இந்த துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு விலகி, வீழும்படிக்கு, உன் மவுன மந்திராதிக்ய வித்தையை எனக்கு அருள்வாயோ?!". ( நல்லறிவைக் கெடுக்கும்படியான பேய்கள் வீழும் வழி, 'மவுன மந்திரம்' என்று போற்றப்படுகின்ற 'ஓம்'  எனும் பிரணவ மந்திரத்தின் நாதத்தை, குருவின் வழிகாட்டலில் நின்று, நிஷ்டை கைகூடி உணர்தலே..

பிரணவத்தின் உட்பொருளின் மகத்துவம் கருதியே, தகப்பன் ஸ்வாமியாகிய சுவாமிநாதப் பெருமான், எம்பிரானின் திருச்செவிகளில் ரகசியமாக ஓதினார்.. அதனால் பிரணவம் 'மவுனமந்திரம்' எனப்படுகின்றது..

இதன் நாதத்தை நிஷ்டையில் அறியும்படியான வித்தை (மார்க்கம்), குருவருளாலேயே சித்திக்கும்..அந்த வித்தையை, அம்பிகையே குருவாக இருந்து தமக்கு நிரம்ப (முழுமையான ) அருள் செய்யும்படியாக வேண்டுகிறார் அடிகள்..இங்கு 'வியந்தருள்' என்பது 'நிரம்ப அருள்' என்பதாகப் பொருள்படும்.. திருவருட்பா பாடலொன்றையும் இந்தப் பொருளை உறுதி செய்யும் பொருட்டு சிந்திக்கலாம்.

         விளங்கு கின்றசிற் றம்பலத் 
          தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே 
         களங்க மில்லதோர் உளநடு 
          விளங்கிய கருத்தனே அடியேன் நான் 
         விளம்பி நின்றதோர் விண்ணப்பம் 
          திருச்செவி வியந்தருள் புரிந்தாயே 
           உளங்கொள் இவ்வடி விம்மையே 
          மந்திர ஒளிவடி வாமாறே....(திருவருட்பா )


நாதவடி வாகிய மஹாமந்த்ர ரூபியே
    நாதாந்த வெட்டவெளியே
  நற்சமய மானபயிர் தழையவரு மேகமே
    ஞானஆ னந்தமயிலே...   

"மஹாமந்திரமாகிய ஓங்கார நாத‌ ஸ்வரூபிணியே!...நாதமுடிவாகிய பேரின்ப வெளியே..நற்சமயமாகிய பயிர் தழைக்கவென அருள் மழை பொழியும் மேகமே !...ஞானானந்த வடிவாகிய மயிலே!..".

( 'நாதாந்த நிலை' யாவது யோகமார்க்கத்தினால் உணரப்படும் ஒரு நிலை.  இது, அந்த மார்க்கத்தை உளமார நம்பி, குருவருளால் அந்த மார்க்கத்தில் செல்வோரே உணரக் கூடியது.. எனினும், கீழ்க்கண்ட பாடல், அந்த நிலை குறித்து விளக்கக் கூடும்.

நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்
ஓதீர் எழுத்தஞ்சும் உள்ளபடி – தீதறவே
அஞ்செழுத்தீ தாகில் அழியுமெழுத் தாய்விடுமோ
தஞ்ச அருட்குருவே சாற்று. (உண்மை நெறி விளக்கம்).

ஆன்மா தன் இயல்பில், பேரின்பத்தில் நிற்கும் நிலையே 'வெட்டவெளி'..இதை திருமூலர் 'சொருகிக் கிடக்கும் துறை' என்கின்றார்.

உருவிப் புறப்பட்டு உலகை வலம் வந்து
சொருகிக் கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக் கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக் கிடக்கும் என் உள் அன்பு தானே.

வெட்டவெளியே பேரின்ப  நிலை. அதில் ஒன்றிவிடுதலே முக்தி.. அத்தகைய வெட்டவெளியாக இருப்பவள் அன்னை..

சமயமாகிய பயிர் தழைப்பதற்கென, காலம் தப்பாது மழை பொழியும் மேகத்திற்கொப்பானவள் அன்னை..

இங்கு 'சமயம்' என்பதை 'இறைநெறி' என்பதாகக் கொள்ளலாம்.. இறைநெறி தழைத்தோங்குமாறு அருள் மழை பொழிபவள் அன்னை..அதாவது,  அத்தகைய நெறியில் செல்வோர்க்கு, அவர் தம் எண்ணம் ஈடேற அருள் மழை பொழியும் மேகம் போன்றவள் அன்னை..

வாதமிடு பரசமயம் யாவுக்கும் உணர்வரிய
    மகிமைபெறு பெரியபொருளே
  வரைரா சனுக்கிருகண் மணியாம் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே..."  இறைநெறியில் செல்லாதார்,  தாம் சார்ந்துள்ள நெறியே பெரிதென்று வாதமிடுவோர் உணர்வதற்கும் அரியவளாக விளங்குகின்ற, மகிமை வாய்ந்த பெரிய பொருளே!.. மலையரசனுக்கு, அவன்தன் இரு கண்ணின் மணியெனத் தோன்றிய மலைவளர் காதலிப் பெண் உமையே!.." என்று அன்னையைப் போற்றுகின்றார் அடிகள்..


பொதுவாகத் தொகுத்துப் பார்க்கும் பொழுது..

"ஓங்கார நாத வடிவானவளே, பிரணவ ஸ்வரூபியே, நாதாந்த வெட்டவெளியாக நிறைந்திருப்பவளே, இறைநெறியாகிய பயிர் தழைக்க வரும் மேகம் போன்றவளே!..  இறைநெறியில் செல்லாது,  தாங்கள் செல்லும் நெறியே உயர்ந்ததென்று வாதிடுவோர் உணரமுடியாத, மகிமை வாய்ந்த பெரிய பொருளே!, மலையரசனின் இருகண்ணின் மணியெனத் தோன்றிய மலைவளர் காதலிப் பெண் உமையே!,  ஐம்பூதங்களால் ஆகிய இவ்வுடலில், இந்திரியங்களாகிய பேய்களும், கோபம் முதலான அறுபகைவர்களாகிய பேய்களும், புத்தி முதலான அந்தகரணங்களாகிய பேய்களும், என் ஆன்ம போத நிலையினை உட்புகுந்து அழித்து, என் வேதனை வளர்க்க வேண்டுமென, பிரம்ம தேவன் விதித்தான்..இந்த துன்பங்களெல்லாம் வீழும்படிக்கு, மவுனமந்திரமாகிய ஓங்காரத்தில் லயிக்கும்படியான மார்க்கத்தை, நீயே என் குருவாக இருந்து, பூரணமாக வழங்கியருள்வாயோ?!" என்று பணிவுடன் விண்ணிப்பிக்கிறார் தாயுமானவடிகள்.

அன்னையைக் குருவாக இருந்து திருவருள் புரியுமாறு வேண்டும் இந்தப் பாடலோடு, தாயுமானவடிகள் அருளிய 'மலைவளர் காதலி', எட்டுப் பாடல்களும் நிறைவுறுகின்றன..

இவ்வரிய பெரும் பணியை எனக்கருளிய அம்பிகையின் திருவடிகளைப் பணிந்து போற்றுகின்றேன்.. எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் சான்றோர் பெருமக்களை வணங்குகின்றேன்.. இதில் ஏதேனும் குற்றங்குறைகள் காணப்படுமாயின், அது என் சிற்றறிவினால் ஏற்பட்டதென்பதால் அவற்றுக்காக மன்னிப்புக் கோருகிறேன்.. சிறப்புகள் அனைத்தும் அம்பிகையின் திருவடிகளுக்கே!..அவளருளாலேயே இது நிகழ்ந்து நிறைவடைந்தது!..

அம்பிகையின் திருவடிகளைப் பணிந்து,

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..