நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 அக்டோபர், 2014

KARWA CHAUTH., KARAKA CHATHURTHI VRATH..(11.10.2014) PART 1.....காரக சதுர்த்தி விரதம் (கர்வா சௌத்)...பகுதி 1.


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!...

விரதப் பதிவுகள் போட்டு கொஞ்சம் நாளானதால், இன்னிக்கு ஒரு விரதப் பதிவு!.. நாம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்கள், அவற்றின் வழிமுறைகள், கதைகள் எனப் பார்த்து வருகிறோம் இல்லையா.. அந்த வரிசையில், இன்று கொண்டாடப்படும் ஒரு விரதம் பற்றி பார்க்கலாம்.. வழக்கமாக இந்தி திரைப்படங்கள், தொடர்கள் பார்ப்பவர்களுக்கு இந்த விரதம் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்..  பெண்கள், மாலை வேளையில் சந்திரனை, மாவு சலிக்கும் சல்லடையால் நோக்கி வணங்கும் காட்சி பெரும்பாலனவற்றில் இடம் பெற்றிருக்கும். அந்த விரதம் தான் நாம் இன்று காணப் போவது..' காரக சதுர்த்தி விரதம்' என்றும் சொல்லப்படும் இது 'கர்வா சௌத்' என்று வடமாநிலங்களில் பிரபலமாக வழங்கப்படுகின்றது..
இது, தீபாவளிக்கு ஒன்பது நாட்கள் முன்னதாக வரும் சதுர்த்தி திதியில் அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது.. தேய்பிறை சதுர்த்தியாக வருவதால் சங்கடஹர சதுர்த்தி விரதமும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது..

ஏன்?!..

ஒவ்வொரு விரதத்திற்கும் ஒரு காரணம் உண்டல்லவா?!..இந்த விரதம், மனைவி, கணவனின் நல்வாழ்வுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் அனுஷ்டிக்க வேண்டுவது..பெரும்பாலான வடஇந்திய மாநிலங்களில், குறிப்பாக, உத்திர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் மஹாராஷ்டிராவின் சிலபகுதிகளிலும் இது காரக சதுர்த்தி விரதமென்று அனுஷ்டிக்கப்படுகின்றது.. வட இந்தியர்களின் பஞ்சாங்கப்படி இது கார்த்திகை மாதம்.. மஹாளய அமாவாசை கழிந்ததும் அவர்களுக்கு கார்த்திகை துவங்கி விடுகிறது.. கார்த்திகை கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் இது அனுஷ்டிக்கப்படுவதாலும், நன்மைகள் பல நடக்க காரகத்துவம் (காரணமாக இருப்பது) வகிக்கும் விரதம் என்பதாலும் இது 'காரக சதுர்த்தி விரதம்' என்று அழைக்கப்படுகின்றது.

விரத வழிமுறைகள், நோக்கம் ஒன்று தான் எனினும்,  காரக சதுர்த்தி விரதத்தன்று வழிபடப்படும் கடவுள் விநாயகர்.  'கர்வா சௌத்' விரதமாக இதைக் கொண்டாடும் பகுதிகளில்,  விநாயகரோடு, கௌரி தேவி, சிவ பார்வதி ஆகியோரும், அவரவர் கொண்டிருக்கும் வழக்கப்படி வணங்கப்படுகின்றனர்.

காரக சதுர்த்தி விரதம் எடுத்துக் கொண்டவர்கள், பன்னிரண்டு அல்லது பதினாறு வருடங்கள் தொடர்ந்து செய்து விட்டு, விரதத்தை உத்யாபனம் ( நிறைவு செய்வது) செய்து விடுவது வழக்கம்..

கர்வா சௌத்.

கர்வா என்றால் (நீர் அல்லது தானியங்களால் நிரம்பிய) மட்பாண்டம் . சௌத் என்றால் நான்கு. அதாவது பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது தினமான சதுர்த்தி தினத்தில் வருவதால் இந்த விரதத்துக்கு 'கர்வா சௌத்' என்று பெயர்.. 

முற்காலத்தில் போருக்குச் சென்ற கணவன்மார்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதாலும், மட்பாண்டங்களில் சேமித்து வைத்திருக்கும் தானியங்கள் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதோலோடும் இது கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது..

முற்காலத்தில், போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாததால், வெகு தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களை உற்றார் உறவினர்கள் அடிக்கடி சென்று பார்க்க முடியாது. அம்மாதிரி சமயங்களில், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களோடு ஒன்று கூடி கொண்டாடப்படும் இம்மாதிரி பண்டிகைகளே அவர்களுக்கு ஒரு நல்ல நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து, ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் வாய்ப்பை நல்கியது.

வழிமுறைகள்:

இந்த விரதம் திருமணமான பெண்கள் கடைப்பிடிக்கும் விரதம் என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும்.. இந்த விரத தினத்தன்று, விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்திற்கு முன் உணவு உட்கொள்ள வேண்டும். இது 'சார்கி' என்று அழைக்கப்படுகின்றது.

இதன் பின், நாள் முழுவதும் நீர் கூட அருந்தாமல் விரதமிருக்கிறார்கள்.. விரதத்துக்கான பொருட்களை சேகரித்தல், நிவேதனங்கள் செய்தல், உறவினர்கள், நண்பர்களை சந்தித்து ஆசி பெறுதல் என்பதாக நாள் முழுவதும் கழிகிறது..  நண்பகலுக்கு மேல்  பூஜை துவங்குகின்றார்கள்

பூஜை துவங்கும் முன்பாக, பெண்கள், தங்களை அழகாக, மங்கலப் பொருட்கள், ஆடை அணிமணிகள் கொண்டு அலங்கரித்துக் கொள்கிறார்கள். பின் பூஜை பொருட்களை எடுத்துக் கொண்டு, கோயில்களிலோ அல்லது பூஜை ஏற்பாடு செய்திருக்கும் பொது இடங்களிலோ கூடுகின்றார்கள்.

பூஜையின் போது, மட்பாண்டங்கள் மற்றும் அகல்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன்.. விநாயகரின் உருவகமாக மட்பாண்டம் பயன்படுத்தப்படுகின்றது.. மட்பாண்டத்தில் நீர் அல்லது  முழு கோதுமை போன்ற தானிய வகைகள் நிரப்பியும், அதன் மேல் பிரதிமைகள் வைத்தும் அவரவர் வழக்கப்படி பூஜிக்கிறார்கள். விநாயகரோடு, பசுஞ்சாணத்தினால் ஆன கௌரி தேவியின் பிரதிமையும் வைத்துப் பூஜிக்கப்படுகின்றது..பார்வதி தேவியின் பிரதிமையும் வைத்துப்  பூஜிக்கிறார்கள்..பூஜை நடக்கும் இடத்தில் இவையனைத்தும் தயார் செய்யப்படுகின்றன.

பூஜை நடக்கும் இடத்தில் பெண்கள் கூடிய பின், வட்டமாகவோ குழுவாகவோ அமர்ந்து கொண்டு பூஜை துவங்குகின்றார்கள். பூஜைக்கு முன்பாக, சந்திரனுக்கு அர்க்யம் கொடுக்கவென, உலோகத்தால் ஆன பாத்திரங்களில் புனித நீர் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள்.. அவரவர் தட்டில் இருக்கும் விளக்குகள் ஏற்றி, ஊதுவத்தி ஏற்றுகிறார்கள்..

வயதில்  மூத்த பெண்மணி, விரதக் கதையைச் சொல்கிறார். அதன் பின், பூஜைப் பொருட்களுடன், பழங்கள், தானியங்கள், இனிப்புகள் முதலியவற்றை நிவேதனம் செய்து பூஜித்த பிறகு, நிவேதனம் செய்தவற்றில் ஒரு பகுதியையும், பூஜைப் பொருட்களையும் விரதக் கதை கூறிய பெண்மணிக்கு வழங்கி ஆசி பெறுகிறார்கள்.. இந்த பண்டிகைக்கென இருக்கும் பூஜைப் பாடல்களைப் பாடுகின்றார்கள்.  இந்த நிகழ்வு, ஃபெரா என்றழைக்கப்படுகின்றது.. இது நிறைவுற்றதும், சந்திரோதயத்துக்காக காத்திருக்கிறார்கள்.

சந்திரோதயம் ஆன பின், சந்திரனின் பிம்பத்தை, நீர் நிரம்பிய பாத்திரன் வழியாகவோ அல்லது சல்லடையின் மூலமாகவோ அல்லது துப்பட்டாவின் வழியாகவோ பார்த்து வணங்குகின்றார்கள். சந்திரனுக்கு அர்க்யம் வழங்கி, தம் கணவனின் ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்திக்கிறார்கள். பின் அதே முறையில், தங்கள் கணவனின் முகத்தையும் பார்க்கிறார்கள்.

கணவன், மனைவிக்கு முதலில் நீர் அளித்து அருந்தச் செய்கிறான். அதன் பின் இனிப்பை வழங்கி, விரதத்தை நிறைவுறச் செய்கிறான்.

இந்த விரதத்தின் போது தனித்தன்மை வாய்ந்த சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.. இவற்றுள் முக்கியமானவை, பூஜைப்பொருட்களை (நிவேதனத்துக்கான இனிப்புகள் உட்பட) தயாரித்தல், பூஜைப் பொருட்கள் வைக்கும் தட்டு அலங்கரித்தல்  முதலியன..

பூஜைத் தட்டு அலங்கரிப்பதில், பெண்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியே உண்டு.. பிரபல நிறுவனங்கள், இது குறித்த போட்டிகளை வைத்து, பரிசளித்து மகிழ்கின்றன..பூஜைத் தட்டில், விதவிதமான வண்ணங்கள், பூச்சுகள், அல்ப்பனா எனப்படும் கோலங்கள் என்று பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.. கற்கள், சிறு கண்ணாடிகள் என்று ஒட்டி அழகுபடுத்துகிறார்கள்.. பெண்கள், தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் அழகிய முயற்சி இது!.. 

அழகாக அலங்கரிக்கப்பட்ட தட்டில், சிந்தூரம், மஞ்சள், உலர் பழ வகைகள், சிறு விளக்கு, புனித நீர், மருதாணி, சிறு கிண்ணங்களில் வைக்கப்பட்ட இனிப்பு வகைகள் போன்றவை கட்டாயம் இடம் பெறும். தட்டு, பித்தளையாலோ வெள்ளியாலோ அவரவர் சௌகரியத்துக்கு தகுந்தபடி செய்ததாக இருக்கும்..தட்டின் அளவுக்குத் தகுந்தபடியும், பூஜிப்பவர்களின் சௌகரியத்துக்கு தகுந்தபடியும் அதிக எண்ணிக்கையிலான பூஜைப் பொருட்கள் இடம் பெறும்.

சில பகுதிகளில் விரதமிருக்கும் பெண்கள் வீட்டு வேலைகள் செய்ய வேண்டுவதில்லை.. விரதமிருக்கும் வேளையில் களைப்புற்றிருக்கும் பெண்களின் நலனுக்காக இம்முறை கடைபிடிக்கப்படுகின்றது..  சில பகுதிகளில் மங்கலப் பொருட்கள் நிரம்பிய பூஜைத் தட்டுக்களை அதிக அளவில் செய்து, ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது (நாம் தாம்பூலம் தருவது போல்). மட்பாண்டங்களையும் வழங்கிக் கொள்கிறார்கள்.. பூஜைக் கதையும் பிராந்தியத்துக்கேற்றவாறு மாறுபடுகின்றது.. சில பகுதிகளில், இது பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் பூஜையாக இருக்கிறது.. திருமண உடைகளை மட்டுமே அணிந்து பூஜிக்கும் வழக்கமும் இருக்கிறது.

இது போல் பல்வேறுபட்ட சடங்கு முறைகளுடன் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்தின் கதைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

(தொடரும்)

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..