அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!..
கௌரி விரதங்களைப் பற்றி நாம் சில பதிவுகளில் பார்த்து வருகிறோம்..இந்தப் பதிவில், 'ஆரண்ய கௌரி விரதம்/ஆரண்ய சஷ்டி விரதம், பூஜை' ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்..
காடு, மலை, நதி என அனைத்தையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நமது மரபு.
அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது.. அந்த வகையில், வன ரூபமாக உறைந்திருக்கும் தேவியை ஆராதிப்பதே 'ஆரண்ய கௌரி விரதம்'.'ஆரண்யம்' என்றால் காடு..
அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது.. அந்த வகையில், வன ரூபமாக உறைந்திருக்கும் தேவியை ஆராதிப்பதே 'ஆரண்ய கௌரி விரதம்'.'ஆரண்யம்' என்றால் காடு..
இது ஒவ்வொரு வருடமும், சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி, ஜேஷ்ட மாதம், சுக்ல(வளர்பிறை) பக்ஷம் சஷ்டி திதியில் கொண்டாடப்படுகின்றது.. நம் தமிழக வழக்கத்தின்படி, வைகாசி சுக்ல சஷ்டி திதி எனக் கொள்ளலாம்.. இவ்வருடம், 4/6/2014 அன்று ஆரண்ய கௌரி விரதம் அனுசரிக்கப்படுகின்றது.. இது 'வன கௌரி விரதம்' எனவும் அறியப்படுகின்றது.. சஷ்டி திதியில் வருவதால், 'ஆரண்ய சஷ்டி விரதம்' என்றும் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தில் இது வனகௌரி விரதம் எனவும், இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களில் 'ஆரண்ய சஷ்டி' எனவும் அனுசரிக்கப்படுகின்றது..
விரதக் கதை:
ஒவ்வொரு விரதமும் தோன்றியதன் காரணமாக ஒரு புராணக் கதை உள்ளது.. சஷ்டி தேவியைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு புராணக் கதை இங்கு இடம் பெறுகிறது..
கதையைப் பார்ப்பதற்கு முன்னால், சஷ்டி தேவியைக் குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சஷ்டி தேவி, மூலப்ரகிருதியான சக்தி தேவியின் ஆறு அம்சமானவள் பிரம்மதேவனின் மானஸபுத்திரி. மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றியதால், விஷ்ணு ஸ்வரூபிணி. புத்ரபாக்யம் தருபவள். மஙகள சண்டிகை என்று போற்றப்படுபவள். குழந்தைகளுடன் இருப்பவள். குழந்தைகளுக்கு வரும் நோய்களைப் போக்குபவள். குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை நல்குபவள். பதினாறு மாத்ருகா தேவியருள் பிரசித்தமானவள். சித்த யோகினி. முருகப்பெருமானின் தேவியாகிய தெய்வானை அம்மையே சஷ்டி தேவி..
மக்கட்பேற்றை நல்குபவள்.. குழந்தைகளுக்கு வரும் நோய்கள், ஆபத்துகளைப் போக்குபவள்.. நல்ல விளைச்சலை அருள்பவள். பூனையை வாகனமாக உடையவள்.. தன்னை அன்போடு ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் நல்குபவள்.. தேவி மகாத்மியம், பிரம்ம வைவர்த்த புராணம் ஆகியவை, தேவியைப் புகழ்ந்து போற்றுகின்றன.
இனி விரதக் கதை:
முற்காலத்தில், ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி, அக்கம்பக்கத்து வீடுகளில், உணவைத் திருடி உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாள்... அந்த வீட்டிலுள்ளோர், உணவைக் காணவில்லை என்று தேடும் போது, ஒரு பூனை வந்து உண்டு விட்டுச் சென்றதாகப் பொய் கூறி வந்தாள். இதனால் கிராமவாசிகள், பூனைகளைக் கண்டால் வெறுக்கத் தொடங்கினர்.. விரட்டவும் தலைப்பட்டனர்... இதனால் கோபமடைந்த பூனை ஒன்று, அந்தப் பெண்மணியின் ஒவ்வொரு குழந்தையையும், பிறந்தவுடன் எடுத்துச் சென்று, சஷ்டி தேவியின் கோயிலில் மறைத்து வைத்தது..
மிகவும் மனமுடைந்த அந்தப் பெண்மணி, தன் தவறை எண்ணி வருந்தினாள்.. மனமுருகி, சஷ்டி தேவியின் திருக்கோயிலில், தன் குழந்தைகள் கிடைக்கப் பிரார்த்தித்தாள். தன் தவறுக்கு மன்னிப்பும் கோரினாள்.. தவறை உணர்ந்த அந்தப் பெண்மணியின் முன்னால் சஷ்டி தேவி தோன்றினாள்.
ஒரு பூனையின் உருவம் வரைந்து, அதனுடன் சஷ்டி தேவியின் திருவுருவத்தையும் வரைந்து, பூஜித்து வழிபட, அவள் குழந்தைகள் கிடைக்கும் என்று அருளினாள் தேவி..
முறைப்படி விரதமிருந்து, பூஜை செய்து வழிபட்ட அந்தப் பெண்மணி, தன் குழந்தைகளைத் திரும்பப் பெற்றாள்.. அதோடு, தன் தீய பழக்கத்தை விட்டொழித்து, சுறுசுறுப்பாகவும், பிறருக்கு உதவியாகவும் வாழத் தொடங்கினாள். அன்றிலிருந்து, குழந்தைகளைக் காப்பதற்காக, தாய்மார்கள், இந்த விரதத்தை மேற்கொள்ளத் துவங்கினார்கள்.
பூஜை செய்யும் விதம்:
இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் சஷ்டி தேவியும், ஆந்திரப் பிரதேசத்தில் கௌரி தேவியும் பூஜிக்கபடுகின்றார்கள்..
பொதுவாக,அன்னையின் பிரதிமை/அல்லது திருவுருப்படத்தை , அடர்ந்த வனப் பகுதிகளில், கடம்ப மரத்தின் அடியில் வைத்து, ஷோடசோபசார பூஜைகள் செய்து, இயன்ற நிவேதனங்கள் செய்து வழிபடுகின்றார்கள்.. வனப்பகுதிகளில் செய்ய இயலாதவர்கள், இல்லங்களில், கடம்ப மரக் கிளைகளை வைத்து, அதன் அடியில் அன்னையின் பிரதிமையை வைத்துப் பூஜிக்கிறார்கள்..
விரதம் இருக்கும் தினத்தன்று காலை நீராடி, முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.. பெண்களே இந்த விரத பூஜையைச் செய்வதால், அவர்களே சங்கல்பம் செய்து கொள்கிறார்கள்.. அன்று முழுவதும் பால், பழங்கள் மட்டுமே உண்டு, உபவாசம் இருக்கிறார்கள். காலை அல்லது மாலை வேளையில், பூஜை செய்ய உகந்த நேரத்தில் பூஜை துவங்குகிறார்கள். முறைப்படி பூஜித்து, அன்னையை வணங்கி வழிபடுகின்றார்கள்.. சில பகுதிகளில் நோன்புச் சரடு கட்டிக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.. பூஜை நிறைவில், கட்டாயம், ரிக் வேதத்தில் இருந்து 'அரண்ய சூக்தம்' பாராயணம் செய்கிறார்கள்.
இவ்வாறு முறைப்படி பூஜிக்க, அன்னையின் அருளால், மக்கட்பேறு கிட்டும். குழந்தைகள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ்வார்கள்.. தானிய விளைச்சல் பெருகி, சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்.
விந்த்யவாஸினீ பூஜை:
மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மற்றும் இந்தியாவின் மத்தியப் பகுதி மாகாணங்களில், இந்த தினம், 'விந்த்யவாஸினீ பூஜை' என்று கொண்டாடப்படுகின்றது.
VINDHYAVASINI DEVI |
விந்த்யாசலத்தில் வாசம் செய்யும் அன்னை ஸ்ரீவிந்த்யவாஸினீயின் பூஜை, மிகச் சிறப்பாக, பெரிய அளவில் நடைபெறும் தினம் இது.. விந்த்யாசலம், ஒரு சக்தி பீடமாகும்.. அன்னையின் நிதம்பம்(பின்பாகம்) விழுந்த இடமாக இது அறியப்படுகின்றது. அதனால் அன்னையின் ஒரு திருநாமம், 'நிதம்பை' என்பதாகும்.
அன்னை முப்பெருந்தேவியர் வடிவினள்.. வாமன புராணத்தில், அன்னை 'சசி முகி' (பூர்ண சந்திரனைப் போன்று அழகான முகமுடையவள்) என்று போற்றப்படுகின்றாள்..பத்ம புராணத்தின்படி, அசுர சம்ஹாரம் செய்த தேவியை, இந்திரன் பக்தியுடன் பூஜிக்கிறான்.. அதனால் மனமகிழ்ந்த தேவி, இந்திரனுக்கு வரமளிப்பதாக அருள, இந்திரனும், அன்னை விந்தியத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று வரம் கேட்கிறான்..அன்னையும் 'அவ்வாறே ஆகுக' என்று மகிழ்ந்து வரமளிக்கிறாள்..அன்னை அசுர சம்ஹாரத்திற்கு பின், ஓய்வு கொண்ட இடம் இது.
உத்திரப்பிரதேசம், மிர்ஸாபூரில் அமைந்துள்ள அன்னையின் திருக்கோயிலில், பூஜை தினத்தன்று, விசேஷ பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள்..அன்னையின் மகிமைகளைக் கூறும் விதமான கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்தப்படுகின்றன.. விந்த்யவாஸினீ தேவியின் பிரதான திருவிழா, நவராத்திரியே.. ஆயினும், 'விந்த்யவாஸினீ பூஜை'யும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தில், புராதனமான கஜாலி பாட்டுக்களுக்கான போட்டி, ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்றது. இது ஒரு மிகச் சிறப்பான நிகழ்வாகும்.
இல்லங்களிலும், அன்றைய தினம், அன்னையின் திருவுருவப்படத்தை வைத்து, பூஜைகள் நடத்தி, சிறப்பாக வழிபடுகின்றனர்.
அன்னையை வழிபடுவோருக்கு, நித்தமும் பொன்னாளே!.. அம்பிகையைத் துதித்து வணங்கி,
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்களுக்கு நன்றி:கூகுள் படங்கள்.
பூஜை செய்யும் விளக்கம் உட்பட அனைத்தும் மிகவும் சிறப்பு அம்மா... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி டிடி சார்!
நீக்குவிரதங்கள் பற்றிய விளக்கங்கள் அருமை..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி அம்மா!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தாலும் நெஞ்சில்
பதிலளிநீக்குநீங்கா இடம் பிடித்தன இந்த பூஜை முறைகள்
வாழ்க பலமுடன்
வளர்க நலமுடன்