நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

DIWALI GREETINGS!.....தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!....


அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம்!.

இந்த வருட தீபாவளி தினத்தில், நம் அனைவர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் நிறைய‌, இறைவனை பிரார்த்திக்கிறேன்!... 

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

தீபாவளி குறித்த முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்கவும்...


1. தீபாவளி , (தீபாவளி கொண்டாடும் பாரம்பரிய முறை குறித்த பதிவு!).


3. ல‌க்ஷ்மி குபேர பூஜை.

தீபாவளியைக் கொண்டாடுவதில், நம் நாடெங்கும் விதவிதமான சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு சம்பிரதாயமும் ஒரு பிரத்தியேகமான காரணத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றுள் சிலவற்றை, இப்போது பார்க்கலாம்.

இல்லத்தை சுத்தப்படுத்தி அலங்கரித்தல்:

இதை அநேகமாக எல்லாப் பகுதியினரும் செய்கிறோம் என்றாலும் வட இந்தியர்கள் இதில் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்வது வழக்கம். சுத்தமான இல்லத்திலேயே லக்ஷ்மி தேவி எழுந்தருளுவாள் என்பதால் இவ்வாறு செய்கிறோம். நம் உள்ளத்திலிருக்கும் பொறாமை, கோபம் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்ய வேண்டுவதன் வெளிப்பாடே இது.. தூய உள்ளமே இறைவன் வாழும் இல்லம் அல்லவா?!.

வீடு முழுவதும் தீபங்களால் அலங்கரித்தல்:

தீப லக்ஷ்மியின் வரவால் இல்லம் பொலிவு பெறும். வீடு முழுவதும் ஒளி வெள்ளமாகத் திகழுவது, வருங்காலம் ஒளிமயமாக விளங்கப் போவதைக் குறிக்கும் என்று நம்புகிறார்கள். உள்ளத்திலிருந்து அஞ்ஞான இருள் விலகி,  ஞான ஒளி பரவப்போவதன் குறியீடு இது..

பகடை, தாயக்கட்டம், சீட்டு முதலியன விளையாடுதல்:

வட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த பழக்கம் இருக்கிறது. தீபாவளி இரவில் இந்த விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள்.. பார்வதி தேவி, பரமேஸ்வரனுடன் தீபாவளி இரவு பகடை விளையாடுவதாக ஐதீகம். அதனால், தீபாவளி இரவு இந்த விளையாட்டுக்களை விளையாடுவதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு லக்ஷ்மி தேவி ஆண்டு முழுவதும் வளமருள்வாள் என்பது நம்பிக்கை..

ஆனால், வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டுப் போல். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததே வாழ்க்கை..   வெற்றி தோல்வியை சமமாகப் பாவிக்கும் மனப்பாங்கு, இம்மாதிரி விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் நமக்குக் கிட்டும். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாகவே கொண்டால், வாழ்வு சிறக்கும் என்பதை விளக்கும் முகமாகவே இந்த வழக்கம் வந்ததென்று தோன்றுகிறது.

முன்னோர்கள் வழிபாடு:

தீபாவளி, அமாவாசை தினத்தன்று வந்தால், நாம் முன்னோர் வழிபாடு நிகழ்த்துகிறோம். வட மாநிலங்களில் ஒன்றான ஒரிஸாவில், முன்னோர்கள், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று தம் இல்லங்களுக்கு வந்து ஆசீர்வதிப்பதாக நம்புகிறார்கள்.. அதற்காக, ஒரு பெரிய மூங்கில் கழியை, வீட்டு வாசலில் நட்டு வைத்து, மட்பாண்டங்களில் அகல் விளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.. வேறு சில சம்பிரதாயங்களும் முன்னோர் வழிபாட்டுக்காக பின்பற்றுகிறார்கள்.

சம்பிரதாயங்கள் எவ்வாறாயினும் பண்டிகையும் அது தரும் சந்தோஷமும் ஒன்று தானே!.. நாமும் நரகசதுர்த்தசி ஸ்நானம் எனப்படும் தீபாவளி தின அதிகாலை எண்ணைக் குளியல் செய்து, புத்தாடை உடுத்தி, இறைவழிபாடு செய்து, இனிப்புகள் உண்டு, பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று, உறவினர்கள், நண்பர்களுடன் கூடிக் களித்து, எளியோருக்கு உதவி, பாதுகாப்பாக பட்டாசு வெடித்து, இன்பமுடன் கொண்டாடுவோம் இனிய தீபாவளி!.

அனைவருக்கும் மீண்டும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..