நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 23 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG..# 6....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்.. பாடல் # 6.

திருச்சிற்றம்பலம்:

பாடல்:

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"தாமரை மொட்டு போன்ற, அணிமணிகளை அணிந்த தனங்களையுடைய பெண்களே!...உமாதேவியாரை, தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டருளியவனும், திருவுத்தரகோசமங்கையில் உள்ள, மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடாமுடியை உடையவனும்,  நாய்க்கு ஒப்பான எம்மை,


அடியாருள் ஒருவனாக வைத்து சீராட்டி, ஆட்கொண்டு, தீயினை ஒத்த எம் முன்வினை, எம்மை மேலெழுந்து பற்றாதபடி, யாம் ஞானத்தோடு விளங்க, பிறவித்தளையை அறுப்பானுமாகிய இறைவனது திருச்செவிகளில் ஆடும் குண்டலங்களைப் பாடி, அன்பால் கசிந்து உருகி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோமாக"

சற்றே விரிவாக:

இந்தப் பாடலில், மகேசுவர மூர்த்தங்களில் ஒன்றான 'அர்த்தநாரீஸ்வர' மூர்த்தம் போற்றப்படுகின்றது.. மாதொரு பாகனை,

பாகம் பெண்ணுருவானாய் போற்றி (போற்றித் திருவகவல்)

எனவும்,

தோலும் துகிலுங்
குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும்
பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க
வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக்
குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. (திருக்கோத்தும்பி) எனவும்,

பல பாடல்களில்   புகழ்ந்து போற்றுகின்றார் வாதவூரார்.

இறைவனது அறக்கருணையினாலேயே உயிருக்கு 'அருட்சுத்தி' உண்டாகிறது.. இறைவனின் கருணையின் வடிவே சக்தி என்பார் ஸ்ரீசங்கரபகவத்பாதர். அம்மையும் அப்பனும் ஒன்றாக இணைந்து காணும் அர்த்தநாரீஸ்வர வடிவம், சக்தியோடு இணைந்து, ஐயன் நடத்தும் உலக இயக்கத்தையும், சக்தியும் சிவமும் ஒன்றே என்னும் உண்மையையும் உலகுக்கு உணர்த்துகிறது. அம்மையப்பனின் அறக்கருணையைப் போற்ற, 'மாதாடு பாகத்தன்' என்றார்.

கொன்றை, இறைவனுக்கு மிகவும் உகந்த மலர்.  ஆனாய நாயனார், கொன்றை மரத்தை, எம்பிரானாகவே எண்ணி, உருகி, குழலிசைத்து, சிவலோகம் சேர்ந்தவர். கொன்றை மலர் மாலையை சடைமீது சூடியவன் எம்பிரான்.. 'தாதாடு கொன்றை' என்பது மகரந்தங்கள் நிறைந்திருக்கும் கொன்றை எனப் பொருள்படும்.

ஞானசம்பந்தப் பெருமான், கொன்றை மலரை திருமலர் என்றே போற்றுகின்றார். காஞ்சிபுரத்திலுள்ள ஆலஞ்சேரியில் திருமலர் உடையார் எனும் பெயரில் ஈசன் கோயில் கொண்டுள்ளார்.

திருமலர்க்கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை
நிருமலன் எனதுஉரை தனதுஉரை யாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்
கருமலர்க் கமழ்கனை நீண்மலர்க்குவளை
கதிர்முலை இளையவர் மதிமுகத்து உலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன்னெழில்கொள்வது இயல்பே.(ஞான சம்பந்தப் பெருமான்).
‍ 
உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென்.....திருவுத்தரகோசமங்கையிலுள்ள, மகரந்தங்கள் நிறைந்த கொன்றை மாலையை சடைமுடியில் சூடிய எம்பிரான், நாய்க்குச் சமமான தன்னை, அடியவர்களுள்   ஒருவனாக இருத்தி சீராட்டிய பான்மையை புகழ்ந்துரைக்கிறார் வாதவூரார்.

இங்கு மட்டுமல்லாது பல்வேறு பாடல்களில், தம்மை 'நாயேன்' என்றோ, 'நாயடியேன்' என்றோ வாதவூரார் பெருமான் குறிப்பிடுவதைக் காணலாம்..இதன் காரணம், தம்மை எளிமைப்படுத்திக் கொண்டு, இறைவனையும் அடியார்களையும் உயர்த்திப் போற்றுவதற்காக‌ அன்றி வேறில்லை.. அனைத்துயிரினுள்ளும் உறைவது இறைவனே என்றுணர்ந்தவர் வாதவூரார்.. தாமே புல் முதலான பல்வேறு உயிரினங்களாகப் பிறவி எடுத்ததை (புல்லாகி, பூடாய், புழுவாய் மரம் ஆகி....) சிவபுராணத்தில் உரைக்கிறார். 

இவ்வாறு தம்மை ஆட்கொண்ட எம்பிரான், 'தம் தொல் பிறவித் தீது ஓடா வண்ணம், திகழப் பிறப்பறுத்தான்' என்றார்.

பிறவித் தீது என்றது 'ஆகாமிய வினையை'. கன்மம்(வினை) சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்னும் மூன்று நிலைப்பாடுகளை உடையது..இப்பிறப்பில் வந்து பயன் கொடுக்கும் வினைகள் பிராரத்தம் எனவும், அவற்றை நுகரும்போது அதாவது அனுபவிக்கும் போது செய்யும் புது வினைகள் ஆகாமியம் எனவும் சொல்லப்படும்..பிராரத்த வினையைத் தொடர்ந்து ஆகாமிய வினை  வருதலால், வினையானது தொடர்ச்சியாய் இடையூறின்றிச் செல்கிறது.

இறைவன் கருணையால், திருவடி ஞானம்/திருவருள், உயிரினுள் திகழும் போது, இவ்வினைத் தொடர், மேலும் மேலும் கிளைக்காதொழியும்.

இது எவ்வாறு நடைபெறுகின்றதென்றால்,   திருவடி ஞானம் பெற்ற ஒருவர், தம்மையும், பாசங்களின் இயல்பையும் உள்ளவாறு உணர்ந்து, தாம் செய்வனவெல்லாம், இறைவன் செயலே என்ற நினைவோடு செய்து, அவனது அருள்வழியில் நடக்கிறார். ஆதலால், அவர் எந்த உடம்பில் நின்று எந்த வினையைச் செய்தாலும் அவை ஆகாமியம் ஆவதில்லை..

நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி 
நாம் அல்ல நாமும் அரனுடைமை -- ஆம் என்னில் 
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை 
முற்செய்வினையும் தருவான் முன் (சிவஞான போதம்).

இவ்விதம், இறைவன், திருவடி ஞானம் அருளி, பிறவித் தளையை அறுத்தான்.  அத்தகைய சிறப்பு வாய்ந்தவனது திருச்செவிகளில் திகழும் குண்டலங்களை, அன்பால் கசிந்து உருகிப் பாடி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோம் என்கிறார் வாதவூரார்..

இறைவன், 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'. ஆகவே, இறைவனைப் போற்றிப் பாடும் போது, அன்பால் கசிந்துருகிப் பாடவேண்டுவது கூறப்பட்டது. காதணி, இறைவனுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பான அணிகலனாக கருதப்படுவது மரபு. அதையொட்டி, 'இறைவனது காதில் ஆடும் குண்டலங்களைப் பாடுக' என்றார்.

'தோடுடைய செவியன்' என்று ஆளுடையபிள்ளையாரும் இவ்விதம் இறைவனைப் போற்றுவதை, நாம் இங்கு தியானிக்கலாம்.

இறைவனது ஊரையும், கோயிலையும் பாடுவதைப் போல், இறைவனது அணிகலன்களைப் பாடுவதும் சிறப்புடையதென்பது இதனால் உணர்த்தப்பட்டது..

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. உலகுக்கு உணர்த்தும் தத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் அம்மா...

    சிறப்பான பகிர்வுகளை தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..