நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 22 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL...SONG # 5.....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருப்பொன்னூசல்....பாடல் # 5.

திருச்சிற்றம்பலம்!..

பாடல்:

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பொருள்:

"அழகிய தனங்களையுடைய பெண்களே!!.. 'இறைவன், ஆணோ, பெண்ணோ, அலியோ..' என்று அறிவதற்காக, அயனும் மாலும் தேடியும் கண்டடைய முடியாத கடவுளாகிய எம்பிரான், தன் தனிப்பெருங்கருணையால், தேவர் கூட்டம் தோற்று அழியாதபடிக்கு


அவர்களை ஆட்கொண்டருளி,  பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தினை  உணவாகக் கொண்டருளினான். அவ்விதம் அருளியவனும், வளைந்த பிறையை தன் சடைமுடி மேல் தரித்த, உத்தரகோசமங்கையிலுள்ள கூத்தனுமாகிய இறைவனது குணத்தைத் துதித்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோமாக"

சற்றே விரிவாக:

ஒரு சமயம், ஐயன்,  அயனும் மாலும் தம்மைத் தேடிக் கண்டடையும் பொருட்டு, திருவண்ணாமலையில், சோதி வடிவாக நின்றருளினான்.. இதனையே 'ஆணோ அலியோ அரிவையோ  என்றிருவர் காணக் கடவுள் ' என்றார்.. சோதி வடிவினனான இறைவன், ஆண், பெண், அலி முதலிய வேற்றுமைகளைக் கடந்த அருவுருவானவன்..இருவர் என்றது அயனையும் மாலையும்.. 'அவர்களாலேயே காண இயலாதவன்' என்று சொன்னதன் மூலம் இறைவன் காட்சிக்கு அரியன் என்பது புலனாயிற்று...

திருவுளம் உகந்து, பாற்கடலில் தோன்றிய நஞ்சை அருந்தியது, ஐயனது அறக்கருணைக்குச் சான்றாகச் சொல்லப்படுகின்றது.. பாற்கடலில் ஆலகால விடம் தோன்றியதும், அஞ்சி ஓடிய தேவர்கள், தோற்று அழியாதவாறு, தன் தனிப்பெருங்கருணையால் அவர்களை ஆட்கொண்டு, நஞ்சை உணவாகக் கொண்டான் எம்பிரான். இதையே,

"பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென்தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி 
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ"(திருப்பூவல்லி)

என்றும் போற்றுகின்றார் வாதவூரார். 

இங்கு 'நாணாமே' என்றது 'விடத்தினால் தோற்று அழியாதிருக்கும்படியாக ' என்னும் பொருளில் சொல்லப்பட்டது..விடத்திற்கு அஞ்சி ஓடி வந்த தேவர்களை இகழாது, தம் பெருங்கருணையால் அவர்களுக்கு அபயம் அளித்து, ஆலகால விடத்தைத் தாமே உவந்து ஏற்றார்..ஆதலின், இப்பொருள் கூறப்பட்டது.

அவ்விதம் அறக்கருணை கொண்டு அருளிய எம்பிரானே திருவுத்தரகோசமங்கையுள், பிறைமதி சூடி எழுந்தருளியிருக்கிறார் என்றார்.

'பிறை மதி'யும் இறைவனின் அறக்கருணையைப் புலப்படுத்துகிறது. தக்கனால் சாபம் பெற்ற சந்திரன், இறைவனின் பெருங்கருணையால் விமோசனம் பெற்று, இறைவனால் சென்னியில் சூடிக் கொள்ளப்படும் பேறும் பெற்றான்.

இறைவனது சென்னியில் இருப்பது வளைந்த, பிறைச் சந்திரன். பொதுவாக, இறை மூர்த்தங்களின் சிரத்தில் பிறைச் சந்திரன் ஒளிர்வது ஞானத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகின்றது.. இறைவனின் திருவடிவங்களில், 'சந்திரசேகர மூர்த்த'மும் ஒன்று. சந்திரசேகர மூர்த்தம், போக மூர்த்தங்களுள் ஒன்றாயினும், யோகியருக்கு யோகமும் போகியருக்கு போகமும் அருளும் பெம்மான் அவன்.

பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று 
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளுந் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.(ஞான சம்பந்தப் பெருமான்).

'கூத்தன்' என்பது பெருமானது சிறப்பு வாய்ந்த திருநாமங்களுள் ஒன்று. இறைவன் ஆடும் அருட் கூத்தே இப்பிரபஞ்ச இயக்கம்.. தில்லையில் எம்பெருமான், இப்பிரபஞ்ச இயக்கத்தையே தன் திருக்கூத்தாக ஆடியருளுகிறான்...

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.(திருமந்திரம்)

'ஞானத்தைக் குறிக்கும் பிறைமதியை, தலையில் சூடிய கூத்தன்' என்று குறிப்பதன் மூலம், 'தனு, கரண, புவன, போகங்களை படைத்து, இப்பிரபஞ்ச இயக்கத்தை இறைவன் நடத்துவது,  உயிர்கள் தம் வினைகளைத் தீர்த்து, ஞானம் பெறுதலின் பொருட்டே' என்பதை வாதவூரார்  குறிப்பாலுணர்த்துவதாகக்  கொள்ளலாம்..

'கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.' -------'கூத்தனாகிய‌ இறைவனது கருணை நிறைந்த‌ குணத்தினைப் போற்றி, நாம் பொன்னூஞ்சல் ஆடுவோமாக..' என்று பெண்கள் பாடுவதாகக் கூறுகின்றார் வாதவூரார். இதனால், இறைவனது குணத்தைப் போற்றிப் பாடுதலின் அவசியமும் அதன் பயனும் உணர்த்தப்பட்டது..

இறைவனது அறக்கருணை, இப்பாடலில் வியந்து கூறப்பட்டது.  அண்ணல், அறக்கருணை பாலித்து, நம்மையும் ஆட்கொண்டருள வேண்டுவோம்!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. யோகியருக்கு யோகமும் போகியருக்கு போகமும் அருளும் சிறப்பை அறிந்தேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி சார்!

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..