நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

THIRUKARTHIGAI DEEPAM (27/11/2012 &28/11/2012)....... ( திருக்கார்த்திகை தீபம்)

கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன்பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேவிய அண்ணாமலையின்
பண்பாரும் கார்த்திகை தீபம்.
(கார்த்திகை தீப வெண்பா)
இருள் நீக்கி ஒளி தருவது விளக்கு. இருள் சூழ்ந்த இடத்தில், இருக்கும் பொருள்களை அறிய ஒரு விளக்கை ஏற்றினால் போதும். உள்ள பொருளை நாம் காணுமாறு விளக்குவதாலேயே 'விளக்கு' என்று பெயர். அது போல், மனதில் இருக்கும் அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞ்ஞானச் சுடரை ஏற்றினால் மனதினுள் இருக்கும் 'இறைவன்' என்னும் மெய்ப்பொருள் விளங்கும். இந்த உண்மைத் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழாவே கார்த்திகை தீபப் பெருவிழா.

திருவண்ணாமலை தீபம் என்றே இந்த விழா சிறப்பித்துக் கூறப்படுகிறது. தமிழர்களின் மிக  முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று இது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், 'பெரிய கார்த்திகை' என்றே சிறப்பித்துக் கூறப்படும் இந்தப் பண்டிகை வருகிறது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், இந்த விழா பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மலையே சிவமாக நிற்கும் பெருமையுடையது. ஒரு சமயம், திருமாலும், பிரம்ம தேவனும்,  'தாமே உயர்ந்தவர்' என்று  போட்டியிட்டுக் கொண்டபோது, சிவனார், ஒரு பெரும் ஜோதிப்பிழம்பாக, அவர்கள் முன் நின்றார். யார் அந்த ஜோதியின், அடியையும், முடியையும் தேடி, கண்டடைகிறாரோ அவரே உயர்ந்தவர் என்றார்.அந்த ஜோதியின் அடியைத் தேடி, திருமாலும், முடி(தலை, ஆரம்பிக்கும் இடம்)யைத் தேடி பிரம்மாவும் சென்றனர். அப்போது சிவனார் தலையிலிருந்து ஒரு தாழம்பூ விழுந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. பிரம்மா அதைப் பார்த்துவிட்டு, சிவனாரை உணர்ந்தாரெனினும், தாழம்பூவை, தான் அந்த ஜோதியின் முடியைப் பார்த்ததாக, சாட்சி சொல்லுமாறு பணித்தார். தாழம்பூவும் ஒப்புக் கொண்டது.

திருமாலோ, திருவ‌டியைத் தேடி, அதை அடைய முடியாமல், தம் இயலாமையை ஒப்புக் கொண்டார். சிவனார், மகிழ்ந்து, 'நாம் இருவரும் ஒருவரே' என்று அருளியதோடு, தம் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய‌ பிரம்மாவுக்கு, எவ்விடத்திலும் கோவில்கள், வழிபாடு இருக்காதென்றும், தாழம்பூ தன் பூஜைக்கு ஏற்றதல்ல என்றும், அதில் நாகம் குடிகொள்ளும் என்றும் சாபமிட்டார். ஆணவமே அழிவு என்றும் ஆணவமின்மையே பேரின்பப் பெருவாழ்வு என்றும் உலகுக்கு உணர்த்திய, அந்த உன்னத நிகழ்வு நடந்த நன்னாளே திருக்கார்த்திகைத் திருநாள்.

இதையே,
திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம். 
என்கிறார் திருவருட்பாவில் வள்ளலார் பெருமான்.

அன்றைய தினம், திருவண்ணாமலையை வலம் வருவோருக்கு அடிக்கு ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். 'நல்லக நமசிவாய விளக்கே போற்றி' என்று உள்ளம் மகிழ உச்சரித்து, திருக்கார்த்திகை மகாதீபத்தை தரிசிப்போருக்கு மறு பிறவி கிடையாது. உமையொரு பாகனாகி, சிவனார் இம்மலையின் மீதே அருட்காட்சி தந்தார் என்கிறது புராணம்.

ஸ்ரீ வைணவ மரபில் வந்தவர்களும் திருக்கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். கார்த்திகை தீபம், பொதுவாக, நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கத்திலும், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு மறுநாள், பாஞ்சராத்திர தீபம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நாளில் தீபத் திருநாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம், திருவரங்கத்தில் வீற்றிருந்தருள்புரியும் நம்பெருமாள், தம் ஸ்ரீபாதம் தாங்கிகளிடம், நம்மாழ்வார் பெருமானை திருவரங்கத்திற்கு  எழுந்தருளச் செய்து அத்யயன உத்ஸவம் நடத்தும்படி பணித்ததாலும், திருமங்கைஆழ்வார் பிரானின் திருநட்சத்திர வைபவம் என்பதாலும், தீபத் திருவிழாவைச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
சொக்கப்பனை:
கார்த்திகை தீபத்தன்று, ஆலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உண்டு. ஒரு தென்னை அல்லது பனை மரத்தை கோவிலின் முன்பாக  சற்றுத் தூரத்தில் நட்டு, அதைச் சுற்றிலும் ஓலை கட்டி வைப்பார்கள். சாயங்காலம், தீபமேற்றி, ஸ்வாமி புறப்பாடு ஆனதும்,  சொக்கப்பனையின் முன்னால் ஸ்வாமிக்கு தீபாராதனை நடைபெறும்.  அந்த தீபாராதனையின் கற்பூர ஜோதியக் கொண்டே சொக்கப்பனையின் உச்சியில் தீ மூட்டப்படும். பெரும் ஜோதிப் பிழம்பாக எரியும் சொக்கப்பனையின் ஒளியில் கோபுர தரிசனம் காண்பது பிறவாப் பயனளிக்கும்.

சொர்க்கத்திற்குச் செல்ல வழிகாட்டும் பனை என்பதே மருவி சொக்கப்பனை ஆனது. சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அங்கு இருக்கும், கரிந்த குச்சிகளை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயலில் நட்டு வைப்பது வழக்கம். இவ்வாறு செய்வதால், விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இல்லங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடும் முறை:
'தீபம் ஜ்யோதி பரப்பிரஹ்மம்' அதாவது பரப்பிரம்ம ஸ்வரூபமே தீப ஜோதி. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது நம் பாரம்பரியப் பழக்கம். 'திருவிளக்கு பூஜை' என்றே ஆலயங்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்கிறோம். விளக்கின் சுடரில் பரம்பொருள் எழுந்தருளுவதாகவும், அந்தச் சமயத்தில், முப்பத்து முக்கோடி தேவர்களும் அருகிருந்து வழிபாடு செய்வதாகவும் ஐதீகம். ஆகவே, காலையும் மாலையும் குறித்த வேளைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது என்றார்கள் நம் முன்னோர்.
தீபத்தின் பெருமை உணர்ந்தும், இவ்விழாவின் பொருள் புரிந்தும் செய்வது சிறப்பு. இது சகோதரர்களின் நன்மையைப் பேணி, பெண்கள் விளக்கேற்றும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பிறந்த வீடுகளிலிருந்து, பெண்களுக்கு 'கார்த்திகை சீர்ப் பணம்' தருவது வழக்கம். கல்யாணமான முதல் வருடம் பெண்களுக்கு கார்த்திகை சீர் தருவார்கள். விளக்குகள், பொரி முதலியவற்றோடு தேன்குழல், ஏதாவது ஒரு இனிப்பு ஆகியவற்றைத் தருவது வழக்கம்.

கார்த்திகை தீபத்தன்று காலையில், வீடு வாசலை மெழுகி சுத்தம் செய்து, வாசலில், பண்டிகை தினம் என்பதால் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும்.  வீட்டில் பூஜை அறையில் மாக்கோலம் போட வேண்டும். பூஜை அறை சிறிதாக இருந்தால், விளக்கேற்றும் இடம் என்று கிழக்குப் பார்த்து ஒரு இடம் தேர்வு செய்து அங்கேயும் மாக்கோலம் போடலாம். அன்று, வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லோரும் எண்ணைக் குளியல் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம்.

சில வீடுகளில், வடை பாயசத்துடன் விருந்தாகச் சமைப்பது வழக்கம். மதுரைப்பக்கத்தில் மாலை, நிவேதனத்திற்கு வடை செய்வது சம்பிரதாயம் என்பதால் காலையில் செய்வதில்லை. நிவேதனத்திற்கு வேண்டியதைத் தயார் செய்து கொள்ளவும்.

நிவேதனம் செய்ய வேண்டியவை:
அவல் பொரி, நெல்பொரி, அப்பம், அடை அல்லது வடை ஆகியவை செய்வது வழக்கம். சில வீடுகளில் அவல் பொரி மட்டும் பாகு செலுத்தி வைப்பது உண்டு.


வெல்ல அடை செய்வதும் சில வீடுகளில் வழக்கம். வீட்டுப் பெரியவர்களைக் கேட்டு, அவரவர் வீட்டு வழக்கப்படி செய்து கொள்ளவும். அது போல், பொரியை உருண்டையாகவோ அல்லது அப்படியே நிவேதனம் செய்வதோ அவரவர் வீட்டு வழக்கத்தைப் பொறுத்தது. மற்ற எந்த நிவேதனம் செய்யவும் சௌகர்யமில்லாவிட்டால், அவல் பொரியை மட்டுமாவது பாகு செலுத்தி, வெற்றிலை பாக்கு பழத்துடன் நிவேதனம் செய்ய வேண்டும்.

ஒரு மணைப் பலகையை எடுத்து, மாக்கோலம் போட்டு வைக்கவும். வீட்டில் இருக்கும் அகல்கள், குத்து விளக்குகள், புது அகல்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து, பொட்டு வைத்து, கொஞ்சம் எண்ணை ஊற்றி, பஞ்சுத் திரி அல்லது நூல் திரி போட்டு வைக்கவும். குத்து விளக்குகளுக்கு பூ வைக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கும் பூ வைக்க வேண்டும். ஒரு போதும் உபயோகித்த துணிகளைக் கிழித்து திரி தயாரிக்கக் கூடாது.  மணையின் மேல் விளக்குகளை வைக்கவும்.

மாலை ஐந்து மணிக்கு மேல், நிவேதனப்பொருட்கள், விளக்குகள் எல்லாம் தயார் செய்து கொண்டு, ராகு காலம் இல்லாத நேரத்தில், விளக்கேற்றலாம். புது உடைகள் இருந்தால் அணிந்து கொண்டு விளக்கேற்றலாம். அவரவர் சம்பிரதாயப்படி உடை அணிந்து திருவிளக்கேற்றுவதே சிறப்பு.முதலில், ஏதாவதொரு விநாயகர் துதியைக் கூறி வேண்டிக் கொள்ளவும். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒரு சிறு அகலை ஏற்றி, பின்  வீட்டில் எப்போதும் ஏற்றும் விளக்கு, பின் குத்துவிளக்குகள், மற்ற விளக்குகள் என்று எல்லா விளக்குகளையும் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றும் போது, 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்னும் திருப்புகழைப் பாடி ஏற்றுவது சிறப்பு. திருவிளக்கு போற்றி அல்லது திருவிளக்கு அகவலையும் கூறித் துதிக்கலாம்.  திருவிளக்கு அகவல் பாடலுக்கு இங்கு சொடுக்கவும்.

மண் அகல்  பூமி தேவியின் அம்சம். ஆகவே, கட்டாயம், மண் அகல்களையும் ஏற்ற வேண்டும்.
பாவை விளக்கு, யானை விளக்கு ஆகியவை இருந்தால் அவற்றைக் கட்டாயம் ஏற்ற வேண்டும். கார்த்திகை சீராக விளக்குகள் கொடுக்கும் போது இந்த விளக்குகளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம்.

ஊதுபத்தி ஏற்றிக் காண்பித்து, நிவேதனப்பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கு பழம், தேங்காய் நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். மலர்களைத் தூவி, தீபத்தை வழிபட்டு மஙகள ஆரத்தி காண்பித்து விட்டு, தீபத்தை நமஸ்கரிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் எல்லா அறைகளிலும் மின்சார விளக்குகளைப் போடவேண்டும்.

விளக்குகளை வாசலிலும் மற்ற இடங்களிலும் வைக்க வேண்டும். கட்டாயம்,அடுப்படியிலும், கொல்லைப்புறத்திலும்(இருந்தால்) வைக்க வேண்டும். குறைந்தது, இரவு ஏழு, ஏழரை மணி வரையிலும் விளக்குகள் எரிய வேண்டும். அவ்வப்போது பார்த்து எண்ணை ஊற்றவும். அக்கம்பக்கத்தில் உள்ளோரை அழைத்து தாம்பூலம் தருவது சிறப்பு.

சில வீடுகளில், தீபம் ஏற்றியதும், பூஜை செய்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. பூஜை முடிந்த பின், ஆரத்தி எடுத்து விட்டு, தீபங்களை வாசலில் வைப்பார்கள்.

மறுநாள், குப்பைக் கார்த்திகை என்று சொல்வார்கள். அன்றும் கொஞ்சம் விளக்குகளை ஏற்றி வாசலில் வைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு பழம், பால் இவற்றை நிவேதனம் செய்வது வழக்கம்.

 கார்த்திகை தீபத் திருநாளன்று, ஆலயதரிசனம் செய்து, ஆலயங்களில் தீபமேற்றி வழிபாடு செய்யவது நல்லது. ஒரு திருக்கார்த்திகை நன்னாளில், சிவன் கோவிலில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கை, அதன் மேல் தாவிக் குதித்துச் சென்ற எலியின் வால் தூண்டிவிட்டதாம். அது பிரகாசமாக எரியவே, அதன் பலனாக, அந்த எலியே மறுபிறவியில், மஹாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்ததாம். அறியாமல் ஒரு விளக்கை கார்த்திகை தீபத்தன்று தூண்டி விட்டதற்கே உயர் பிறவி கிடைத்தது ஒரு எலிக்கு. ஆகவே, கார்த்திகை தீபத் திருநாளில் திருக்கோவில்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்வது மிக உயர்ந்த புண்ணியப் பலனை அளிக்க வல்லது.

இல்லங்களில் பரணி தீபம் அல்லது கிருத்திகா தீப வழிபாடு:
கார்த்திகை மாதம், பரணி நட்சத்திரத்தன்று, முன்னூற்று அறுபத்தைந்து திரி திரித்து,  ஒரு அகலமான அகல் அல்லது பாத்திரத்தில், நெய் அல்லது எண்ணையை ஊற்றி, கோவில் அல்லது வீட்டில் ஏற்ற வேண்டும். பூஜை அறை அல்லது கோவிலில் கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தட்டில் அரிசியை வைத்து, அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். விளக்கிற்கு பூ சாற்ற வேண்டும்.  விளக்கு மலை ஏறிய பின்(எரிந்தான பின்), அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் தட்சணையை வைத்து  தானம் செய்ய வேண்டும். மண் அகலில் ஏற்றினால், சிறிய விளக்கு அல்லது பித்தளை அகலை வாங்கி, அதனுடன் தட்சணையை வைத்துத் தானம் செய்யலாம். இது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் மகிமையுடையது.

கிருத்திகை நட்சத்திரத்தன்று ஏற்றுவதானால், ஆயிரத்தெட்டு திரி திரிக்க வேண்டும். மேற்கூறியபடி ஏற்றி, தானம் செய்ய வேண்டும்.

இந்த தீபங்களை ஏற்றி தானம் செய்பவர்கள், பகலில் விளக்கேற்றும் வரை உபவாசமிருந்து, ஒரு வேளை மட்டுமே உண்பார்கள்.

கார்த்திகை தீப விரதம்:
இந்த விரதத்தை, ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் கிருத்திகையன்று ஆரம்பிக்க வேண்டும். முப்பது தினங்களுக்கு, தினம் ஒரு புது விளக்கில் தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சந்தன பிம்பத்தில், ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும். பிறகு, ஒரு வைதீகருக்கு தட்சணையுடன் தீபத்தை தானம் செய்ய வேண்டும். அவருக்கு உணவளிப்பது அவசியம். அவரவர் சௌகர்யப்படி, குத்து விளக்கு அல்லது அகலை வாங்கி, அதில் இந்த பூஜையைச் செய்யலாம்.

முப்பது நாட்களும் செய்ய இயலாதவர்கள், கார்த்திகை மாத அமாவாசைக்குள், ஏதாவது ஒரு நாளில், முப்பது விளக்குகளை வாங்கி, தீபம் ஏற்றி,  பூஜை செய்து, மேற்கூறியவாறு முப்பது வைதீகர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.  இந்த விரமிருப்பவர்கள், இரவு மட்டும் உண்டு செய்வது சிறப்பு. இயலாதவர்கள், ஒரு வேளை மட்டும் உண்டு, இரவு பலகாரம் சாப்பிடலாம். இம்மை, மறுமைப் பயன்களைத் தரவல்லது இந்த விரதம்.

கார்த்திகை தீப நன்னாளில், தீபமேற்றி வழிபாடு செய்து,

வெற்றி பெறுவோம்!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

5 கருத்துகள்:

  1. தங்கள் கட்டுரை சிறப்பாக இருந்தது, தொடரட்டும் தங்கள் ஆன்மீகபணி.

    பதிலளிநீக்கு
  2. கார்த்திகை தீபத்தை பற்றி பல்வேறு இலக்கிய நூல்கள் ,மற்றும் புராண ,இதிகாசங்களில் இருந்தாலும் கூட திருமதி .பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பதிவிட்ட இவ் உயர் பதிவு
    குன்றிலிட்ட விளக்கு போல தமிழ் கூறும்
    நல்லுலகம் ஆழ் மனதின் வாழ்த்துக்களை சமர்பிக்கிறோம் .

    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..