நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

SKANTHA SHASTI (18/11/2012).....ஸ்கந்த சஷ்டி

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
கண்இல கும்சிவ கந்த கிருபாசன
பண்ணவர் பூஜித பாத நமஸ்தே
ஏரக நாயக என்குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதிதரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே
(ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய தௌத்தியம்(திருவடித் துதி)
ஆறுமுகக் கடவுள் மாயையின் மகனான சூரனை முடித்து, விண்ணோரையும் மண்ணோரையும் வாழ்வித்தருளிய கந்தசஷ்டிப் பெருவிழா முருகன் திருத்தலங்கள் தோறும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை மறுநாள் துவங்கி வரும் ஆறு நாட்களே கந்த சஷ்டி விரத தினங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன. ஆறாவது நாளான சஷ்டி திதியே கந்த சஷ்டி, மஹாஸ்கந்த சஷ்டி என்று போற்றப்படுகிறது. அன்றைய தினமே, முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்து பக்தர்களை வாழ்வித்தருளினார். கந்த சஷ்டி ஆறுதினங்களும் முருகப்பெருமான் விரதமிருந்து, ஆறாவது நாள் சூரசம்ஹாரம் செய்ததால், கந்த சஷ்டி விரதம்  இருப்பது, முருகப்பெருமானின் அருளால், இம்மை, மறுமைப் பயன்களை  எளிதில் பெற்றுத் தரவல்லது.

வான் மகிழ வந்த ஆறுமுகமான பொருள், ஆறுபடை வீடமர்ந்து, அன்பர் நெஞ்சமெல்லாம் கொண்டாடி மகிழ,  வேண்டும் வரமும் வீடுபேறும் தந்தருளும் நன்னாளே கந்த சஷ்டிப் பெருவிழா.

முருகப்பெருமானின் தேவியாகிய தெய்வானை அம்மையே சஷ்டி தேவி. மூலப்ரகிருதியான சக்தி தேவியின் ஆறு அம்சமானவள் சஷ்டிதேவி. பிரம்மதேவனின் மானஸபுத்திரி. மஹாவிஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றியதால், விஷ்ணு ஸ்வரூபிணி. புத்ரபாக்யம் தருபவள். மஙகள சண்டிகை என்று போற்றப்படுபவள். குழந்தைகளுடன் இருப்பவள். குழந்தைகளுக்கு வரும் நோய்களைப் போக்குபவள். குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளை நல்குபவள். பதினாறு மாத்ருகா தேவியருள் பிரசித்தமானவள்.  சித்த யோகினி.

ஓம் ஹ்ரீம் ஷஷ்ட்டீ தேவ்யை நம:

என்பது தேவியின் மூல மந்திரம். இதை இயன்ற அளவு தினம் ஜபிக்க, அம்மையின் அருளால் புத்ரபாக்யம் உண்டாகும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பிரபலமான வாக்கியம். சஷ்டியில் விரதம் இருக்க கருப்பையில் குழந்தை வளர்ந்து, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதே இதன் பொருள். சஷ்டி விரதம் புத்திரபாக்கியம் தர வல்லது. கந்த சஷ்டி ஆறு தினங்களும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட, வேண்டுவனவற்றை எல்லாம் பெறலாம்.

தெய்வானை அம்மைக்குகந்த சஷ்டி திதியே, முருகப்பெருமானுக்கும் உகந்தது. ஆறாவது திதியாக வரும் சஷ்டி திதி ஆறுமுகக் கடவுளைப் போற்றித் தொழ மிகவும் ஏற்றது. ஆறு என்ற எண்ணுக்கும் முருகபெருமானுக்கும் நிரம்பத் தொடர்பு உண்டு. சரவணப் பொய்கையில் ஆறு நெருப்புப் பொறிகள், ஆறு தாமரை மலர்களில், ஆறு குழந்தைகளாக அவதரிக்க, ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும், உமாதேவியார் ஒன்று சேர்க்க, ஸ்கந்தப் பெருமான், ஆறுமுகமும், பன்னிருகரமும் கொண்டு அன்பர் மகிழும் உருக்கொண்டார். அறுகோண யந்திரமும், ஷடாக்ஷர மந்திரமும் கொண்டு, பக்தர்களை ஞான மார்க்கத்தில்'ஆற்றுப்' படுத்தி, அருள் புரியும் வள்ளல் பெருமான் குமரக் கடவுள்.
வேலின் பெருமைகள்:
முருகப்பெருமான், திருக்கை வேல், முருகப்பெருமானின் வடிவே ஆகும். வேல் கொண்டே, முருகப்பெருமான் சூரனை முடித்தார். முருகப்பெருமானைத் தரிசனம் செய்யும் போது, வேலைத் தரிசனம் செய்துவிட்டுப் பின், முருகனைத் தரிசனம் செய்ய வேண்டுமென்பது மரபு. கீழிருந்து மேலாக, வேலைத் தரிசனம் செய்து, பின், பாதாதி கேசமாக, சுப்பிரமணியரை சேவிக்க வேண்டும். கந்த சஷ்டியில், வேலுக்கும் மிக விமரிசையாகப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

அடிப்புறம் அகன்றும், நுனி கூர்மையாகவும் உள்ள வேல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் குறியீடாகும். வேலின் பெருமைகள் அளவிடற்கரியது.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்- வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பெருமான் புகழ்கிறார்.

வேலின் சிறப்புகளை,
சீர்கெழு செந்திலும் செங்கோடும்
வெண்குன்றம்
ஏரகமும் நீங்கா இறைவன் கை 
வேல் அன்றே
பார் இருளை பௌவத்தின்
உள்புக்கு பண்டொருநாள்
சூர்மா தடித்த சுடர் இலைய‌
வெள்வேலே!
என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புகழ்ந்துரைக்கிறார்.

வேலை வணங்குவதே வேலை என்றிருப்போரின் வாழ்வில் குறைகள் ஏதும் வாராது. வேலாயுதம் என்ற பெயரே முருகப்பெருமானைக் குறிப்பதாகும்.

சூரனை வெல்ல, உமாதேவியாரால் முருகப்பெருமானுக்கு வழங்கப்பட்டது சக்திவேல். இன்றைக்கும் சிக்கல் திருத்தலத்தில், வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் இருந்து, சிங்காரவேலர் வேல்வாங்கும் வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரனை அழிப்பதற்காக, அம்மையிடம் இருந்து வேல் வாங்கிய முருகனின் திருமுகத்தில், அதன் வீர்யம் தாங்காமல், முத்துமுத்தாக வியர்வை துளிர்ப்பது கலியுக அதிசயம். பட்டுத்துணி வாங்கி வந்து கொடுத்து, அதில், முருகனின் வியர்வையை ஒற்றியெடுக்கச் செய்து அதை இல்லத்தில் வைத்து வழிபடுவோர் அநேகம்.

திருநெல்வேலியில் 1803ல் கலெக்டராக இருந்த லூசிங்டன் என்பவர், இது குறித்து கிண்டலாக, 'எங்கே உங்கள் தெய்வத்தின் வியர்வையைக் காட்டுங்கள்' என்று கூறியதும், முருகன் மீதிருந்த மலர் மாலைகள் யாவும் அகற்றப்பட்டு,புதுத்துணி போர்த்தப்பட்டது. சிறிது நேரத்தில், எம்பெருமான் திருமுகத்திலிருந்து வழிந்த வியர்வையால், அந்தத் துணி முழுவதும் நனைந்திருந்தது. இதைக் கண்ட அவர், முருகன்  மேல் பெரும்பக்தி கொண்டு, காணிக்கையாக அரும்பெரும் செல்வத்தை வாரி வழங்கினார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:
இந்த விரதம் இருப்போர், முருகன் திருக்கோவிலுக்கு வந்து எம்பெருமானுடன் சேர்ந்து இருப்பது ஒரு முறை. இல்லங்களிலும் விரதம் இருக்கலாம்.

கோவில்களில் வந்து விரதம் எடுப்போர், தீபாவளி அமாவாசை தினமே கோவிலுக்கு வந்து விடுவர். தீபாவளி அமாவாசை மறுதினம் முருகன் திருத்தலங்களில்  காப்புக் கட்டும் விழா நடக்கிறது. முருகப்பெருமானுக்கும் பக்தர்கள் பலருக்கும் காப்புக் கட்டி விழா துவங்குகிறது. சூரனை முடிக்க விரதமிருக்கும் குகக்கடவுளோடு சேர்ந்து பக்தர்கள் அனைவரும் விரதமிருக்கின்றனர். விழாவின் ஐந்தாம் நாள் 'வேல்வாங்கும் விழா' நடைபெறுகிறது. அம்மையின் கையிலிருந்து முருகன் சக்திவேல் பெற்று, சூரனை சம்ஹாரம் செய்ய புறப்படுகிறார். கந்தசஷ்டியில், மாமரவடிவாய் நின்ற சூரனைப் பிளந்து, இரு கூறான மரம், சேவலும் மயிலுமாக மாற, அவற்றிற்கும் அருள்புரிந்து, சேவற்கொடியோனாகவும், மயில் வாகனனாகவும் பக்தர் மனம் உகக்க ஏற்றருள் புரிகிறார்.

கந்த சஷ்டி ஆறு நாட்களும், பாலும் பழமும் உண்டு விரதம் இருப்பது சிறந்தது. அதை விடவும், ஆறு நாட்களும், தினம் ஆறு மிளகையும் ஒரு குவளை தண்ணீரும் மட்டுமே அருந்தி விரதம் இருப்போர் உண்டு. ஆறாவது நாள் சூரசம்ஹாரம் முடிந்து, மறுநாள், பெரும்பாலான கோவில்களில், முருகப்பெருமானுக்கு, விசேஷ அபிஷேகங்கள் செய்து, தங்க/வெள்ளி கவசம் சாற்றி, பாவாடை நைவேத்யம் (பெரிய தட்டில், சிறிதளவே தயிர் கலந்த சாதம் வைத்து நிவேதித்தல்) நடைபெறுகிறது. அதைத் தரிசித்து,, பிரசாதம் பெற்ற பின்பே,   வீடு சேர்ந்து, உற்றார் உறவினருக்கு உணவளித்து விரதம் முடிப்பர். திருச்செந்தூர் உள்ளிட்ட திருத்தலங்களில், எம்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

இல்லங்களில் விரதம் இருப்போரும் இம்முறையிலேயே விரதம் இருக்க வேண்டும். இயலாதோர், ஒரு வேளை மட்டும் உணவு உண்ணலாம். ஆலய தரிசனம் தினம் செய்வது அவசியம். தினந்தோறும், இருவேளை குளித்து, பகலில் உறங்காதிருக்க வேண்டும். முருகக்கடவுளின் திருவுருவப்படத்துக்கு பூஜை செய்தல் அவசியம்.  சஷ்டி தினத்தன்று மாலையில், சூரசம்ஹாரம் நிறைவடைந்த பின், பால்பாயசம் நிவேதித்தல் சிறந்தது. ஆறு நாட்களும், கந்த புராணம் படிப்பது கட்டாயம். அது இயலாதவர்கள், கந்தர் கலிவெண்பா பாராயணம் செய்வது சிறந்தது. ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பாவுக்கு இங்கு சொடுக்கவும். திருப்புகழ் பாடல்களைப் பாடித்துதிப்பது மிகச் சிறந்தது.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய  முதல்வன் புராண முடிப்பு கந்தபுராணத்தின் சாரமே. அன்பர்கள் இதையும் பாராயணம் செய்து நிறைந்த பலன் பெறலாம்.அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

சந்திர சேகரன் தழற்கண்ணே பொறி 
வந்தன வாறவை மாசில் கங்கைசார்ந்து 
ஐந்துடன் ஒன்றுஅணை குழவி ஆகிஆறு 
அந்தநன் மாதர்கள் அமுதம் உண்டவே(1) 

உண்டவை பலபல உருவங் காட்டுபு 
பண்டுமை யாலொரு படிவ மாய்அவன் 
கண்டென அருத்தமுது உண்டு காமர்செய் 
அண்டஒண் கயிலைசென்று அடல் செய்யுமால்(2) 

ஆடலில் வெஞ்சுவர் அசுவம் ஏறியது 
ஈடணை அம்புலி இரதம் ஊர்ந்தது 
மூடமில் இந்திரன் முதலி னோர்கரி 
சேடனை ஊர்ந்தது செம்பொற் சேயரோ(3) 

செங்க ருடன்புலி சீயம் ஓதிமம் 
சங்குறழ் ஏறுழை சரபம் ஆடிஇவர்ந்து 
எங்கணும் ஏகியது எழில்கொள் எந்நில 
மங்கைய ரும்விழை மகிமைப் பிள்ளையே(4) 

பிள்ளைமை நீத்தொரு பெருவ யோதிகம் 
உள்ளவ னாய்ச்சுரர் உலகை நன்குசெய் 
உள்ளம்டு அங்ஙனம் உலாவி னான்வன 
நள்ளிடன் அடைந்துகின் னரஞ்செய் தானவன்(5) 

செய்யதன் ஓசையிற் சேர்வி லங்குபுள் 
மெய்யைம றந்தன வேய்ங்குழ ற்தொனி 
ஐயன்எ ழுப்பினன் அகல்உண் மாதர்கள் 
மையல்செய் விரகமுள் வருந்த நாளுமே(6) 

மேலடர் அண்டமும் மேய சேயவன் 
மாலுடல் வரையிடை வந்து வானவர் 
பாலுறு வலிகளைப் பாறச் செய்துதன் 
வாலிருந் தைவத வடிவு காட்டினான்(7) 

காட்டலும் சதமகன் கடவு ளேஎமை 
வாட்டொரு சூரனை மடித்துக் காவெனக் 
கேட்டவன் அஞ்சல்மின் கிருபை செய்துமென்று 
ஆட்டரன் பாற்படை அரசை வாங்கினான்(8) 

வாங்கிமற் கணத்தொடு மகிவந் தோதியும் 
வீங்குமெய்க் கயமுகன் தனையும் வீட்டுபு 
பாங்குடைச் சிங்கனும் பானு கோபனும் 
னீங்கிடக் கண்டவர் நிருபற் கீண்டனன்(9) 

கீளவைப் பரிகொடி யாய்க்கி ளர்ந்தன 
ஆளொரு வரையடைந்து அருணை யான்புகழ் 
வாளன கண்ணியை மணந்து விண்புரந்து 
ஆளெயில் மான்மணந் தான்ச யம்புவே(10)

கந்தசஷ்டி கவச பாராயணம் கட்டாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் 6 முறை பாராயணம் செய்ய, ஆறு நாட்கள் முடிவில் முப்பத்தாறு முறை பாராயணம் செய்ததாகும். இது மேலான பலன்களை அளிக்க வல்லது.

சஷ்டிதேவியைப் பூஜை செய்ய வேண்டுவோர், வேல் அல்லது திருவுருவப்படத்தை வைத்து, முறைப்படி பூஜை செய்யலாம். மஹா ஸ்கந்த சஷ்டி என்று போற்றப்படும், இன்றைய தினம் பூஜை துவக்கி, ஒரு வருட காலம் வரை, ஒவ்வொரு சுக்ல சஷ்டி தினத்தன்றும் பூஜை செய்ய, மழலைப்பேறு கட்டாயம் வாய்க்கும்.

விரத தினங்களில், இனிய வார்த்தைகளைப் பேசுதலும், இயன்ற வரையில் மௌனம் கடைபிடித்தலும் மிகச்சிறந்தது. ஆறு நாட்களும் விரதமிருக்க இயலாதோர் ஸ்கந்த சஷ்டியன்று மட்டுமாவது விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் உபவாசம் இருந்து, பூஜை செய்து, ஆலய தரிசனம் செய்த பின் உணவருந்தலாம்.

முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்மை, மறுமைப் பயன்களைத் தரவல்ல, இவ்விரதம் கடைப்பிடிப்பது, எல்லாத் துன்பங்களையும் நீக்கி விடும் மகிமை வாய்ந்தது.

மாயையே சூரன், அதை நீக்கி ஞான வழிகாட்டும் எம்பிரான் முருகன். இம்மைப் பயன்களோடு, பிறவிப்பயனான ஆத்மஞானம் அடைவிக்கும் எம்பெருமான் முருகனடி போற்றி,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..