நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

ஸ்ரீராம பக்தா நமோ... நமோ.


ஸ்ரீராம நவமி (1.04.2012)

 ஸ்ரீராகவம் தசராத்மஜமப்ரமேயம் -
ஸீதாபதிம் ரகுகுலாந்வய ரத்னதீபம் | 
ஆஜானு பாஹுமரவிந்த தளாயதாக்ஷம் -
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி ||

'ராம' என்ற இரண்டெழுத்து மந்திரம், நம் எல்லாவிதமான துன்பங்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இந்த இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து, பிறவாப் பெருநிலை அடைந்தோரின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, ஸ்ரீதியாகய்யர், மகாத்மா காந்தியடிகள், என நம் கண்முன்னே வாழ்ந்திருந்த உதாரண புருஷர்கள் எத்தனையோ.

ராம நாம மகிமையை விளக்க‌ ஸ்ரீ மஹாபெரியவர் கூறிய ஒரு சம்பவம் இதோ

ஸ்ரீ ராமநவமியன்று, ஸ்ரீராமரின் படத்தை வைத்து, பூஜித்து, நிவேதனங்கள் செய்து, வழிபட்டால் வேண்டிய அனைத்தும் பெறலாம். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜாதகத்தை வைத்துப் பூஜிக்க, விருப்பங்கள் கைகூடும்.


ஸ்ரீ ராமநவமியன்று செய்ய வேண்டிய நிவேதனங்கள்:
  • வெல்லப் பாயசம்.
  • உளுந்து வடை
  • பாசிப்பருப்பு கோசுமல்லி
  • உப்பு, மிளகுப்பொடி சேர்த்த வெள்ளரிக்காய்,
  • பானகம்
  • நீர்மோர்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு விதவிதமான நிவேதனங்கள் படைத்து வழிபடும் நாம், ஸ்ரீராஜாராமனுக்கு மட்டும் பானகம்,நீர்மோர் எனப் படைத்து வழிபடக்காரணம், ராமநவமி, பங்குனி, சித்திரை மாதங்களில் வருகிறது. கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி தரும் என்பதற்காகவே, வெள்ளரிக்காய், பானகம்,நீர்மோர் என நிவேதனம் செய்கிறோம்.
     
     
குழந்தை பிறந்த வைபவத்தைக் கொண்டாடவே, பாயசம் படைத்து நிவேதனம் செய்கிறோம். திருமணம் கைகூட, பருப்புத்தேங்காய் நிவேதனம் செய்து, இராமாயணத்தில், அயோத்யா காண்டத்தில், 'சீதாஸ்வயம்வரம்' பாராயணம் செய்ய வேண்டும்.


ஸ்ரீராம தூதனான ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, இராமாயணத்தில் இருக்கும் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. ஸ்ரீ இராமாயணம் பாராயணம் செய்யும் இடத்தில், அனுமனுக்கென்று, ஒரு பலகை போட்டு, அதில் வஸ்திரம் சார்த்தி வைப்பது வழக்கம். அதில் அனுமன் அமர்ந்து, கேட்பதாக ஐதீகம்.


கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்த நாம, பலவித கஷ்டங்களை அனுபவிக்கிறோம். புராணங்களின் உட்கருத்துக்களை உணர்ந்து படித்தால், நம் கஷ்டங்கள் விலக வழி தென்படும். ஸ்ரீ அனுமனின் கதை, நமக்குப் பல விஷயங்களை உணர்த்தும்.

ஸ்ரீ அனுமன், ருத்ராம்சம். ஸ்ரீராமருக்கு உதவி செய்வதற்காக, அவதாரம் எடுத்த சிவனின் அம்சமே அனுமன். சிறு வயதில் வானத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சூரியனை, 'பழம்' என்று நினைத்து, பிடிப்பதற்காக, வானத்தில் பறந்தான் வாயு மைந்தனான அனுமன். அப்போது, சூரிய‌ கிரகணம் ஆரம்பிக்க வேண்டிய நேரம். இராகு பகவான் , சூரியனை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது, தன்னைத் தாண்டி ஒரு சிறுவன் சூரியனை நோக்கிச் செல்வதைப் பார்த்து, அதிசயித்து, அந்தச் சிறுவனை நிறுத்தி, வினவினார்.

'நான் அந்தப் பழத்தைப் பிடிக்கப் போகிறேன்' என்று அனுமன் பதிலுரைக்க ( தன் எதிரியாகிய சூரியனைப் பிடிக்கச்செல்வதால்), மகிழ்ந்து, பிற்காலத்தில் நீ வணங்கத்தக்க நிலை அடைவாய்(இராகுவைப் போல் கொடுப்பாரில்லை), அப்போது, எனக்குரிய தானியமாகிய உளுந்தில் நிவேதனம் செய்து உனக்குப் படைக்கும் பக்தர்களுக்கு நான் அருளுவேன்' என்று, வரமளித்தார். அதனால் தான், உளுந்து வடை நிவேதனம் செய்கிறோம். வடநாட்டில் அனுமனுக்கு 'ஜிலேபி' மாலை சார்த்துகிறார்கள். வடை செய்யும் போது, மிளகு சேர்த்துச் செய்வதே சிறப்பு. நடுவில் உள்ள ஓட்டை, பாம்பின் கண்ணைக் குறிக்கும். (இராகு பகவான் பாம்பு வடிவம் கொண்டவர் என்பதால்) ஆகவே, அது வட்டமாக இல்லாமல், நீள்வட்டமாக இருக்க வேண்டும்.






அதன்பின், சூரியனைப் பிடிக்கப் போனதற்காக, இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாடையில் அடிபட்டு, அழகிய முகத்துக்குப் பங்கம் வந்த போதும் சோர்ந்து போகவில்லை. 'நவவியாகரணங்களி'ல் சிறந்த பண்டிதர் சூரிய பகவானே என்று தெரிந்து அவரிடமே, எந்நேரமும் அவருக்கு எதிர்முகமாக சஞ்சாரம் பண்ணிக்கொண்டே (எவ்வளவு வெப்பத்தைத் தாங்கியிருப்பார்!) கற்றுக்கொண்டார்.

ரிஷிகளின் சாபம் காரணமாக, அவ்வளவு வித்தையும் மறந்து போனபோதும் (இராமகாரியத்தின் போதுதான் நினைவு வரும் என்பது சாபம்) இடிந்து போகாமல், சுக்ரீவனுக்கு மந்திரியாகத் தொண்டு செய்து வந்தார். சீதையைத் தேடுவதற்காக, கடலைத் தாண்டவேண்டும் என்ற போது, ஜாம்பவான், இவரது பலத்தைப் பற்றி நினைவு படுத்த, அநாயாசமாகக் கடலைத் தாண்டினார். எது நடந்தாலும் சோர்ந்து போகாமல், 'அடுத்தது என்ன?' என்று யோசிக்கும் மதியூகம் அனுமனுக்கு உள்ள சிறந்த குணம். அதுதான், இராம இராவண யுத்தத்தில், லக்ஷ்மணனின் மயக்கத்தால், அனைவரும் ஸ்தம்பித்து நின்ற போது, சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்து லக்ஷ்மணனைப் பிழைக்க வைத்து, இந்திரஜித்தின் வதத்துக்கு வழிவகுத்தது.



உயர்ந்த தெய்வ நிலையை அடைந்தாலும் பணிவை விடாத பெருங்குணம் அவருக்கு. கோவிலுக்குள் நுழைந்ததும், கைகூப்பி நம்மை வரவேற்கிற அளப்பரிய கருணைத் தெய்வம் அவர் ஒருவரே.


ஸ்ரீஇராமரின் அருள்பெற, அனுமனின் கிருபை மிக முக்கியம். முதலில் அனுமனின் கடாட்சம் பெற்ற பிறகே, இராம தரிசனம் சாத்தியம். ஸ்ரீ துளசி தாசர், மந்திராலய மஹான் ஸ்ரீராகவேந்திரர் இவ்விருவரும் அனுமனின் அருள் பெற்றே, ஸ்ரீராமரின் திவ்ய தரிசனம் பெற்றனர். மந்திராலயத்தில், ஸ்ரீராகவேந்திரரது பிருந்தாவனத்தின் முன்பாக, ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளார். இவருக்கு, தேன் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேகத் தேனை, தினமும் சாப்பிட்டு வந்தால், தீராத நோய்கள் தீரும்.


'கண்கட்டு வித்தை'கள் செய்வோரிடமிருந்து தப்பிக்க, ஸ்ரீஅனுமன் அல்லது ஸ்ரீபத்திரகாளியை நினைத்தால், அவர்களது வித்தை நம்மிடம் செயல்படாது என்று கூறப்படுகிறது.


ஆகவே, ஸ்ரீஇராமாயணப்பாராயணம், குறிப்பாக, சுந்தரகாண்டப் பாராயணம், ஸ்ரீராமநவமியன்று செய்வது சிறந்தது.


புத்திர்பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வஞ்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸ்ரீராம நவமியன்று பாராயணம் செய்ய வேண்டிய மற்றொரு ஸ்லோகம், ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம். நவகிரகங்கள் ஒவ்வொன்றின் அம்சமாகவே, ஸ்ரீமஹாவிஷ்ணு தன் அவதாரங்களைச் செய்தார். சூரியபகவானின் அம்சமாகத் தோன்றியவரே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. அவரே ஸ்ரீராமரின் குல முதல்வனும் ஆவார். இராம இராவண யுத்தத்திற்கு முன் அகஸ்திய மஹரிஷி, இராமருக்கு உபதேசம் செய்ததே ஆதித்ய ஹ்ருதயம்.



சூரியனின் பெருமைகளைப் போற்றிப் புகழும் இந்தத் துதியைப் படிக்கும் போதே, நமக்குள் எழும் எழுச்சிமிக்க உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தீர்க்கமுடியாத வருத்தமோ துன்பமோ வந்தால், இந்தத் துதியை ஒன்பது முறை தொடர்ந்து பாராயணம் செய்தால், வருத்தம் நீங்குவதைக் காணலாம்.

ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதயத்திற்கு, இங்குசொடுக்கவும்.

ஸ்ரீராமஜெயம் என்று தினமும் எழுதுபவர்கள் எத்தகைய வருத்தத்திலிருந்தும் உடனே விடுபடுவர். இராமநவமியன்று, அன்னதானம், வஸ்திர தானம், விசிறி வழங்குதல் போன்றவை சிறப்பு.



ஸ்ரீராமநவமியன்று, ஸீதா,லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வழிபட்டு,

வெற்றி பெறுவோம்!

1 கருத்து:

  1. http://www.raaga.com/channels/hindi/moviedetail.asp?mid=hd001649

    "ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்" ஒலி வடிவிற்கு இங்கே பார்க்கவும் ... நன்றி பார்வதி

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..