நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 2 மார்ச், 2012

அம்பிகையைச் சரண் புகுந்தால்......

'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்பது, யாவரும் அறிந்த ஒன்று. வள்ளுவப் பெருந்தகையும் 'மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்று மனத்தின் வலிமையை சிறப்பாகக் கூறியிருக்கிறார்.

ஆக மனோவலிமையே வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம். மனிதப் பிறவிகளின் மனோவலிமையை நிர்ணயிக்கும் மனோகாரகனான சந்திர பகவான் தன் முழுப்பிரகாசத்தையும் பூவுலகுக்கு அளிக்கும் நாளே 'பௌர்ணமி' . 


ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலோ அல்லது அந்த நட்சத்திரத்தை ஒட்டி வரும் நாளிலோ பௌர்ணமி அமையும்.எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே அந்த மாதத்தை அழைக்கும் வழக்கம் உள்ளது.(உ.ம்., பெரும்பாலும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், இதற்கு மற்றொரு பெயர் மாக மாதம்). 


சந்திர பகவான் பாற்கடலில் உதித்தவர். மஹாலட்சுமியின் சகோதரர். கிழமைகளில் திங்கட்கிழமை அவருடையது.சிவனின் இடப்பாக சடையில் அமர்ந்து அருள் ஒளி வீசும் சந்திரனின் அருள் பெற சிவனாரின் இட பாகத்துக்கு உரியவளான அம்பிகையை வழிபடலாம்.  


சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். அதற்கு பௌர்ணமி உகந்த நாளாகும். 


பெற்ற தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை,  அடிக்கடி விபத்து ஏற்படும் அமைப்பு, மன அழுத்தத்தால் துன்புறுவது இப்படி பலவற்றுக்கு பலம் குறைந்த சந்திரனை காரணமாகச் சொல்லலாம். 


இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் சந்திர திசை, புத்தி, நடப்பவர்கள் (சந்திரன் ஜாதகத்தில் எவ்வாறு இருந்தாலும்), கீழ்வரும் துதியைப் பாராயணம் செய்யலாம்.

             அலைகட லதனின்றுமன்று வந்துதித்த போது
             கலைவளர் திங்களாகிக் கடவுளென்ற வருமேத்துஞ்
             சிலைருதலுமையாள் பங்கன் செஞ்சடை பிறையாய்மே
             மலைவலமா கவந்தமதியமே போற்றி போற்றி.

சந்திரன் ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் தினங்களையே சந்திராஷ்டம தினங்கள் என்கிறோம்.அத்தகைய தினங்களில் சந்திர வழிபாடு, எதிர்பாரா சிக்கல்களில் இருந்து ஒருவரைக் காப்பாற்றும்.

பௌர்ணமி தினத்தில்.....

1. பொதுவாக, பௌர்ணமி தினம் வழிபாடுகளுக்கு உரியது. சத்திய நாரயண பூஜை,  அம்பிகை வழிபாடு முதலியவை செய்ய உகந்தது.

2. லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி
இவற்றைப் பாராயணம் செய்ய அம்பிகை அருள் மழை பொழியக் காணலாம்

3. பௌர்ணமியன்று, உபவாசம் இருந்து, இரவு, நிலவு தரிசனம் செய்த பின், அம்பிகை வழிபாடு செய்து, பால், பழம், பால்பாயசம் இதில் ஏதாவதொன்றை நிவேதனம் செய்து, உட்கொள்ளலாம்.தீராத மன வருத்தம் தீர இது சிறந்த பரிகாரமாகும்.

4. நல்முத்து அணிவதும் இயன்றவர்கள் தானம் செய்வதும்,சந்திர பகவானுடைய அருளை பன் மடங்கு பெற்றுத்தரும்.

நேரமின்மையால் சுருக்கமான வழிபாட்டு முறை வேண்டும் என்று கூறுவோருக்கு......

                                                
1. ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றிக் கொள்க. ஐந்து முக குத்து விளக்கு ஏற்றினால், கருவறையில் உள்ள தெய்வத்தின் சாந்நித்யம் வந்து விடுகிறது.

2. தெரிந்த விநாயகர் துதியைச் சொல்லவும். 

3. தீப ஒளியில் அம்பிகையை எழுந்தருளுமாறு பிரார்த்திக்கவும். 

4. பூஜையில் எவ்விதக் குற்றங்கள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அருள வேண்டிப் பிரார்த்திக்கவும்.  


5. திருமகளுக்கு உரிய அங்க பூஜையைச் செய்யவும். 

6. வெண்ணிற மலர்கள் கொண்டு,லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சிக்கவேண்டும். 

7. ஊதுபத்தி ஏற்றிக் காட்டவும். 

8. ஒற்றை தீபத்தை ஏற்றி, விளக்கைச் சுற்றிக் காட்டவும். 

9. நிவேதனங்களை சமர்ப்பிக்கவும். 

10. தேங்காய், வெற்றிலை, பாக்கு ,பழ‌ம் முதலியவற்றை சமர்ப்பிக்கவும். 

11. கற்பூர ஆரத்தி காட்டவும். 

12. தனக்குத் தானே மூன்று முறை சுற்றி வந்து நமஸ்கரிக்கவும். 

13. கோரும் வரங்களை வேண்டி,பின் பூஜையில் குற்றங்கள் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கவும். 

14. தேவியை மீண்டும் தீபத்திலிருந்து, தன் இடம் சென்றடையப் பிரார்த்திக்கவும். 

15. பிரசாதங்களை நாமும் உண்டு பிறருக்கும் விநியோகித்தல் நலம்.  


16. சந்திர தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். பௌர்ணமியன்று, சித்தர்களும் ஞானிகளும் சந்திரனுக்கு அருகில்,சூட்சும சரீரத்தில் வழிபாடு செய்வார்கள். ஆகவே, சந்திர தரிசனம்,அவர்களின் ஆசியையும் நமக்குப் பெற்றுத்தரும்.வாழ்வில் தீராத துயர் தீர இது மிக உதவும். 


வரும் மார்ச் 7,2012  மாசி மக நன்னாளில் பௌர்ணமி வழிபாடு செய்து, நலம் பல பெறலாம்.'விதியை மதியால் வெல்லலாம்'. ஆகவே, அன்றைய தினம் மதியாகிய சந்திரனுக்கு உகந்த வழிபாடுகளைச் செய்து,  
 முழுநிலவின் கதிரொளி
பூர்ண மஹா மேரு அபிஷேகம்
வெற்றி பெறுவோம்!

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..