நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 30 மார்ச், 2012

ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன்

பங்குனி உத்திரம் 5:04:2012, வியாழக்கிழமை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியஸ்வாமி
இருப்பரங் குறைத்திடு மெ·க வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்

நிகிருஷ் வைர ஸமாயுதை: காலைரு ஹரித்வ மாபன்னை:|
இந்த்ரா யாஹி ஸஹஸ்ரயுகு அக்னிர் விப்ராஷ்டி வஸன:|
வாயுச்வேதஸிகத்ருக:| ஸம்வத்ஸர: விஷுவர்ணை:|
நித்யாஸ்தேனு சராஸ்தபா| ஸுப்ரஹ்மண்யோஹம்|
ஸுப்ரஹ்மண்யோஹம்| ஸுப்ரஹமண்யோம்||


வந்தனை செய்தாரையும் ,செந்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் கந்தக் கடவுள், தெய்வானை அம்மையைத் திருமணம் செய்தருளிய நாள் பங்குனி உத்திரம் .வடிவேலனை எந்த நேரமும் சிந்தையுள் வைத்து வழிபடும் பக்தர் கூட்டம், அவன் நின்றாடும் தலமெங்கும் கொண்டாடி மகிழ்ந்திடும் இத்திருநாளில் பெரும்பாலான முருகன் திருத்தலங்களில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

முருகன் தமிழ்க்கடவுள் என்று அறியப்படுகிறான். 'முருகு' என்றாலே அழகு என்பதுதான் பொருள். பழனிமலையில் ஆண்டிக்கோலம் கொண்டருளினாலும் அண்டினவரை அரசனாய் வாழவைக்கும் வள்ளல் பெருமான்.

ஞானசக்தி வேலைத் தன் கைக்கொண்ட பிரான், சித்தர்களுக்கெல்லாம் சித்தன். பக்தியில் பித்தாகி வணங்குபவருக்கு முக்தி தரும் அத்தன். நம் உடலின் ஆறு ஆதாரச்சக்ரங்களை ஆறு படைவீடாக்கி, ஆறு முகம் கொண்டு அருள்கூர்ந்து, ஆறாத நம் துயரை ஆற்றுவித்து, பேரானந்தப் பேற்றை நம் கைக்கொண்டு தந்தருளும் தெய்வம்.

கந்தபுராணம்.
முருகக் கடவுளின் வரலாறே கந்தபுராணம். திருமிகு கச்சியப்பசிவாச்சாரியார் அருளிய இந்த நூலுக்கு, கந்தனே, 'திகட சக்கரம்' என்று முதலடி எடுத்துக் கொடுக்க, அவர்

திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன் ,

முருகன் சூரனோடு போர்புரிதல்
என்று தொடங்கிப் பாடி முடித்தார். இந்நூலை அரங்கேற்றும் வேளையில், 'திகடசக்கரம்' எனும் சொல்லின் இலக்கணம் குறித்து ஒரு புலவர் கேள்வி எழுப்ப, மறுநாள், முருகனே புலவர் உருவில் வந்து 'வீரசோழியம்' எனும் இலக்கண நூலில் இருந்து ஆதாரத்தைக் காட்டியருளினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில், "படைத்தலைவரில் நான் கந்தன்" என்றுரைக்கிறார்.

ஸேநாநீநாம் அஹம் ஸ்கந்த³: (கீதை – பத்தாவது அத்தியாயம், விபூதி யோகம்,)

முருகனின் பிறப்பை படிக்கிறவர்களுக்கு செல்வம் கொழிக்கும். பாவம் அகன்றுபுண்ணியம் வந்தடையும் என்று வால்மீகி இராமாயணத்தில், பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் கூறுவதாக ஒரு ஸ்லோகம் உள்ளது.

            
சித்தர்கள் பலருக்கு அருள்புரிந்த தெய்வம் முருகன். பழனி முருகன் சிலையை உருவாக்கிய, போகர், மருதமலையில் அதிஷ்டானம் கொண்டருளிய பாம்பாட்டிச் சித்தர் பிரான், போன்ற பல சித்தர்களுக்கு அருள் புரிந்தவன் ஞானபண்டிதன்.


முருகனின் யந்திரம் ஷட்கோண வடிவானது. 'சரவணபவ' எனும் ஷடாட்சர மந்திரத்தினால் அறியப்படுபவன் குகக் கடவுள். இம்மந்திரத்தைக் கண்டுபிடித்து உலகுக்களித்தவர், பிரம்மதேவனின் புத்திரர்களுள் ஒருவரான, சனத்குமார மஹரிஷியாவார்.



கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தில்,

ஆதியில் நந்திபா லளித்த தொன்மைசேர்
காதைகள் யாவையுங் கருணை யாலவன்
கோதற வுணர்சனற் குமாரற் கீந்தனன்



என்று சனற்குமாரர் திருநந்தி தேவரிடமிருந்து புராணங்களைப் பெற்றமையைக் கூறுகிறார்.


இச்சாசக்தியாகிய வள்ளியையும் கிரியாசக்தியாகிய தெய்வயானையையும், மனைவிகளாகக் கொண்ட ஞானசக்தியே முருகன். நம் மூச்சுக்காற்றில் பூரகம், கும்பகம் (மூச்சு உள்ளிழுத்தல், வெளிவிடுதல்) இவையே வள்ளி, தெய்வானையென்றும், இவற்றை ஒருங்கிணைக்கும் பிராணனே முருகனென்றும் கூறுவர்.

ஞானஉபதேசம்

ஞானஉபதேசம் செய்வதென்றால் ஞான பண்டிதனுக்குக் கொள்ளைப்பிரியம். தன் தந்தைக்கு உபதேசித்ததில் தொடங்கிய சுவாமிநாதன், அருணகிரிநாதர், குமரகுருபரர்,பாம்பன்சுவாமிகள் என்று பலருக்கு ஞானமுடி சூட்டியுள்ளான். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதருக்கு, திருத்தணி முருகன், வாயில் கல்கண்டு அளித்து சங்கீதத்தில் வல்லவராக்கியதால், அவர் தனது எல்லாக் கீர்த்தனைகளிலும் 'குருகுஹ' என்னும் முத்திரையைப் பதித்தார்.

குமரகுருபர சுவாமிகள்

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியதால், சிவமே முருகன். சிவபிரானின் மூர்த்தங்களுள் சிறப்பு வாய்ந்தது. சோமாஸ்கந்தர் (ஸஹ உமா ஸ்கந்தர் )  தாய், தந்தை, பிள்ளை என இருப்பதால், எல்லா விருப்பத்தையும் அருளும் மூர்த்தியாக, சோமாஸ்கந்த மூர்த்தி புகழப்படுகிறார்.


ஸ்ரீமுருகனும் ஸ்ரீநரசிம்மரும்:

நவகிரகங்களில் ஆற்றலுக்குக் காரகரான செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகன். முருகன் ஞானசக்தி என்பதால், கர்நாடகா,மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில், முருகனை நாக ரூபத்தில் வழிபடுகின்றனர். சர்ப்பதோஷ நிவர்த்திக்காக, நாகப்பிரதிஷ்டைகளும் முருகன் தலங்களில் செய்து வழிபடுகின்றனர்.

Sarba  prathishta, Ghati,
ஸ்ரீ மஹாவிஷ்ணு, நவகிரகங்களின் அம்சமாகவே தனது அவதாரங்களைச் செய்து அருளினார்.  செவ்வாயின் அம்சமாக, அபரிமிதமான ஆற்றலோடு அவர் செய்தருளிய அவதாரமே நரசிம்ம அவதாரம் . ஆகையால், நரசிம்மரை, முருகனோடு சேர்த்து வழிபடுகின்றனர். கர்நாடகாவில், பிரசித்திபெற்ற முருகன் தலமாகிய 'காட்டி' சுப்பிரமண்யர் கோவிலில், சுயம்புவாக, புற்றின் முன்புறம் முருகனும் பின்புறம் ஸ்ரீநரசிம்மரின் திருமுகமும் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

Ghati Subramanya,
முருகனின் துதிகள்:


தமிழ், வடமொழி இரண்டிலும் முருகனுக்குத் துதிகள் அநேகம். ஸ்ரீஆதிசங்கரர்,  திருச்செந்தூர் முருகன்மேல், சுப்பிரமணிய புஜங்கம் பாடி தன் நோய் தீரப்பெற்றார். அருணகிரிநாதரின் திருப்புகழ், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம், தேவராய சுவாமிகள் அருளிய கந்தர்ஷஷ்டிக் கவசம், என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

வேல்மாறல் மகாமந்திரம்:


இது வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் அருளியது. பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மகிமை அளவில்லாதது. ஒரே செய்யுளே மாறி மாறி வருவது போல் அமைந்திருக்கும் இத்துதியைக் கவனமாகச் சொல்ல, எதிர்பாராமல் வரும் ப்ரச்னைகள் நீங்கும். சம்ஸ்கிருதம் போல், தமிழிலும் உச்சரிப்புக் கவனத்துடன் சொல்ல வேண்டிய துதிகள் கணக்கில்லாமல் உள்ளன. அவற்றுள் ஒன்று இது.

வேல்மாறல் மஹாமந்திரம் இங்கு சொடுக்கவும்

முருகப்பெருமானின் திருஅவதாரங்கள்:

சைவ சமயக்குரவர்களுள் ஒருவரான, திருஞான சம்பந்தர் முருகனின் அவதாரமே, என்று கூறுவர். ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதரின் திவ்ய சரிதத்தில், பூர்வமீமாம்சக மதத்தைச் சார்ந்தவராக வரும் ஸ்ரீ குமாரிலபட்டரும் முருகனின் திருஅவதாரமாகவே கருதப்படுகிறார். இவரே, ஸ்ரீ ஆதிசங்கரரை, மண்டலமிச்ரரிடம் (இவர், பின்னாளில் சுரேச்வராச்சாரியார் என்ற திருநாமம் கொண்டு ஆதிசங்கரரின் சீடரானார்) சென்று அவரை வாதில் வெல்லுமாறு கூறியவர்.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சிவனாரும் உமையும் சோமசுந்தரக் கடவுளாகவும், மீனாட்சி அம்மையாகவும் திருஅவதாரமெடுத்த போது, முருகக் கடவுள் அவர்தம் மகனாக, உக்கிரபாண்டியன் என்ற திருநாமத்தோடு அவதாரம் புரிந்து அரசு செலுத்தினார்.

ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும் கொண்ட
கோலத்துக்கு ஏற்பக் காலைக் குழந்தை வெம் கதிர் போல் அற்றைக்
காலத்தில் உதித்த சேய்போல் கண் மழை பிலிற்று நிம்ப
மாலை தோள் செழியன் செல்வ மகள் வயின் தோன்றினானே.

என்று, உக்கிரபாண்டியன் திருஅவதாரம் செய்ததைத் திருவிளையாடற்புராணம் அழகுற உரைக்கிறது.

தெய்வத் திருமணம்

தெய்வத் திருமணங்கள் பல நடந்த நன்னாள் பங்குனி உத்திரம். ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்,ஸ்ரீ சீதாகல்யாணம்,ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் முதலிய திருமணங்கள் பங்குனி உத்திர நன்னாளிலேயே நடந்தன.

போரில் சூரனை வென்றால், தன் தங்கையாகிய ஜயந்தி(தெய்வானை)யை மணமுடித்துக் கொடுப்பதாக, தேவேந்திரனின் மகன் ஜயந்தன், வீரபாகுவிடம் வாக்குறுதி அளிக்க, அதன்படி, சூரசம்ஹாரம் முடிந்ததும், திருப்பரங்குன்றத்தில், பங்குனி உத்திர நன்னாளில், தேவேந்திரன், தெய்வானையை, முருகனுக்குக் கன்னிகாதானம் செய்து தந்தான்.

ஆகவே, இங்கு இவ்விழா பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.சுப்பிரமணிய ஸ்வாமிக்கும் தெய்வானை அம்பிகைக்கும், திருமண மாலைகள் சமர்ப்பித்தால், நல்ல முறையில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். தாய் தந்தையரைப் போற்றும் முகமாக, மதுரை மீனாட்சி சுந்தரரை, வணங்கி வரவேற்று, பின் அவர்கள் முன்னிலையிலேயே திருமணம் நடைபெறுகிறது.



மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.


பங்குனி உத்திர நன்னாளில், ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு, அவன் அருள் பெற்று,

வெற்றி பெறுவோம் !!!!

8 கருத்துகள்:

  1. good post bringing out entire story beautifully...
    photos are so clear and beautiful...
    from where you are getting such crystal clear pictures..?
    Thirupparankundram is very special to me....

    பதிலளிநீக்கு
  2. Thank you brother. From google images we can get these pictures. can I know why tpk is very special to you ?. It is my home town.

    பதிலளிநீக்கு
  3. வேல் மாறல் விருத்தம் குறித்தது
    நெஞ்சை நெகிழ வைத்தது..

    சீர்காழியாரின் கம்பீர குரலில்
    அறுபத்து நான்கு பாடல்களை

    நாற்பது நிமிடத்தில்
    நம்மில் மாற்றதை ஏற்படுத்தி வைக்கும்

    இது போலவே பாம்பன் சுவாமிகள்
    அருளிய அண்டமாய் அவனியாய் எனத் தொடங்கும் ஷண்முக கவசமும்..


    அது குறித்தும்
    அன்பு சகோதரி அவர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்..

    வாழ்க..
    வாழ்க..
    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
  4. ///முருகனின் பிறப்பை படிக்கிறவர்களுக்கு செல்வம் கொழிக்கும். பாவம் அகன்றுபுண்ணியம் வந்தடையும் என்று வால்மீகி இராமாயணத்தில், பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் கூறுவதாக ஒரு ஸ்லோகம் உள்ளது.///

    இந்த ஸ்லோகம் பற்றி நான் கேள்விப் பட்டதில்லை. உங்கள் பதிவுகளின் வழி நான் தெரிந்து கொள்வது ஏராளம். நன்றி பார்வதி

    பதிலளிநீக்கு
  5. தேமொழி, அந்த ஸ்லோகம் இதோ..........

    குமார சம்பவஸ் சைவ
    தன்ய: புண்யஸ்த தைலச
    பக்தஸ்சய: கார்த்திகேயே
    காகுஸ்த புவிமானவ:
    ஆயுஷ்மான் புத்ர பெளத்ரஸ் ச
    ஸ்கந்த ஸாலோக்யதாம் விரஜேத்||

    இது வால்மீகி இராமாயணம் பாலகாண்டத்தில் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. //இது போலவே பாம்பன் சுவாமிகள்
    அருளிய அண்டமாய் அவனியாய் எனத் தொடங்கும் ஷண்முக கவசமும்..


    அது குறித்தும்
    அன்பு சகோதரி அவர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்..//
    நிச்சயமாய் தங்கள் ஆவலை அடுத்த பதிவில் பூர்த்தி செய்கிறேன் ஐயா!. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அப்படியே அதை தமிழாக்கம் செய்தும் போட்டுடுங்க, எனக்கெல்லாம் சமஸ்கிரத ஞானம் கிடையாது :))))))))

    பதிலளிநீக்கு
  8. //தேமொழி said...
    அப்படியே அதை தமிழாக்கம் செய்தும் போட்டுடுங்க, எனக்கெல்லாம் சமஸ்கிரத ஞானம் கிடையாது :))))))))//

    முருகனின் பிறப்பை படிக்கிறவர்களுக்கு செல்வம் கொழிக்கும். பாவம் அகன்றுபுண்ணியம் வந்தடையும்என்பதுதான் அதன் விளக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..