நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 15 மார்ச், 2012

DEVIYIN THIRUVADI...தேவியின் திருவடி.....பாகம் 1




ஜகன்மாதாவான அம்பிகைக்கு நாம் அனைவரும் குழந்தைகளே. நாம் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதே அன்னையின் எண்ணம். தேவி அபராத க்ஷமாபன ஸ்துதி எனும் ஸ்தோத்திரத்தில்,

"குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி" (கெட்ட மகன் இருக்கலாம். ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பது என்ற எண்ணிற்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, எந்த எண்ணை ஒன்பதுடன் கூட்டினாலும், வரும் எண்ணின் கூட்டுத்தொகை, ஒன்பதுடன் கூட்டப்பட்ட எண்ணேயாகும். அதைப்போல்,நாம் ஆத்மஸ்வரூபமான தேவியுடன் ஒன்றிணைந்த நிலையிலும் சரி, அவளிடமிருந்து, நம் கர்ம வினையால் வேறுபட்ட நிலையிலும் சரி, அவளே நம்முள் உறைகிறாள்.இதை சௌந்தர்ய லஹரியில்,"மநஸ்த்வம், வ்யோமத்வம்" (நீயே மனம், நீயே ஆகாயம்) என்கிறார் ஆதி சங்கரர். இதையே அபிராமி பட்டரும்,

"அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக் "

என்று பாடியுள்ளார்.

லலிதா சஹஸ்ரநாமம், ஆயிரம் நாமங்களின் மூலமாக, தேவியின் எங்கும் நிறைந்த தன்மையைப் போற்றித் துதிக்கிறது.

அகில உலகத்திற்கும் அன்னையாகிய‌ ஸ்ரீலலிதா மஹா திரிபுரசுந்தரியின் வழிபாடு, எண்ணிய யாவையும் தர வல்லது. நம் சித்தாகாசத்தினுள் உறைந்திருக்கும் அன்னையை நித்தமும் நாம் வழிபட வேண்டுமென்றாலும், சில சிறப்பான நாட்களை அன்னையின் அருளை எளிதில் நாம் பெற வேண்டி, நம் பெரியோர் வகுத்து வைத்திருக்கிறார்கள்.    

அம்பிகையின் வழிபாட்டிலும் ஒன்பது என்ற எண்ணிற்கு பெரும் பங்குண்டு. நவாவரண பூஜை, நவராத்திரி வழிபாடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, நவராத்திரி வழிபாடு தேவியின் அருட்சக்தியை அதிக அளவில் நமக்குப் பெற்றுத்தர வல்லது.

வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. பங்குனி அமாவாசைக்குப் பின் வரும் 'வசந்த நவராத்திரி', ஆடி அமாவாசைக்குப் பின் வரும், 'ஆஷாட(வாராஹி) நவராத்திரி', புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும், 'சாரதா நவராத்திரி' (இதைத்தான் நம்மில் பெரும்பாலானோர் கொண்டாடுகிறோம்), மற்றும் தை அமாவாசைக்குப் பின் வரும் 'சியாமளா நவராத்திரி'.

இந்த வருடம் 'வசந்த நவராத்திரி' வரும் வெள்ளி, மார்ச் 23, 2012 யுகாதி பண்டிகையன்று ஆரம்பித்து, இராம நவமியன்று நிறைவடைகிறது.

சாரதா நவராத்திரியில் அசுர சம்ஹாரம் முடிந்து, வெற்றி தரும் கொற்றவையாய்த் திகழ்கிற அன்னை, சாந்த ஸ்வரூபிணியாய் ஞானோபதேசம் செய்கிற ஞானாம்பிகையாய் கருணை மழை பொழிகிற தினங்களே வசந்த நவராத்திரி.


வசந்த நவராத்திரியும் சாரதா நவராத்திரியுமே நவராத்திரிகளில் சிறப்பு வாய்ந்தவையாகக் கூறப்படுகிறது. உயிர்களுக்கு இதமளிக்கும் வசந்த காலத்தில் வருவதாலேயே இதற்கு 'வசந்த நவராத்திரி' எனப் பெயர். இது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் துவக்கி வைக்கப்பட்ட பெருமை உடையது.

தேவி வழிபாட்டில் இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று வாமாசாரம். இதுவே 'ஸமயாசாரம்' என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொன்று தக்ஷிணாசாரம்.

வாமாசாரம்:

'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற பாரதியின் வார்த்தைக்கொப்ப, நம் உடலினுள்ளே 'குண்டலினி' எனும் தெய்வத்தன்மை நல்கும் உயிர்ச்சக்தியாய்த் திகழ்கிறாள் அம்பிகை. அவளின் திருவடிகளே சரணம் என்று சரணாகதி அடைந்தோர்க்கு, அதை விழிப்படையச் செய்யும் வழியையும் காட்டி, அதில் வெற்றி காணவும் உதவுகிறாள். அதில் வெற்றி அடைந்து, சஹஸ்ராரக் கமலத்தில், காமேஸ்வரருடன் இணைந்த நிலையில், சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபிணியாகத் தேவியைக் காணும் பேறு பெற்றால், சாயுஜ்ய பதவி (தேவியுடன் இரண்டறக் கலத்தல்) கிட்டும்.

'குண்டலினி யோகம்' என்பது, நாமும் இறைவியும் ஒன்றே என்ற நிலையை அடைவதற்கு, வழிகோலும் ஒரு சாதனமாகும் .  அது சுலபமல்ல. அது மிகக் கடுமையான வழிமுறையாகும். 

வசந்த நவராத்திரி யோக சாதனை செய்வோருக்கு, மிகப் பலன் தரும் காலமாகும். 'அஞ்ஞான த்வாந்த தீபிகா' வாக அஞ்ஞானத்தை அகற்றி ஞானத்தைத் தரும் அம்பிகையை இக்காலக் கட்டத்தில் வழிபட, கோரிய பலன் கிட்டும். மஹாமேரு வைத்து வழிபடும் இல்லங்களிலும் கோயில்களிலும் இது கட்டாயம் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். 

அம்பிகையின் வழிபாட்டு முறைகளில் வாமாசாரம் அல்லது  ஸமயாசாரம் என்று சொல்லப்படும் உள்முகமாக (அந்தர் முகமாக) அம்பிகையை ஆராதித்தலே சிறந்தது. இது, குண்டலினி சக்தியை நம்முள் இருக்கும் ஆதாரச் சக்ரங்களான, மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அனாஹதம், விசுத்தி,ஆஜ்ஞா முதலிய சக்ரங்கள் வழியாக, யோகப்பயிற்சியின் மூலம், மேலற்றி, சஹஸ்ராரக் கமலத்தில் அம்பிகையைக் காணுதல்.  மனம் அடங்கிய யோகிகளாலேயே இது இயலும்.

'தஹராகாச' மான இருதயத்தில், அம்பிகையை ஸ்ரீசக்ர ரூபமாகப் பாவித்து செய்யப்படும் பூஜையே 'ஸமயாசாரம்' என்று கூறுகிறார் பாஸ்கரராயர் எனும் தலை சிறந்த தேவி உபாசகர்.

"தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி 
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:" 

என்பது அவருடைய வாக்கு.

லலிதா சஹஸ்ரநாமம் இதையே "ஸமயாசார தத்பரா" (ஸமயாசாரமாக உபாசனை செய்தால் மகிழ்ச்சி கொள்பவள்) என்று கூறுகிறது.

இதில் மந்திரசித்தி முதல் சமாதி நிலை முதல் 30 நிலைகள் உள்ளன. யோகசாதனா மார்க்கத்தில் ஸ்ரீவித்யாமார்க்கமே தலைசிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும்.

ஆனால், அம்பிகை பக்திக்கு வசப்படுபவள். லலிதா சஹஸ்ரநாமம் அவளை 'பக்தி வச்யா' என்று புகழ்கிறது. மனப்பூர்வமான பக்திக்கு அம்பிகை நேரில் தோன்றி கருணை புரிவாள். 

தக்ஷிணாசாரம்:

இது 'பஹிர் முகமாக' அதாவது வெளிமுகமாக தேவியை வழிபடும் முறைகளைக் குறிக்கும். இது யோகிகளல்லாத சாமான்ய மனிதர்களுக்கு உகந்தது. அவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

1. மந்திர உச்சாடனம் அதாவது மூல மந்திரங்கள், பீஜங்கள் முதலியவற்றை குருமுகமாக உபதேசம் பெற்று, முறைப்படி உச்சரித்தல்,

2. யந்திர வழிபாடு அதாவது ஸ்ரீசக்கரம், மஹாமேரு முதலிய யந்திரங்களைப் பூஜித்து வழிபாடு செய்தல், இது 'கௌல பூஜை' எனப்படுகிறது. லலிதா சஹஸ்ரநாமத்தில் "கௌல மார்க்க தத்பர ஸேவிதா" (கௌல மார்க்கத்தின் மூலமாக ஸேவிக்கப் படுபவள்) என்று தேவி குறிப்பிடப்படுகிறாள்.கௌலினி எனும் நாமத்திற்கு சிவ சக்தி ஸ்வரூபமானவள் என்பது பொருள்.

3. தாந்திர சாஸ்திரம் அதாவது, கை அசைவின் மூலமாகச் செய்யப்படும் முத்திரைகள் மூலமாக ஆராதிப்பது. இது மந்திர உச்சாடனத்தில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே இயலும். இது துரித தேவ ஆராதனை என்று சொல்லப்படுகிறது.

மேற்கண்ட யாவற்றிற்கும் குருவின் வழிகாட்டுதல் என்பது இன்றியமையாதது.


அடுத்த பதிவில், குண்டலினி யோகம், ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு, நவாவரண பூஜை, மற்றும் எளிய முறையில் இல்லத்தில் பூஜை செய்வது எப்படி என்பனவற்றைப் பார்ப்போம்.

வெற்றி பெறுவோம்!

4 கருத்துகள்:

  1. @parvathy madam,

    i need your help in rectifying katyayini stotra in transliterated in tamil....
    i dont have your email id....can you send me test mail please.
    my mail id is sriganeshh at the rate of yahoo dot com

    பதிலளிநீக்கு
  2. Thq for explaining the four seasonal navarathris. can u also explain the significance of "Meru" kept in house?

    பதிலளிநீக்கு
  3. அருமை நல்லப் பகிர்வு..

    ///"குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி" (கெட்ட மகன் இருக்கலாம். ஆனால் ஒரு போதும் கெட்ட தாய் இல்லை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.///

    இதைத் தான் இசைஞானி இளையராஜா (இளங்கோ) அவர்கள் "என்றும் கெட்டுப் போனத் தாயும் இல்லையடி ஆத்தா" என்றுப் பாடி இருப்பார் என நினைக்கிறேன்... அதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனைப் பல நேரங்களில் வரும். அவரும் சக்தியை, அன்னை மூகாம்பிகையை ஆராதரிப்பவர் தானே.

    நன்றிகள் சகோதரியாரே!

    A small request, if can, could you please cancel this word typing option.
    Thanks.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..