நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

KANNANAI NINAI MANAME....BAGAM IRADNU... PART..19..கண்ணனை நினை மனமே.. பகுதி 19. 'கொழுங்கயலாய்' அவதரித்த எம்பெருமான்!... (மச்சாவதாரம்).

Image result for macha avatharam

அரசனான சத்ய விரதரை, அவரது பக்தியினாலும், பற்றற்ற தன்மையினாலும், 'முனிவர்' என்றே குறிப்பிடுகிறார் பட்டத்திரி.

குளத்திலும், பின்பு ஏரியிலும் விடப்பட்ட மீன், அதை அடைத்துக் கொண்டு, மிகப் பெரும் உருவம் தாங்கி வளர்ந்தது என்று பார்த்தோம். பின் அது சமுத்திரத்தில் சேர்க்கப்பட்டது. பட்டத்திரி, முனிவரான சத்யவிரதர், மீனாகத் தோன்றியது பகவானே என்றறிந்திருந்தபடியால், பகவானின் கட்டளைப்படியே, தம்முடைய யோக மகிமையினால் அந்த மீனை, கடலுக்குக் கொண்டு சென்றார்  என்று  சொல்கிறார். 
மிகப் பெரும் மீனின் உருவம் கொண்ட எம்பெருமானைப் பணிந்த சத்ய விரதர், பிரளயத்தைக் காண விரும்பி, எம்பெருமானைப் பிரார்த்தித்ததாகவும், எம்பெருமான் அவரை, ஏழு நாட்கள் பொறுத்திருக்குமாறு  திருவாய் மலர்ந்தருளியதாகவும் உரைக்கிறார் பட்டத்திரி.

( யோக³ப்ரபா⁴வாத்³ப⁴வதா³ஜ்ஞயைவ 
நீதஸ்ததஸ்த்வம்ʼ முனினா பயோதி⁴ம் | 
ப்ருʼஷ்டோ(அ)முனா கல்பதி³த்³ருʼக்ஷுமேனம்ʼ
 ஸப்தாஹமாஸ்வேதி வத³ன்னயாஸீ​: || (ஸ்ரீமந் நாராயணீயம்).

பகவான் குறிப்பிட்ட நாள் வந்த போது, பெரும் மழை கொட்டியது!. அந்த மழை நீரில் பூமி மறைந்தது!!!. சத்ய விரதர், சப்த ரிஷிகளுடன், பிரளய நீரில் சுழன்றார். அந்நிலையில், பகவானைத் துதித்து, அவரைச் சரணடைந்தார்!!!. அச்சமயம், பகவானின் ஆணைப்படியே செயல்படும் பூதேவி நாச்சியார்,  ஒரு பெரிய தோணி வடிவில் வர, சத்ய விரதரும், சப்த ரிஷிகளும் அதில் ஏறிக் கொண்டார்கள். ஆயினும் பிரளய நீரில், தோணி பயங்கரமாக ஆடவே, பகவான், நீரிலிருந்து மிகப் பெரும் மீனாக, மீண்டும் தோன்றியருளினார்!!. ல‌க்ஷம் யோஜனை தூரத்துக்கு நீண்ட, மிகப் பெரும் பிரகாசத்துடன் தோன்றிய பகவானைக் கண்டு மகிழ்ந்த முனிவர்கள் அவரை வணங்கினர். அவரது ஆணைப்படி, அவரது உயர்ந்த கொம்பில், தோணி வடிவிலிருந்த பூமியைக் கட்டினார்கள்.

பகவான் தோணியை இழுத்துக் கொண்டு, முனிவர்களுக்கு உலகில் பல பகுதிகளைக் காண்பித்த வண்ணம் சஞ்சரித்தார். அரசரான சத்யவிரதர், அவரைத் துதிக்க, அவருக்கு உத்தமமான ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். கல்பத்தின் முடிவில் (பிரளயம் அடங்கிய பின்), சப்த ரிஷிகளை முன்போலவே அவர்களது ஸ்தானத்தில் இருக்குமாறு செய்து, சத்யவிரதரை, அடுத்த வைவஸ்வத மன்வந்திரத்திற்கு மனுவாக நியமித்தார். பின் கடும் கோபத்துடன், ஹயக்ரீவாசுரனைத் தாக்கினார்!!!.

தம் உயர்ந்த கொம்பினால், அசுரனுடைய மார்பைப் பிளந்து, அவனை முடித்த பகவான், வேதங்களை மீண்டும் பிரம்மாவிற்கு தந்து, அவரை மகிழ்வித்த‌ருளினார். இத்தகைய மகிமையுடைய குருவாயூரப்பன், தம்மைக் காக்க வேண்டுகிறார் பட்டத்திரி!!..

(ஸ்வதுங்க³ஷ்ருʼங்க³க்ஷதவக்ஷஸம்ʼ தம்ʼ 
நிபாத்ய தை³த்யம்ʼ நிக³மான்க்³ருʼஹீத்வா | 
விரிஞ்சயே ப்ரீதஹ்ருʼதே³ த³தா³ன​: 
ப்ரப⁴ஞ்ஜனாகா³ரபதே ப்ரபாயா​: || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி, அண்டத் தப்பால்
எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர் ! இனவண் டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும்பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே 

என்றும்

முந்நீரை முன்னால் கடந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே

என்றும்  திருமங்கையாழ்வார் எம்பெருமானின் மச்சாவதாரத்தைப் போற்றுவதை, இங்கு நாம் தியானிக்கலாம்!.

(தொடர்ந்து தியானிப்போம்!).

(அடுத்த பகுதி... மஹா பக்தனான அம்பரீஷனின் திவ்ய சரிதம்).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, 'தமிழ் வாசல்' குழுமத்திலும், 'அதீதம்' மின்னிதழிலும் தொடராக வெளிவருகிறது!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..