நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 9 ஆகஸ்ட், 2017

KANNANAI NINAI MANAME.. BAGAM.. 2.. PART 18..கண்ணனை நினை மனமே.. பகுதி 18. சத்ய விரதனின் பக்தி!.. (மச்சாவதாரம்!)..

Image result for macha avatharam

'முன்பொரு சமயம், ஹயக்ரீவன் என்ற அசுரனால், பிரம்மாவிடமிருந்து வேதங்கள் அபகரிக்கப்பட்ட போது, பகவான் மீன் வடிவில் தோன்ற விரும்பினார்!' என்று  பகவானின் மச்சாவதாரத்தைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார் பட்டத்திரி!!..
ஆறாவது மன்வந்திர முடிவில் நிகழ்ந்த அவாந்தர பிரளயத்தின் போது, அசுரன் வேதங்களை அபகரித்தான் என்கிறார் பட்டத்திரி. இது உண்மையான பிரளயம் இல்லை என்றும், சத்ய விரதனின் ஞானோபதேசத்துக்காகவே, பிரளயம் போன்ற ஒரு காட்சியை பகவான் காண்பித்தார் என்பர்.

இது பற்றிய புராணத்தை, நாம் சற்று சுருக்கமாகப் பார்க்கலாம்!.

சோமுகாசுரன் என்ற அசுரன் அக்கினி மத்தியிலே சிவனை வேண்டி தவம் செய்து வரங்கள் பல பெற்றவன். ஹ‌யக்கிரீவன் என்பது இவனது மற்றொரு பெயர். ஒரு நாள் சத்தியலோகத்தில், பிரம்மதேவன் சோர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமாக வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவன், வேதங்களைத் தன் யோகசித்தியினால் கவர்ந்து கொண்டுபோய் கடலடியில் ஒளித்து வைத்தான். வேதங்கள் இல்லாமல், பிரம்மன் சிருஷ்டிகள் செய்ய இயலாது.

தேவர்கள் இதனைக் கண்டு பயந்து போய், திருமாலிடம் முறையிட்டனர். அவர், தாம் அவர்களைக் காப்பதாக, அபயம் அளித்தார்.

அப்போது பிரளய காலம்.  சமுத்திர ராஜன்  கடவுள் ஆணைப்படி, பரந்த இவ்வுலகங்களை தன் அலைக்கரத்தால் அணைக்கத் துவங்கினான் . அனைத்துலகங்களும் மூழ்கத்துவங்கின. அப்போது, திராவிட (தமிழ்) தேசத்தின் அரசனாக இருந்தவர்  சத்தியவிரதன் ( இவர் பாண்டிய மன்னர் எனவும், மச்சாவதாரம் நடைபெற, இவரும் ஒரு காரணம் என்பதாலேயே, பாண்டிய நாட்டின் கொடிச் சின்னம், மீன் ஆயிற்று எனவும் சொல்வதுண்டு).

இவர் ஒரு நாள் 'கிருதமாலா' என்னும் ஆற்றில் அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தார். அவர் நீரை கையில்அள்ளி அர்க்கியம் விடும் போது ஒரு மீன்குஞ்சு அவர் கையில் வந்தது. உடனே அவர், அதை நீரில் விட்டு விட்டு, திரும்பவும் நீரை முகந்தார். மீண்டும் அவர் கையில் மீன் குஞ்சு!!!!.  நீரில் விடப்பட்ட போது, மிகவும் பயந்திருப்பதாக அந்த மீன் குஞ்சு காட்டிக் கொண்டதால், தம் தீர்த்த பாத்திரத்தில் அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு சென்றார் சத்யவிரதன் என்றே கூறுகிறார் பட்டத்திரி.

ஸத்யவ்ரதஸ்ய த்³ரமிடா³தி⁴ப⁴ர்துர்
ந‌தீ³ஜலே தர்பயதஸ்  ததா³னீம் | 
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதா க்ருʼதிஸ்-
த்வம‌த்³ருʼஸ்²யதா²​: கஸ்²சன பா³லமீன​: || (ஸ்ரீமந் நாராயணீயம்).

அதிசயித்த மன்னர்,  அதைத் தன் கமண்டலத்துக்குள் விட்டுக் கொண்டு, தன் அரண்மனை வந்தார். வந்ததும் அதிர்ச்சி, அந்த மீன், அவர் கமண்டலத்தை அடைக்கும் அளவு பெரிதாகியிருந்தது. உடனே அதை ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் விட்டார். உடனே அது மேலும் பெரிதாகி, பாத்திரத்தையும் அடைத்துக்கொண்டது.உடனே அதை ஒரு பெரிய கிணற்றில் விட்டார். அது மேலும் வளர்ந்து பெரிதாகியது. பின், தன் வீரர்கள் துணையுடன் அதை ஒரு குளத்திலும் பின் ஒரு ஏரியிலும் விட்டார். அவற்றையும் அடைத்துக் கொண்டு மீன் வளர்ந்தது. பின் அதைக் கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டார். அந்த மீன் மிகப்பெரும் உருவம் கொண்டு வளர்ந்தது.

"இது சாதாரண மீன் அல்ல" என்று உணர்ந்த அவன், மீனாக வந்தது   பகவானே என உணர்ந்து வணங்கினார்.

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே  ( திருமங்கையாழ்வார்).

​(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளி வருகிறது!!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..