நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 5 அக்டோபர், 2015

KANNANAI NINAI MANAME... PART 42....கண்ணனை நினை மனமே!...பகுதி 42... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..
இந்தப் பகுதி, (அக்காலத்தில் வழங்கிய‌ )  பூகண்டத்தின் பிரிவினைகளைப் பற்றிச் சொல்கிறது. இது கொஞ்சம் ஆராய்ச்சிக்குரிய பகுதி என்றே சொல்லலாம்!.. பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவினைகளையே பட்டத்திரியும் சொல்லியிருக்கிறார்.  பூகண்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், எம்பெருமான் ஒவ்வொரு ஸ்வரூபத்தில் விளங்குவதையும், குறிப்பிட்ட பக்தர்களால் ஆராதிக்கப்படுவதையும் சொல்கிறார்.
இந்த தசகத்தில் குறிப்பிட்ட சில ஸ்லோகங்கள், குறித்த பலனை வேண்டிச் சொல்லப்பட்டவை. அவற்றை தொடர்ந்து பாராயணம் செய்ய, கோரிய பலனை அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.. அந்த ஸ்லோகங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஸ்லோகங்களைப் பார்க்கும் முன்பாக, பாகவதத்தின்படியான பிரிவினைகளை முதலில் பார்க்கலாம். இது, ஸ்லோகங்களைப் படிக்கும் போது உதவியாக இருக்கும்..

பூமண்டலம், ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றே ஜம்புத்வீபம்.. இது உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. இதுவே ஆசிய கண்டம். அதன் நடுவில் ஒன்பது வர்ஷங்கள் உள்ளன. அவை, இளாவ்ருதம் (இமயமலை), பத்ராசுவம் (சீனா), ஹரிவர்ஷம் (அரேபியா), கேதுமாலம் (இரான்), ரம்மியகம் (ரஷ்யா),  ஹிரண்மய வர்ஷம் (மஞ்சூரியா) உத்தரகுரு (மங்கோலியா), கிம்புருஷம் (இமயமலை அடிவாரம்), பாரத வர்ஷம் என்பவை ..(எனக்குத் தெரிவிக்கப்பட்டவையே இவை... இவற்றில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கக் கோருகிறேன்..).

முதல் ஸ்லோகம், இளாவ்ருதத்தில், ஸங்கர்ஷண ரூபியாக விளங்கும் பகவானைத் துதிக்கிறது.  பார்வதி முதலான பெண்கள் மட்டுமே வசிக்கின்ற இந்த இடத்தில், பார்வதியின் பதியான பரமேஸ்வரன்,  மந்திரங்களாலும் துதிகளாலும் ஸங்கர்ஷணரை  ஆராதிக்கிறார்.

அடுத்து, இளாவ்ருதத்திற்கு கிழக்கில் உள்ளது பத்ராசுவம். இங்கிருக்கும் பத்ரச்ரவஸர்கள் என்ற ரிஷிகளால் துதிக்கப்படுபவரும், கல்ப முடிவில் மறைந்து போன வேதங்களை மீட்டருளிய வல்லவரும், (குதிரை முகம் உடைய) ஹயக்ரீவராக திருவுருக் கொண்டவருமான பகவானை தியானிக்கிறார் பட்டத்திரி.

(ப⁴த்³ராஸ்²வ நாமக இளாவ்ருʼதபூர்வவர்ஷே
ப⁴த்³ரஸ்²ரவோபி⁴ர்ருʼஷிபி⁴​: பரிணூயமானம் | 
கல்பாந்தகூ³ட⁴ நிக³மோத்³த⁴ரணப்ரவீணம்ʼ
த்⁴யாயாமி தே³வ ஹயஸீ²ர்ஷதனும்ʼ ப⁴வந்தம் || (ஸ்ரீமந் நாராயணீயம், பலன்: கல்வியில் சிறந்து விளங்கலாம்)).

இளாவ்ருதத்திற்கு தெற்கில் இருக்கும் ஹரிவர்ஷத்தில், பிரகலாதன் முதலான புருஷர்களால் சிறப்பாக ஆராதிக்கப்படுபவரும், வெண்மையாகவும், உயர்ந்த, சாந்தமான ஸ்வரூபமுடையவரும், சுத்த ஞானத்தை உபதேசம் செய்பவரும் நரசிம்ம வடிவினருமான பகவானை தியானிக்கிறார் பட்டத்திரி...

(த்⁴யாயாமி த³க்ஷிணக³தே ஹரிவர்ஷவர்ஷே
ப்ராஹ்லாத³முக்²யபுருஷை​: பரிஷேவ்யமாணம் | 
உத்துங்க³ஸா²ந்தத⁴வலாக்ருʼதிமேகஸு²த்³த⁴
ஜ்ஞானப்ரத³ம்ʼ நரஹரிம்ʼ ப⁴க³வன் ப⁴வந்தம் || (ஸ்ரீமந் நாராயணீயம்)).


(சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை,
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியை.......  (திருமங்கையாழ்வார்)).

​(தொடர்ந்து தியானிக்கலாம்).​

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..