நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME....PART 34...கண்ணனை நினை மனமே!... பகுதி 34...துருவ சரித்திரம் (தொடர்ச்சி).

எம்பெருமான் துருவனுக்கு ஆசி கூறி, அவன் முன்பிருந்து தம் திருவுருவை மறைத்தருளியதும், அவன்  தன் நாட்டு மக்கள் அனைவரையும்  மகிழ்விப்பவனாக, நகருக்குத் திரும்பினான். தன் தந்தை வானப்பிரஸ்தம் மேற்கொண்ட பிறகு, அரசாட்சியை ஏற்றான்.  நீண்ட காலம் அரசாண்டு இன்புற்று வாழ்ந்தான்.
பின்னர், ஒரு சமயம் யக்ஷர்களுடன் நடந்த போரில், தன் சகோதரனான உத்தமன் கொல்லப்படவே, துருவன் யக்ஷர்களுடன் யுத்தம் செய்தான். அப்போது, ஸ்வாயம்புவ மனு, அங்கு தோன்றி, போரைக் கைவிடுமாறு துருவனுக்கு அறிவுறுத்தினார்.  அதனால் போரை நிறுத்தினான் துருவன்.

இதனால் மனம் மகிழ்ந்த யக்ஷர்களின் அரசனான குபேரன், துருவன் முன்பாகத் தோன்றினார். ( துருவன் வேண்டும் வரங்களை அவர் அளிப்பதாகக் கூற,) பக்தர்களின் தலைசிறந்தவரான அந்த மகாத்மா, பகவானிடத்தில் திடமான பக்தியையே அவரிடம் வரமாகப் பெற்றான்.

(நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ,
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? (நம்மாழ்வார்)).

(இன்ன முதெனத் தோன்றி யோரைவர் யாவரையும் மயக்க, நீவைத்த
முன்ன மாயமெல் லால்முழு வேரரிந்து, என்னையுன்
சின்ன மும்திரு மூர்த்தியும் சிந்தித் தேத்திக் கைதொழ வேயரு ளெனக்கு,
என்னம் மா! என் கண்ணா! இமையோர்தம் குலமுதலே! (நம்மாழ்வார்)).

"ஹே குருவாயூரப்பா!.. தன் ஆட்சியின் முடிவில், உமது தூதர்களால் கொண்டு வரப்பட்ட விமானத்தில் ஏறி, தமது தாயுடன் துருவ பதத்தில் என்றும் ஆனந்தமாக இருக்கிறார். இப்படி, உம் அடியார்களைக் காக்கும் நீர், என் நோய்களை நீக்கியருள வேண்டும்' என்று பிரார்த்தித்து, தசகத்தை நிறைவு செய்கிறார் பட்டத்திரி!..

( "அந்தே ப⁴வத்புருஷனீதவிமானயாதோ
மாத்ரா ஸமம்ʼ த்⁴ருவபதே³ முதி³தோ(அ)யமாஸ்தே | 
ஏவம்ʼ ஸ்வப்⁴ருʼத்யஜனபாலனலோலதீ⁴ஸ்த்வம்ʼ
வாதாலயாதி⁴ப நிருந்தி⁴ மமாமயௌகா⁴ன் | |  (ஸ்ரீமந் நாரயாணீயம்)." ).

பட்டத்திரி, துருவ சரித்திரத்தை இவ்விதம் நிறைவு செய்கிறார். ஆனால், ஸ்ரீமத் பாகவதத்தில், அரசாட்சி ஏற்ற‌ துருவன், யாகங்கள் பல செய்ததும், நீண்ட காலம் அரசாண்ட பின்னர், தவம் செய்ய விரும்பி பதரிகாசிரமம் புறப்பட்டதும், அங்கு சித்தத்தை பகவானிடம் நிறுத்தி, தவத்தில் ஈடுபட்டதும் விரிவாகக் கூறப்படுகின்றன.

தவத்திலிருந்த துருவன் முன்பாக, பேரொளி மயமானதொரு விமானம் தோன்றியது. அதில், சதுர்புஜங்களுடன், செந்தாமரையை ஒத்த விழிகளுடன், அழகிய ஆபரணங்கள் அணிந்தவர்களான இரண்டு தேவதூதர்கள் தோன்றினர். அவர்கள் பகவானுடைய சேவகர்கள் என்று அறிந்து கொண்ட துருவன், பக்தி மேலிட்டு, பகவானுடைய நாமங்களை  உச்சரித்தவாறே அவர்களை வணங்கினார்.

தேவதூதர்கள் அவரிடம், 'கிடைத்தற்கரிய உன்னத பதம் உம்மால் அடையப்பட்டது. அதை தேவர்களும் சப்தரிஷிகளுங்கூட பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். இந்த விமானம் உமக்காக, பகவானால் அனுப்பப்பட்டது. நீர் இதிலே ஏறி, அங்கு செல்லலாம்!' என்று உரைத்தார்கள். அவர்கள் கூறியதைக் கேட்ட துருவன், நீராடி, தமது நித்ய அனுஷ்டானங்களை நிறைவு செய்து, வனத்திலிருந்த முனிவர்களின் ஆசியைப் பெற்று, விமானம் நோக்கிச் சென்றார். அச்சமயம், அங்கு தோன்றிய யமதர்மராஜன், தமது சிரத்தில், துருவன் த‌ன் பாதத்தை வைத்து, விமானத்தில் ஏற வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவர் கோரிக்கையை ஏற்ற துருவஸ்வாமி, பொன்மயமான தமது திவ்ய சரீரத்துடன், அவர் சிரத்தில் பாதத்தை வைத்து விமானத்தில் ஏறினார் . (துருவன், மரணத்தையும் வென்றார் என்பது இதன் பொருளாகச் சொல்லப்படுகின்றது).  அந்த வேளையில், இத்தனைக்கும் காரணமான தன் தாயை நினைத்தார் துருவன். அவளை விட்டு விட்டு, தான் மட்டும் செல்வதா என்ற சிந்தனையில் ஆழ்ந்த துருவனிடம், தேவ தூதர்கள், அவருக்கு முன்பாக, விமானத்தில் செல்லும் ஸூநிதியை சுட்டிக் காட்டினர்.

மகிழ்வுடன், மூவுலகங்களையும், சப்தரிஷி மண்டலத்தையும் கடந்து, நிலையான கதியாகிய விஷ்ணுபதத்தை அடைந்தார் துருவன்.

இவ்வாறு ஸ்ரீமத் பாகவதம், துருவ சரித்திரத்தை நிறைவு செய்கிறது.

தொடர்ந்து தியானிக்கலாம்..

அடுத்த தசகத்தில்..ப்ருது சரித்திரம்...

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..