நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME.. PART 36.. PRUTHU CHARITHRAM...கண்ணனை நினை மனமே.. பகுதி 36.. ப்ருது சரித்திரம். (தொடர்ச்சி..)


வேனன் அழிந்ததும், முனிவர்கள் வேதனையடைந்தனர்.. மீண்டும் நாட்டிற்கு அரசன் வேண்டுமல்லவா?!...துஷ்டர்களாகிய நாட்டு மக்களுக்கு பயந்தவர்களான‌ முனிவர்கள், வேனனின் தாயிடம் சென்று, அவளால் பல நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வேனனின் உடலை வாங்கி, அதன் தண்டாயுதம் போன்ற துடையை தங்கள் மந்திர சக்தியால் கடைந்தனர். அதனால், வேனனின் பாவம் விலகியது.. அதன் பின், கை கடையப்பட்ட போது, பகவான் (ப்ருது என்னும் பெயருடையவராக) அதிலிருந்து தோன்றினார்!!!!!!....

'ப்ருது' என்ற திருநாமத்தால்  பிரசித்தி உடையவரான எம்பெருமான்  எவ்விதம் விளங்கினார் என்று பட்டத்திரி கூறுகிறார்.

"முனிவர்களால் உபதேசிக்கப் பெற்ற, ஸூதர்கள் என்னும் பாடகர்களால், எதிர்காலத்தில் செய்யவிருக்கும் பல லீலைகளைப்  பாடி, துதிக்கப்பட்டவராக‌ நீர் இருந்தீர்!..வேனனின் கொடிய செயல்களால், அனைத்து வளங்களையும் பூமி தேவி மறைத்து வைத்திருந்தாள். (அத்தகைய) பூமியை, உமது வில்லினால் சமப்படுத்தினீர்!!!..."

(விக்²யாத​: ப்ருʼது²ரிதி தாபஸோபதி³ஷ்டை​:
ஸூதாத்³யை​: பரிணுதபா⁴விபூ⁴ரிவீர்ய​: | 
வேனார்த்யா கப³லிதஸம்பத³ம்ʼ த⁴ரித்ரீம்ʼ
ஆக்ராந்தாம்ʼ நிஜத⁴னுஷா ஸமாமகார்ஷீ​: || (ஸ்ரீமந்நாராயணீயம்)).

வேனனுடைய மைந்தனாக, பகவான் அவதரித்ததும், 'அகலகில்லேன்!' என்று அவருடனேயே உறையும் திருமாமகளும் அவதரித்தாள்!.. இம்முறை தனியாக அல்ல!.. எம்பெருமானுடனேயே, 'அர்ச்சிஸ்' என்ற திருநாமத்துடன் தாயார் அவதரித்தாள். ப்ருதுவுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.. இதை பாகவதம் தெரிவிக்கிறது..அதன் பின்னர் காமதேனு உருக்கொண்ட பூமாதாவிடமிருந்து, அவள் மறைத்து வைத்திருக்கும் வளங்களை வெளிக்கொண்டு வருவதற்காக, ப்ருதுவானவர், தேவர், மனிதர் முதலான குலத்தலைவர்களை கன்றுகளாக்கி, அவரவர்க்குரிய கடமைகளை பாத்திரங்களாக்கி, அன்னம் முதலான, அவரவர்க்கு வேண்டியவற்றை கறந்து அளித்தார். (இந்நிகழ்வை முன்னிட்டே, 'கோவத்ஸ விரத பூஜை' கொண்டாடப்படுகின்றது..ஐப்பசி, கிருஷ்ண பட்ச துவாதசியன்று, இந்த விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.).

பூமி, தர்மத்தால் நிலைபெறுவது!.. அதர்மம் ஆட்சி செய்யும் போது, தர்மத்தை மீறிய செயல்கள் நடைபெறுகின்றன. இதை சகிக்கவொண்ணாமல், மழை பொய்த்துப் போகிறது.. பூதேவி தன் வளங்களை மறைத்துக் கொள்கிறாள்..தர்மத்தை நிலைநிறுத்துபவன் ஆளத் தொடங்கினால், பூதேவியின் வளங்கள் வெளிவருகின்றன. இங்கு, ப்ருதுவானவர், 'வில்லினால் பூமியை சமப்படுத்தினார்' என்பதை, 'மேடு பள்ளங்களை நீக்கி சமப்படுத்தினார்' என்ற பொருளில் மட்டுமல்லாது, நிலையான தர்மத்தினால், ஆட்சியிலிருந்த சீர்கேடுகளை நீக்கி, மக்களிடமிருந்த ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, நல்லாட்சியைத் தந்தார்!' என்ற பொருளிலும் கொள்ள வேண்டும்!..

மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.

என்னும் நம்மாழ்வார் திருவாக்கினையே நம் பிரார்த்தனையாகக் கொண்டு,

தொடர்ந்து தியானிப்போம்!..

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..