நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 19 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME...PART 31....கண்ணனை நினை மனமே!... பகுதி 31..த‌க்ஷ யாகம்.


த‌க்ஷ பிரஜாபதியின் யாகம் பற்றி, அநேகமாக, நம்மில் பலருக்குத் தெரிந்திருக்குமெனினும், இந்தப் பதிவில், பட்டத்திரியின் திருநோக்கு வழியாக, நாம் தக்ஷ யாகம் பற்றிப்  பார்க்கலாம்.​
​'பிரம்மாவின் புதல்வரான தக்ஷன், ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான ப்ரஸூதியை மணந்தார். பிரம்ம தேவர், தம் மகனிடம் அதிகமாகக் கண்டிப்புக் காட்டாத காரணத்தால், தக்ஷனுக்கு ரஜோகுணம் மேலிட்டது. அதன் காரணமாக, பகவானிடத்து பக்தியில்லாது போயிற்று. அதன் விளைவாக, மன அமைதியின்றி அலைந்தான். ஸ்ரீவிஷ்ணுவின் மற்றொரு உருவாகிய பரமசிவனை வெறுத்தான்.  தன் மகள் சதிதேவியை மணந்தவர் என்றிருந்த போதும், தக்ஷனின் வெறுப்புக் குறையவில்லை.. அதை, தான் செய்த யாகத்தில் வெளிக்காட்டி, தன் புதல்வியான சதி தேவியை அவமதிக்கவும் செய்தான். சதி தேவி, யாக சாலையில், தன் உடலை நீத்தாள்' என்றுரைக்கிறார் பட்டத்திரி!..

ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த நிகழ்வு, விரிவாக விளக்கப்படுகின்றது. அதனைச் சுருக்கமாகப் பார்க்கலாம்!.

ஒரு சமயம்,  பிரஜாபதிகள் செய்த ஸத்திர யாகத்தில், தேவர்கள் முதலான அனைவரும் வருகை புரிந்திருந்தனர். அச்சமயம், யாகத்தில் பங்கேற்க, தக்ஷனும் வருகை புரிந்தார். பிரம்மாவையும் மஹாதேவரையும் தவிர அனைவரும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். பிரம்ம தேவரை வணங்கிய தக்ஷன், தன் மகளை மணந்த மாப்பிள்ளையாகிய மஹாதேவர், தனக்கு மரியாதை செய்யாததை எண்ணி வெகுண்டார். கடும் சொற்களால் அவரை நிந்தித்தார் ( தாம் எழுந்து மரியாதை செய்யாத காரணத்தை, பின்னர், தாக்ஷாயணியிடம் சிவபிரான் விளக்கியதும் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது). தொடர்ந்த சில நிகழ்வுகளுக்குப் பின்னர், மஹாதேவர், தம் பரிவாரங்களுடன் அவ்விடம் விட்டு அகன்றார்.

இந்த யாகத்துக்குப் பின், பிரம்ம தேவர், தக்ஷனை, பிரஜாபதிகளுக்குத் தலைமை வகிக்கும்படியாக நியமித்தார். அதனால் கர்வம் மேலிட்டவனானான் தக்ஷன். மஹாதேவரை அழைக்காமல், சிறந்ததொரு யாகம் துவங்கினான். அதையறிந்த சதி தேவி, தன் கணவனின் விருப்பத்தையும் மீறி, மனம் பொறாமல், அந்த யாகத்திற்குச் சென்றாள்.

யாக சாலையை அடைந்த பொழுது, தக்ஷனிடம் இருந்த பயத்தால், சதி தேவியை யாரும் மரியாதையுடன் வரவேற்கவில்லை.. தாயும் சகோதரியரும் கண்ணீருடன் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டாலும், அவர்களுக்கும் தக்ஷனை மீறத் துணிவில்லை. 

 தனக்கும் தன் கணவருக்கும் அந்த யாகத்தில் செய்யப்பட்ட அவமரியாதை கண்டு, சதி தேவியானவள் வெகுண்டாள்.  மிகுந்த கோபத்துடன் அந்த சபையில், சிவநாமத்தின் பெருமையையும்,  சிவநிந்தனையால் ஏற்படும் பாபத்தையும் எடுத்துரைத்தாள். " 'சிவ' என்ற இரண்டெழுத்து நாமத்தை, பேச்சின் இடையே ஒரு முறை உச்சரித்தாலும் அது பாவத்தைப் போக்கும்...  மீற முடியாத கட்டளையை உடையவரான பரமசிவனை, சிவேதர! (  சிவம் என்பதற்கு, மங்களம், சுபம் என்றெல்லாம் பொருள். சிவநிந்தனையால் அவை அனைத்தையும் இழந்த தக்ஷனை, 'சிவ இதரன்' என்று குறிக்கிறாள் சதிதேவியாக அவதரித்த அம்பிகை!), நீர் துவேஷிக்கிறீர்!" என்றாள் (இவ்விதமான சிவநாம மகிமை, ஸ்ரீமத் பாகவதத்தில் வருவது மிகுந்த ஏற்றமுடையதாகும்).

 'இனி, 'தாக்ஷாயணி' என்று, இடபக் கொடியுடையவரான பிரான், என்னை விளையாட்டாகக் கூப்பிட்டாலும், நான் மனம் நொந்தவளாவேன்!.. ஆகவே, உமது அங்கத்திலுண்டான இந்த (உடலாகிய) கூட்டை விட்டு விடப் போகிறேன்!'.

இவ்விதம் கூறிவிட்டு, யோகாக்னியில் பிரவேசித்து, தன் உடலை நீத்தாள் சதிதேவி!. 

நடந்த நிகழ்வுகளைக் கேள்வியுற்ற சிவபிரானின் கோபாக்னியில் தோன்றிய வீரபத்திரரால், தக்ஷனின் யாகம் அழிக்கப்பட்டது. தக்ஷன் தன் சிரமிழந்தான். பின்னர், பிரம்ம தேவர், மஹாதேவனைப் பிரார்த்திக்க, அவரது கருணையால் தக்ஷன் மீண்டும் உயிர்பெற்றான். தடை நீங்கி, யாகம் தொடர்ந்தது. ஸ்ரீ ஹரியை, பரிசுத்த பாவனையுடன் தக்ஷன் தியானிக்க, அவரும் ஆவிர்ப்பவித்தார். பின்னர், பகவான், கீழ்வருமாறு கூறினார்.

'அனைத்தினின்றும் பிரிக்கவியலாத‌ பிரம்மமாக நான் இருக்க,   ருத்ரனையும் பிரம்மாவையும்  மற்ற உயிரினங்களையும் என்னிலிருந்து வேறாக அறிவிலிகள் கருதுகிறார்கள். அனைத்துலகுக்கும் ஆத்மாவாயும், இயற்கையில் ஒன்றாகவும் இருக்கிற மும்மூர்த்திகளிடையே யார் வேற்றுமையைக் காண்பதில்லையோ, அவரே அமைதியை  அடைகிறார்!' என்று பகவான், உயிர்த்தெழுந்த தக்ஷனிடம்  கூறினார்.

பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,
நின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்
இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்
ஒருவனங்கத் தென்று முளன் (பொய்கையாழ்வார்).

மேலே சொன்ன நிகழ்வுகளைச் சுருக்கமாக, பின்வருமாறு எடுத்துரைக்கிறார் பட்டத்திரி!...

க்ருʼத்³தே⁴ஸ²மர்தி³தமக²​: ஸ து க்ருʼத்தஸீ²ர்ஷோ
தே³வப்ரஸாதி³தஹராத³த² லப்³த⁴ஜீவ​: | 
த்வத்பூரிதக்ரதுவர​: புனராப ஸா²ந்திம்ʼ
ஸ த்வம்ʼ ப்ரஸா²ந்திகர பாஹி மருத்புரேஸ² ||

 'கோபம் கொண்ட பரமசிவனால் யாகம் அழிக்கப்பட்டது. தக்ஷனும் கொல்லப்பட்டான். பின் தேவர்களால் துதிக்கப்பட்ட சிவபிரானின் திருவருளால், மீண்டும் பிழைத்தான். உம்முடைய அனுக்கிரகத்தால், யாகம் பூர்த்தியாகி, தக்ஷனும் அமைதியடைந்தான். (இவ்விதமாக, அனைத்துயிருக்கும் ) சாந்தியை அருளுபவராகிய‌ குருவாயூர‌ப்பனே!.... என்னைக் காப்பீராக!...' என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி.

ஒருவருக்கு ஆணவம் மேலிட்டால், அதனால் நேரக்கூடிய அழிவும், அக்குற்றம் நீங்கினால், பின் இறையருளால் பெறக்கூடிய பெருவாழ்வும், தக்ஷனின் சரித்திரத்தால் விளங்குவதாகக் கொள்ளலாம்!..

(அடுத்த பகுதியில், பக்தர்களில் மிகச் சிறந்தவரான துருவனின் திவ்ய சரித்திரம்!).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..