நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 24 ஜூலை, 2014

THIRUPPONNOOSAL..SONG # 7....மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்'..பாடல் # 7.



திருச்சிற்றம்பலம்!
பாடல்:

உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.

பொருள்:

"அணிகளை அணிந்த பொன்னை நிகர்த்த தனங்களையுடைய பெண்களே! ..நினைத்தற்கரிய, திருவுத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் நிலையாக, பொலிவுடன் எழுந்தருளியிருக்கும் பெருமையுள்ள வேதியனும், தன் புகழை பலகாலும் சொல்லி,


பணிந்து வணங்குபவரின் பாவங்களையும் பற்றையும் அறுப்பவனும், என் அப்பனும், என்னை ஆட்கொண்டவனுமாகிய சிவபிரானின் எழிலினைப் பாடி, அன்னத்தை ஒத்த ஊஞ்சலின் மேல் அழகான மயில் போன்று நாம் பொன்னூஞ்சல் ஆடுவோமாக" .

சற்றே விரிவாக:

இறைவன் நினைத்தற்கு அரியவன்.. 'உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்' என்று திருவெம்பாவையிலும் இதனை எடுத்துரைக்கிறார் வாதவூரார்.  வினைப்பயனின் காரணமாக‌, பல்வேறு எண்ணங்களில் கிடந்துழலும் நம் மனத்தால் இறைவனை நினைப்பது, இயலுமோ?!... அவன் அருளாலே அல்லவோ அவன் தாள் பணிதல் கிட்டும்?. அவ்வாறு நமக்கு அருள் செய்ய வல்ல பிரான் திருவுத்தரகோசமங்கையுள் நிலைபெற்று விளங்குகின்றான்..

இதை, 'உன்னற்கரிய திருவுத்தரகோசமங்கை' என்று, திருவுத்தரகோசமங்கையின் சிறப்பை வியந்துரைப்பதாகவும் கொள்ளலாம்.

 மறைகளை ஓதி உணர்த குருவடிவில் தம்மை வந்து ஆட்கொண்டதால், இங்கு எம்பிரானை, 'மாமறையோன்' என்றார்..  நான்மறைகளால் துதிக்கப்படுபவன் எம்பிரான் ஆனதாலும், 'மாமறையோன்' என்று இறைவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

வேதபா ரகரின் மிக்கார் விளங்குபே ரவைமுன்
                                 சென்று  
  நாதனா மறையோன் ‘சொல்லு நாவலூ ராரூ 
                                ரன்றான்
காதலென் னடியா னென்னக் காட்டிய வோலை 
                                   கீறி
மூதறி வீர்முன் போந்தா னிதுமற்றென் முறைப்பா' 
                              டென்றான்.(திருத்தொண்டர் புராணம்).

"பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடி"  என்று, வாதவூராரின் இந்தப் பாடலில், மூன்றாம் அடியோடு, ஐந்தாம் அடியைச் சேர்த்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.. 

'இறைவன், தன்னைப் பலகாலும் துதித்து, தன் புகழைப் பாடி வணங்குவாரின் பாவங்களை நீக்கி, பற்றறுத்து அருளுபவன். அவனே எம் தந்தை, எம்மையும் ஒரு பொருளாக நயந்து வந்து ஆட்கொண்டருளினான்' என்று போற்றுகின்றார் வாதவூரார்இதனால், இறைவனைப் போற்றுவோரது பாசங்கள் நீங்கும் என்பது கூறப்பட்டது.

"சீர்மேவும் ஆரூர்ச் சிதம்பர நாதனெனும்
பேர்மேவு ஞானப் பிரகாசன் - தார்மேவு
சேவடிகள் போற்றித் திகழ்முத்தி நிச்சயமொன்

றாவ தென மொழிவேன் யான்'  (முத்தி நிச்சயம், குருஞானசம்பந்தர்).

பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,
             பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில், 
சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில்,
        சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்! 
“உற்றவரும் உறு துணையும் நீயே” என்றும்,
    “உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்” என்றும், 
“புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா!” என்றும்,
“பொழில் ஆரூரா!” என்றே, போற்றா நில்லே!.(திருவாரூர் திருத்தாண்டகம், அப்பர் பெருமான்)

அவ்விதம் ஆட்கொண்ட இறைவனது எழிலைப் பாடுதல் இங்கு அறிவுறுத்தப்பட்டது.. இறைவனது அழகே நிலையான அழகு.. அழகென்று தோன்றும் மற்றவையெல்லாம் அழியக்கூடியன. ஆகவே, 'இறைவனது எழிலினைப் போற்றிப் பாடுக' என்று ஊஞ்சலாடும் பெண்கள் உரைப்பதாகக் கூறுகின்றார் வாதவூரார்.

ஊஞ்சல் மெல்ல அசையும் தன்மை உடையதால், அதற்கு அன்னம் உவமையாயிற்று, அதன் மேல் ஆடும் பெண்களின் அழகிய சாயலுக்கு மயில் உவமையாயிற்று. எனவே,

அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூச லாடாமோ (நான்கு மற்றும் ஆறாம் வரிகளை இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும்) என்றார்.

இதற்கு, 'வெள்விடையின்மேல், செந்நிறத்துடன், அம்பிகையோடு வரும் அத்தன்' என்று பொருள் கூறுவதும் உண்டு. அதாவது, 'மணி மயில் போல் என்னத்தன்' என்றும் பொருள் கொள்ளலாம். மணி என்பது மாணிக்கம் என்ற பொருளில் வந்து, இங்கு இறைவனைக் குறிக்கும். மயில் அம்பிகையைக் குறிக்கும்.

எம்பிரானின் எழில் பாடி, அருள் பெறுவோம்!

மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..