நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 12 ஜூன், 2014

CHAMPAKA CHATHURDASHI VIRATHAM (12/6/2014) .....சம்பக சதுர்த்தசி விரதம்


அன்பார்ந்த  நண்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம் 'சம்பக சதுர்த்தசி'.. உமையொரு பாகனான சிவபிரானைத் துதிக்கும் விரதங்களுள் ஒன்றான இது வங்காள தேசத்தில் பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகின்றது. வங்காளிகள் மட்டுமின்றி, பெரும்பாலான வட இந்தியர்களும், சிவபிரானைத் துதித்து, இவ்விரதத்தை பக்தி சிரத்தையோடு அனுசரிக்கிறார்கள்.




இந்த  விரதம் ஏற்பட்ட புராணக் கதை குறித்து, விரிவாக அறிய இயலவில்லை. ஆயினும், இந்த விரதம் மேற்கொள்ளும் நாள் மற்றும் பூஜை முறைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள இயலுகிறது.

விரத தினம்:

ஒவ்வொரு வருடமும் வைகாசி வளர்பிறை சதுர்த்தசி 'சம்பக சதுர்த்தசி' என்று அழைக்கப்படுகின்றது.. அன்றைய தினமே விரதம் அனுசரிக்கப்படுகின்றது. சண்பக மலர்களால் சிவபிரானை அர்ச்சிக்கும் தினம் என்பதால் 'சம்பக சதுர்த்தசி'  என்று இந்த விரதத்திற்குப் பெயர் வந்ததெனக் கூறுகின்றார்கள்.

விரத வழிமுறைகள், பூஜை செய்யும் விதம்:

இந்த விரதம் 'ருத்ர விரதம்' என்று 'ஸ்ம்ருதி கௌஸ்துபம்' என்னும் நூலில் குறிப்பிடப்படுவதாகச் சொல்கிறார்கள்...வைகாசி வளர்பிறையில், சூரியன் உதயமாகும் வேளையில், சதுர்த்தசி திதி இருக்கும் நாளில் இந்த விரதம் அனுசரிக்கப்படுகின்றது..

விரத தினத்தன்று காலை, நீராடி, விரதம் இருப்பதற்காக முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்..

அன்றைய தினம், காலையிலேயே இந்த பூஜையைச் செய்து விடலாம்.. மாலை சந்திரோதய நேரத்திலும் செய்யலாம்.

களிமண்ணால் செய்யப்பட்ட இலிங்க/சிவபிரான் திருவுருவங்கள் மட்டுமே பூஜை செய்ய ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.. திருவுருவங்களை முதல் நாளே செய்து, பூஜைக்காக வைத்துக் கொள்ளலாம்..

பூஜை செய்யும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கோலங்கள் போட்டு அழகுபடுத்த வேண்டும்.. ஒரு பலகை அல்லது மந்தஹாசத்தில்(மண்டபம் போன்ற அமைப்பு) கோலங்கள் இட்டு, வாழை மரம், தோரணங்கள் கட்டி அலங்கரித்து, பூஜை செய்யும் இடத்தில் வைக்க வேண்டும்.. பலகை வைக்கும் பட்சத்தில், அருகில் இரு வாழை மர ஸ்டாண்டுகளில் வாழை மரங்கள் நட்டு வைக்கலாம்!..

பூஜைக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமரவும்.. இயன்ற நிவேதனங்கள் செய்யலாம்.

பொதுவாக, சிவபிரானின் பூஜைக்கு செண்பக மலர்களைப் பயன்படுத்துவதில்லை.. ஆனால், இன்றைய தினம் மட்டும் பயன்படுத்தலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள்.

பூஜைக்கு வில்வ இலைகளையும் பயன்படுத்தலாம்..

சிவபிரானின் திருவுருவை, முறைப்படி பூஜை செய்யும் இடத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்... இயன்ற வஸ்திரம், ஆபரணங்களால் அலங்கரிப்பதோடு, சண்பக மலர்களையும் கட்டாயம் சாற்ற வேண்டும்.. இயன்றால், சண்பக மலர்களால் ஆன மாலையை சாற்றலாம்.. மணமுள்ள மற்ற மலர் மாலைகள் கொண்டும் அலங்கரிக்கலாம்..

சிவபிரானின் அஷ்டோத்திரம் கூறி,முறைப்படி ஷோடசோபசார பூஜைகள் செய்ய வேண்டும்.. நிவேதனங்கள் செய்த பின், பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, வணங்க வேண்டும்...

நிவேதனங்களை விநியோகிக்க வேண்டும்.. இயன்றவர்கள், சிவனடியார்களுக்கு உணவிடலாம்..அன்று முழுவதும் அதிகம் பேசாமல் சிவபிரானின் துதிகளைச் சொல்லியவாறு உபவாசம் இருக்க வேண்டும்..

மாலையில் விளக்கேற்றும் சமயத்திலோ அல்லது மறு நாளோ, சிவபிரானின் திருவுருவத்திற்கு தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டிய பின், இருப்பிடத்திற்கு எழுந்தருளச் (யதாஸ்தானம்)செய்ய வேண்டும். இதுவே புனர் பூஜை எனப்படுகின்றது.. 

இயன்றவர்கள், நாள் முழுமையுமே உபவாசம் இருக்கலாம்.. மாலையில் பூஜை/புனர் பூஜை செய்த பின், நிவேதனங்களை மட்டும் ஏற்கலாம். இயலாதவர்கள், ஒரு வேளை மட்டும் உணவு அருந்தலாம்.

இவ்விரதம் செய்வதால் ஏற்படும் பலன்கள் அபரிமிதமானவை. முக்கியமாக தீராத வியாதிகளுடன் அவதிப்படுபவர்கள் செய்ய, கட்டாயம் கை மேல் பலன் நிச்சயம். குறிப்பாக , நுரையீரல் சம்பந்தமான தொந்தரவுகள் உள்ளவர்கள் கட்டாயம் இந்த விரதம் செய்ய வேண்டும்.

சிலர், வைகாசி வளர்பிறை ஏகாதசி துவங்கி, வைகாசி பௌர்ணமி வரை, ஐந்து தினங்கள் விரதம் அனுசரிக்கிறார்கள்.. ஐந்து தினங்களிலும் பூஜைகள் செய்கிறார்கள்.

விரதங்களும் பூஜைகளும் மிகுந்த நம்பிக்கையோடும் பக்தியோடும் செய்யப்படும் போது, இறையருள் நமக்குள் நிறைகிறது. உள்ளும் புறமும் புனிதமாகிறது..விரதங்களும் பூஜைகளும் நமக்கு மட்டுமல்லாது, பிரபஞ்சத்திற்கே நன்மை விளைவிக்கும் சக்தியுடையன.. நம்மால் இயன்ற விரதங்களை அனுசரித்து, இறையருளைப் பெறலாம்..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

9 கருத்துகள்:

  1. சம்பக சதுர்த்தசி பற்றி சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அபரிமிதமான பலன் தகவல்களுக்கு நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வல்லிம்மா!

      நீக்கு
  4. வில்வ இலைகள் வெள்ளியில் வைத்து பூஜை செய்யலாமா?
    விவரம் சொல்லவும் - படத்தில் வெள்ளி வில்வம் உள்ளதே

    அரிய தகவல்களை
    அம்மா உங்களிடமிருந்தே பெற்றுக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் கூகுளாண்டவர் உபயம்!..என்னைப் பொறுத்தவரை, நிஜமான வில்வ இலைகளை வைத்துப் பூஜிப்பதே சிறந்தது.. மேலும் நிர்மால்ய தோஷம் இல்லாததால், இலைகளை காய வைத்தும் பூஜிக்கலாம்.. வெள்ளி வில்வ இலைகள், வில்வம் கிடக்காத வெளிநாடுகளில் இருப்பவர்கள் உபயோகத்திற்கென தயாரிக்கிறார்கள்.. இறையருளால், நான் இருக்கும் இடத்தில் பூக்கடைகளில், கட்டுக்கட்டாக வில்வம் கிடைக்கிறது.. நான் அதைத்தான் பயன்படுத்துகிறேன்!..மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. கரெக்ட் தான்..
      காசு கொடுத்து வில்வம் வாங்குவதைவிட

      வெள்ளி அல்லது தங்கத்தினால் ஆன
      வில்வம் சிறந்தததே..

      (ஸ்வர்ண புஷ்பம் போல)

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..