நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

PACHCHAI PATHIGAM...திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 'பச்சைப் பதிகம்' (திருநள்ளாறு தேவாரத் திருப்பதிகம்)

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்தத் திருப்பதிகத்தை, ஞானசம்பந்தப் பெருமான் நள்ளாற்றில் அருளிச் செய்தார்.. மதுரையில், சமணர்களோடு நடைபெற்ற அனல் வாதத்தில், இந்தப் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல், பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது

பண்: பழந்தக்கராகம்.


போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
 
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.

தமிழ்ப்புத்தாண்டு, அன்பர்கள் அனைவருக்கும் எல்லா வளங்களையும் நலங்களையும் தந்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.. இப்பதிகத்தைப் பாராயணம் செய்வோர், இறையருளால் வாழ்வாங்கு வாழ்வர் என்பது திண்ணம்..

இறையருள் கூடுமாயின், வரும் பதிவுகளில், நானறிந்த வரையில் இந்தப் பதிகங்களின் பொருள் எழுதுகிறேன்.. 'மின் தமிழ்' கூகுள் குழுமத்தில்,  நவக்கிரகத் திருத்தலங்களைப் பற்றித் தொடராக எழுதி வருகிறேன்.. இந்தப் பதிகத்தோடு தொடர்புடைய திருநள்ளாறு திருத்தலத்தைப் பற்றிய செய்திகளையும் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன்..

இறையருளால்.. 

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

10 கருத்துகள்:

  1. பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல்,
    பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டிய பச்சைப்பதிகத்தை அருமையாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி அம்மா!.. தங்களுக்கு என் உளம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

      நீக்கு
  2. இந்தப் பண்ணுடன் இணைந்த அல்லது அருகில் உள்ள ஏதேனும்
    கர்நாடக சங்கீத ராகங்கள், மெட்டுக்கள் உள்ளனவா ?

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  3. I have found out. Pazhanthakkaragam is similar to sudha saveri.
    I am trying to sing this devotional thevaram.
    All the Best. Hearty greetings on Tamil New Year Day
    subbu thatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி!.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும்!

      நீக்கு
  4. வாழ்த்துக்கள்..
    வளமும் நலமும் சேரட்டும்

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பகிர்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி சார்!.. தங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..