நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 24 மே, 2013

ARUMUGAN ARULAMUTHU....100TH POST....ஆறுமுகன் அருளமுது..நூறாவது பதிவு.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
(கந்தரலங்காரம்)

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்.......

திருமுருகன்  திருவ‌ருளாலும், உங்கள் அனைவரின் நல்லாசியாலும் பேராதரவாலும் 'ஆலோசனை'யின்  நூறாவது பதிவுவைகாசி விசாகத்துக்கான சிறப்புப் பதிவாக மலர்கிறது.  இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து,  நட்பாகத் தொடர்ந்து வரும்  அனைத்து நண்பர்களுக்கும், வாசகப் பெருமக்களாகிய‌ உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். 'ஆலோசனை' இந்த நிலைக்கு உயர்ந்திருப்பது,  உங்களால் மட்டுமே. நீங்கள் அனைவரும் என் எழுத்துக்களுக்குத் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்தாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது. தொடர்ந்து தங்கள் நல்லாதரவை நாளும் எதிர்பார்க்கிறேன்.

தமிழ் மாதங்களில்  இரண்டாவது மாதமான வைகாசி மாதத்திற்கு 'வைசாக மாதம்' என்று பெயர். விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்த நன்னாள், தமிழ்க்கடவுளாம் கந்த வேளின் திருஅவதார தினமாகக் கருதப்படுகிறது.


வைகாசி விசாகம், திருமுருகன் உறையும் திருத்தலங்களில் எல்லாம் சிறப்புறக் கொண்டாடப்படும் திருவிழா. குறிப்பாக, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தலங்களில் இது பாற்குட விழாவாகப் பெரும் மகிழ்வோடு கொண்டாடப்படுகிறது. கோடானு கோடி பக்தர்கள், பாற்குடம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவார்கள். விடியற்காலையில் ஆரம்பமாகும் அபிஷேகம், நடுப்பகல் தாண்டியும் தொடரும்.

'விசாகன்' என்ற பெயருக்கு, 'மயில் மீது ஏறி வலம் வருபவன்' என்றும் பொருள். மயில்வாகனான முருகப்பெருமானின் திருநாமங்களுள் ஒன்று 'விசாகன்'. 

'இன்சொல் விசாகா' என்றே திருப்புகழில் அருணகிரியார் முருகனைப் போற்றுகிறார்.

முருகனின் புகழ் பாடும் எண்ணற்ற துதிகளில் ஒன்று, அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தரனுபூதி.விவரிக்கவொண்ணா மகிமைகள் பொருந்திய இந்தத் துதியின் காணொளியினை கீழே கொடுத்திருக்கிறேன். இதை வலையேற்றிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி. இதைத் தினம் பாராயணம் செய்ய, நிஜமாகவே வாழ்வில் வரவேற்கத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

றுமுகன் அவதார தினம்;
வைகாசி விசாகம், பிரதானமாக, முருகப்பெருமான் அவதார தினமாகவே கொண்டாடப்படுகிறது. ஆதி அந்தமில்ல அருமறை நாயகன், அழகுக் குழந்தையாக சரவணப் பொய்கை தனில் தவழ்ந்த நன்னாள் இது. முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. ஷண்மதங்களையும் ஒன்றிணைக்க வல்லவன் ஷண்முகக் கடவுள் ஒருவனே.

தன்னை நாடி வரும் பக்தரின் வினை கோடியாயினும், தன் வேலாயுதத்தால் அவற்றைப் பிளந்து, பிறவா நிலை தந்தருளும் ஞான பண்டிதனின், கருணையை விவரிக்க வார்த்தைகளேது?. தன்னை எதிர்த்த சூரனையும், சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி ஆட்கொண்ட கருணைப் பெருங்கடல் கந்த வேள். 'சூரசம்ஹாரம்' என அழைக்கப்பட்டாலும், சூரனின் அகந்தை மட்டுமே சம்ஹாரம் ஆனது கண்கூடு. 'செந்தமிழால் வைதாரையும் வாழ்விப்பான்' என்று தமிழுலகம் பறை சாற்றும் தமிழ்க்கடவுள் கார்த்திகேயன்.

எந்த நேரமும் நினைத்தால் சிந்தையில் வந்தருளும் செந்திலாண்டவன், 'இம்முறையில் தான் வழிபட வேண்டும்' எனக் கேட்பதில்லை. எம்முறையில் வழிபட்டாலும் இன்னருள் செய்கிறான்.

முருகப்பெருமானுக்கு பலவித நிவேதனங்கள், வழிபாடுகள் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். ஆயினும் 'பிச்சிப்பூ, பச்சைப்பால், சம்பா சாதம்' இவை மூன்றும் பிரதானமாகக் கருதப்படுகின்றன.  இருந்தாலும், கந்த வேளின் திருவிளையாடலுக்கு எல்லை ஏது?. பழனி அருகில் ஒட்டன் சத்திரத்தில் அமைந்துள்ள  வேல்முருகன், 'மிட்டாய் முருகன்' என்றே அழைக்கப்படுகின்றான்.

இங்கு முருகனை அர்ச்சிக்கவும், நிவேதனம் செய்யவும் மிட்டாய்களே பயன்படுத்தப்படுகின்றன. இத்தலத்தில், குழந்தை வரம் வேண்டிய ஒரு பக்தர், முருகனருளால் குழந்தைப்பேறடைந்த பின், இந்தத் தலத்திற்கு வந்து பக்தர்கள் அனைவருக்கும் மிட்டாய்களை விநியோகித்திருக்கிறார். அன்றிரவே, முருகன் அவர் கனவில் வந்து, 'எனக்கு மட்டும் ஏன் மிட்டாய் தரவில்லை?' என்று கேட்க, அவர் மறுநாளே மிட்டாய்கள் கொண்டு வந்து சமர்ப்பித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மிட்டாய்கள் சமர்ப்பிப்போரின் வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுவதால், நாள் தோறும் முருகனுக்கு மிட்டாய்கள் குவிகின்றன. வைகாசி விசாக நன்னாளன்று, டன் கணக்கில் மிட்டாய்கள் முருகனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

முருகன் பெருமானைப் போற்றும் எனது பதிவுகளில் இரண்டு...

1. கௌமாரம்

2. ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன்.

வைகாசி விசாக தினத்தின் மற்ற சிறப்புகள்:
வைகாசி விசாகத்தன்று தான், புத்தபகவான் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார். மேலும் அவர் அவதரித்ததும் முக்தி அடைந்ததும் வைகாசி பௌர்ணமி தினத்திலேயே. ஆகவே, அன்று 'புத்த பூர்ணிமா' பௌத்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அர்ஜூனனுக்கு சிவனார் பாசுபதாஸ்திரம் வழங்கியதும் வைகாசி விசாகத்தன்று தான். காலதேவனான எமதர்மராஜரைப் போற்றித் தொழுவதற்கும் வைகாசி விசாகம் உகந்த தினம் என்றும், அன்று அவரைத் துதிப்போருக்கு எமபயம் இல்லை என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

திருமால் உறையும் திருத்தலங்களில் பக்தர்களின் சிரத்தில் வைக்கப்படும் சடாரி, சடகோபம் என்றே அழைக்கப்படுகிறது. அந்தச் சடாரியில் கொலுவிருந்து, பெருமானின் அருளை நமக்குச் சேர்ப்பிக்கும், சடகோபராகிய‌ நம்மாழ்வார் அவதரித்ததும், தேவர்கள் அமுதம் உண்டு பிறவா நிலை அடைந்ததும் வைகாசி விசாகத்தன்றே.

வைகாசி விசாக விரதம்:
வைகாசி விசாக தினம் முழுமையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும். மாலையில் வடிவேலனை பூஜித்து, ஆலய தரிசனம் செய்ய வேண்டும். தயிர்சாதம், பானகம் நீர்மோர் முதலானவற்றை தானம் செய்ய வேண்டும். இது 'வைசாகதானம்' என்றே அழைக்கப்படுகிறது.

மழலை பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் இந்த விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் மிகுந்த மகிமை பொருந்தியது. முக்காலமும் உணரும் சக்தியும் இந்த விரதத்தால் கிடைக்கும்.

விசாக நட்சத்திரம் சிவபெருமானுக்கும் உகந்தது. வைகாசி பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய நன்னாளில் சிவனாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, செந்தாமரை, வெண்தாமரை மலர்களால் மாலை அணிவித்து, வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, தயிர்சாதம், எள்ளோதரை முதலியவை நிவேதனம் செய்தால், சந்திர பகவானால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கும். லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
அன்பர்கள், வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை வழிபட்டு, தங்கள் விருப்பங்களனைத்தும் ஈடேற்றப் பெறப் பிரார்த்திக்கிறேன்.

'ஆலோசனை'யின் மேம்பாட்டுக்கான தங்களது கருத்துகளை மனமார வரவேற்கிறேன்.

மீண்டும் ஒரு முறை என் நன்றியை உங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பித் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!

நன்றியுடனும் நட்புடனும்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

26 கருத்துகள்:

  1. மனமார்ந்த பாராட்டுகள். மேலும் பல நுறு பதிவுகள் காணவும், ஒவ்வொரு பதிவும் அருமையானதாக விளங்கவும் தங்களுக்கு தேவையான ஊக்கத்தையும், ஆக்கத்தையும் அளிக்க அன்னை லலிதாம்பிகை அருள் செய்வாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பது நிச்சயம்.

      நீக்கு
  2. அருமை அருமை
    அத்தனையும் அருமை.

    அனுபூதியை தந்து
    அசத்திவிட்டீர்கள்..

    உண்மையில் சொன்னால்
    உங்கள் நட்பு முருகன் தந்த கொடையே

    எத்துணை சொன்னாலும் திரும்ப திரும்ப
    என் நா நன்றியைத்தான் சொல்கிறது..

    ஆரோக்கியமாக 100 ஆண்டுகளுக்குமேல்
    அனைத்து செல்வமும் பெற்று

    வாழ்க... நலமுடன்
    வளர்க .. பலமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.அய்யர் அவர்களே!!, தங்கள் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். தங்களின் வாழ்த்து இது வரை வரவில்லையே என்று தான் நினைத்திருந்தேன். இன்று ஏதோ தோன்றி 'ஸ்பேம்' கமென்ட்டுகளை செக் செய்த போது இருந்தது. ஆகவே தங்களின் கருத்துரை தாமதமாக வெளியாகியிருக்கிறது. இதற்காக மன்னிக்கக் கோருகிறேன். தங்களின் வாழ்த்துக்களுக்கு மீண்டும் என் நன்றி.

      நீக்கு
  3. ஆலோசனையின் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். 1000 பதிவுகள் விரைவில் காண ஆண்டவன் அருள் செய்வார். இது நிச்சயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மேலான கருத்துரைக்குக்கும் வாழ்த்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். என் எழுத்துக்களின் மேன்மைக்கு, தாங்கள் அளித்த, அளித்து வரும் ஊக்கமும் மிக முக்கியக் காரணம். மிக்க நன்றி ஐயா!!.

      நீக்கு
  4. முருகனைப்பற்றி பார்வதி தான் இத்தனை அழகாக நயமாக அருமையாக விவரமாக சொல்ல இயலும்!
    படங்களுடன் விவரங்கள் பதிவுக்குப்பொலிவு! இன்னும் பல நூறு பதிவுகள் எழுத அழகன் முருகன் ஆசிர்வதிக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மனமார்ந்த, உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு என் பணிவான நன்றிகள்.

      நீக்கு
  5. சகோதரி ஷைலஜா கூறியது போல!

    அழகன் முருகனைத் தான் எத்தனை அழகோடு ஆராதித்தப் பதிவு!
    வைகாசி விசாகம் பற்றிய விளக்கமும்!

    வேண்டும் வரம் தரும் வேலவனின் திருவடி நோக்கி
    ஆற்றுப் படுத்தும் அற்புதப் பதிவு.

    இன்னும் பலநூறுப் பதிவுகளை தந்து அவைகள் பக்தி மார்க்கப் பாதையைக் காட்டும் பகலவனாய் வலம் வரட்டும் அதற்கு அப்பன் முருகனும் அருள வேண்டிக் கொள்கிறேன்.

    பகிர்விற்கு எனது நற்றிகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாவின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்னை மேன்மேலும் உற்சாகப்படுத்தி எழுதச் செய்யும். மிக்க நன்றி அண்ணா!!

      நீக்கு
  6. அருமை... மிகவும் அருமை... விரிவான விளக்கம்... அழகான சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

    தங்களின் இந்த தளம் எனது Reader-ல் வரவில்லை... (Not updated) அதனால் என்னால் உடனே வரமுடியவில்லை... தங்களின் மெயில் கண்டு வந்தேன்... email subscription gadget வைக்கவும்... இல்லை எனில், நான் அடிக்கடி check செய்யும் கீழுள்ள மெயிலுக்கு தகவல் அனுப்ப பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... மிக்க நன்றி...

    dindiguldhanabalan@yahoo.com

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளைக் கட்டாயம் நிறைவேற்றுகிறேன்.

      நீக்கு
  7. உங்களுக்கே உரிய சிரத்தையுடன் வைகாசி விசாகம் பற்றியும், விசாகத்தானைப் பற்றியும் எழிலுடன் அமைத்த பதிவு நூறாவதாகவும் அமைந்தது முருகனருளே. இறையருள் என்றும் துணையிருக்க, இன்னும் பலநூறு பதிவுகள் பதிய மனமார்ந்த வாழ்த்துகள். அழகனின் படங்கள் அத்தனையும் வெகு அழகு. மிக்க நன்றி பார்வதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கூற்று மிக மிக உண்மை. முருகனருளாலேயே இவ்வாறு அமைந்தது. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

      நீக்கு
  8. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தான் சென்று பார்வையிட்டேன். தகவல் தந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

      நீக்கு
  9. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா. தங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  10. தங்களின் வெற்றிகரமான 100வது பதிவுக்கும், வலைச்சர அறிமுகத்திற்கும் என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். அழகான பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா!!. இறையருளும் தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியும் ஊக்கமுமே என் எழுத்துக்களை வழிநடத்திச் செல்லுகிறது. மிக்க நன்றி!!

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. தங்களின் தளமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமைக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  11. வைகாசி விசாகத்திருநாள், முருகப்பெருமானின் சிறப்புகள் அனைத்தையும் அழகாக தந்துள்ளீர்கள்.

    நூறாவது பகிர்வுக்கு வாழ்த்துகள். மேலும் வெற்றிகள் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. மிக மிக நன்றி மாதேவி அவர்களே!!. வலைச்சரம் மூலமாக தங்கள் பதிவின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். மிக அருமையாக இருக்கிறது. தங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. 100 வது பதிவுக்கும், வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள். வலைச்சரம் மூலம் இன்றுதான் முதல் வருகை. இனி அடிக்கடி வருகிறேன்.ஒவ்வொரு பதிவாக படிக்கிறேன்.
    http://ranjaninarayanan.wordpress.com/ எனது வலைத்தளத்திற்கும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. இன்றுதான் இந்த இடுகையை பார்க்க முடிந்தது. அருமை!, 100க்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..