நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 11 மே, 2013

AKSHAYA THRUTHIYAI....அனைத்து வளங்களும் தரும் அக்ஷய திருதியை (13/5/2013).

ஸ்ரீயம் தேவீம் நித்யாநபாயிநீம் நிரவத்யாம் தேவதேவதிவ்யமஹிஷீம், அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்யசரண்யாம் அநந்யசரண:சரணமஹம் ப்ரபத்யே
(சரணாகதி கத்யம்).

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியை, 'அக்ஷய திருதியை' எனச் சிறப்பிக்கப்படுகிறது. அக்ஷய என்றால் குறையாத என்று பொருள். ஆகவே இந்த சிறப்பான தினத்தில் செய்யும் தான தருமங்கள், இறைவழிபாடு முதலியவை அக்ஷயமாக வளர்ந்து பன்மடங்கு பலனளிக்கும் என்பது ஐதீகம்.

நம் வாழ்வுக்குத் தேவையான அனைத்து நலங்களையும் வளங்களையும் குறைவின்றி நாம் பெறுவதற்காக, பாற்கடலுள் பையத் துயின்ற திருமாலின் திருமார்பில் 'அகலகில்லேன்' என்று உறையும் திருமகளைப் போற்றுவது அக்ஷய திருதியை திருநாளில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

மேலும் 'அக்ஷயன்' எனும் சொல், என்றும் குறைவில்லாத பரிபூரணனாக விளங்கும் ஸ்ரீமந் நாராயணனைக் குறிக்கும். ஆதலால் அந்த தினத்தில், ஸ்ரீலக்ஷ்மி சமேத ஸ்ரீமந்நாராயணரை வழிபடுவது சகல நலங்களையும் அள்ளி வழங்கும்.

அக்ஷய திருதியை தினத்தின் முக்கியத்துவம்:
அக்ஷய திருதியை தினத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பல நிகழ்வுகள் நடைபெற்றதாக, நம் புராணங்கள் கூறுகின்றன.

1.குசேலர், ஸ்ரீகிருஷ்ணரின் அருளால், செல்வச் செழிப்பை அடைந்த தினம் அக்ஷய திருதியை. இது, 'காருண்ய ஸீமா' எனப் போற்றப்படும் திருமகளின் வற்றாத கருணையை விளக்கும் ஒரு நிகழ்வாகவும் அமைகிறது. ஸ்ரீகிருஷ்ணர், குசேலர் கொண்டு வந்த அவலை, ஒரு கைப்பிடி எடுத்து 'அக்ஷய;' என்று சொல்லி விட்டு உண்டாராம். அப்போது ருக்மிணி தேவியாக திருஅவதாரம் செய்திருந்த ஸ்ரீதேவி, 'ஸ்வாமி, இவர் எந்தத் திக்கிலிருந்து வருகிறார்?' என்று கேட்டாராம். உடனே, ஸ்ரீகிருஷ்ணர், குசேலர் வந்த திசையைச் சுட்டிக் காண்பிக்க, ருக்மிணி தேவி சற்றே, தன் கடைக்கண் பார்வையை அந்தப் பக்கம் வீச, நவநிதிகளும், 'நான் முந்தி, நீ முந்தி' என்று போட்டியிட்டுக் கொண்டு, அந்தத் திக்கை நோக்கிப் பாய்ந்து சென்று, குசேலரை குபேரனுக்குச் சமமாக ஆக்கினவாம். இதை, ஸ்ரீஸ்துதியில், ஸ்ரீதேசிகப் பெருமான்,

யஸ்யாம் யஸ்யாம் திசி விஹரதே 
    தேவி த்ருஷ்டிஸ் த்வதீயா 
தஸ்யாம் தஸ்யாம் அஹமஹமிகாம் 
         தந்வதே ஸம்பதோகா:                         

என்று போற்றுகிறார்.

2. திருமாலின் திருஅவதாரங்களுள் இரண்டு அவதாரங்கள்  நிகழ்ந்ததும் அக்ஷய திருதியை தினத்திலேயே. ஸ்ரீகிருஷ்ணரின் தமையனாரான‌ ஸ்ரீபலராமர், ரோகிணி தேவிக்கு மைந்தனாகத் திருஅவதாரம் செய்தருளினார். சிரஞ்சீவிகளுள் ஒருவரான பரசுராமர், ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மைந்தனாக அவதரித்ததும் இந்த புண்ணிய நன்னாளிலேயே.
3.காசி க்ஷேத்திரத்தில், பிக்ஷாடன மூர்த்தியாய், யார் பிக்ஷையிட்டாலும் நிரம்பாத பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி கொண்டு வருந்திய சிவனாருக்காக, அகிலமெல்லாம் உணவு வழங்கும் அன்னபூரணி அன்னையாக அம்பிகை திருஅவதாரம் செய்ததும் அக்ஷய திருதியை தினத்தில் தான். அன்ன பூரணி, தம் கையிலிருக்கும் அக்ஷய பாத்திரத்தில் இருந்து உணவு வழங்கியதும், பிரம்ம கபாலம் நிரம்பி, சிவனார் திருக்கரங்களை விட்டு அகன்றது.

3. சூரிய பகவானிடமிருந்து யுதிஷ்டிரர் அக்ஷய பாத்திரத்தைப் பெற்றதும் இந்த நன்னாளில் தான். அக்ஷய பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரே ஒரு பருக்கையையும் கீரையையும் உண்டு, துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து பாண்டவர்களை ஸ்ரீகிருஷ்ணர் காத்ததும் இந்த நன்னாளில் தான்.

4. சதுர்யுகங்களில் முதல் யுகமான, திரேதாயுகம் தோன்றியது அக்ஷய திருதியை தினத்தில் தான். பகீரதன் தவத்திற்கு இணங்க, கங்காதேவி பூலோகம் வந்ததும் இந்தப் பொன்னாளில் தான்.

5.சும்ப நிசும்பர்களை, அம்பிகை வதம் செய்ததும் அக்ஷய திருதியை தினத்திலேயே, மஹாபலிச் சக்கரவர்த்தி, மூன்றடி மண்ணை, வாமனருக்குத் தானம் செய்ததும் இந்தப் புண்ணிய நன்னாளில் தான்.

6. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்துதியை அருளி, அயாசகனுடைய இல்லத்தில் பொன்மழை பெய்வித்ததும் இந்தத் திருநாளிலேயே. குபேரன் திருமகளின் அருளால் நவநிதியை அடைந்ததும் இந்தத் திருநாளில் தான்.

7.அஷ்டலக்ஷ்மியருள், சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் ஐஸ்வர்யலக்ஷ்மி திருஅவதாரம் செய்தருளியதும் அக்ஷய திருதியை தினத்திலேயே.

8. அக்ஷய திருதியை அன்று துவங்கும் எச்செயலும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். பிரம்ம தேவர் படைப்புத் தொழிலை ஆரம்பித்ததும் வியாச பகவான், விநாயகரைத் துணை கொண்டு, மஹாபாரதம் எழுத ஆரம்பித்தது அக்ஷய திருதியை தினத்தில் தான்.

இத்தகைய மகிமை வாய்ந்த புண்ணிய தினத்தில் நாம் செய்யும் தானங்களும் தர்மங்களும் பலமடங்கு நற்பலன்களை அளிக்கும். ஆகையால் இயன்ற அளவு அன்னதானம், வஸ்திர தானம் செய்ய வேண்டும். வஸ்திர தானம் செய்வதால், நோய் நொடிகள் நீங்கும். அன்ன தானம் செய்வதால் பாவங்கள் நீங்கும். அன்ன தானம் செய்ய இயலாதோர் பழங்களையேனும் தானம் செய்ய வேண்டும். தானியங்களைத் தானம் செய்வதால் அகால மரணம் ஏற்படாதென்று கூறப்படுகிறது.

அக்ஷய திருதியை தினத்தில் அன்னையை வழிபடும் முறை:
அக்ஷய திருதியை தினம், தங்கம் வாங்க மட்டுமே உகந்த தினம் அல்ல. தங்கத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவி உறைவதால், தங்கம் வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையிலேயே தங்கம் வாங்கும் வழக்கம் ஏற்பட்டது. கல்லுப்பு, முனை முறியாத அரிசி, வெல்லம், துவரம் பருப்பு, மஞ்சள் கிழங்கு முதலியவை வாங்கினாலும் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். கல்லுப்பு மட்டும் வாங்கினால் கூடப் போதும். 

சத்துவ குணத்தின் திருவுருவமே திருமகள். சுத்தமான மனை, நற்குணங்கள் நிரம்பிய மனிதர்கள், அழகு மிகுந்த, நறுமணம் வீசும் பொருட்கள், மலர்கள், சுறுசுறுப்பாக, ஊக்கமுடன் செயலாற்றும் மனிதர்கள், இறை விக்கிரகங்கள் இவற்றிலெல்லாம் அன்னையின் அருள் நிரம்பியிருக்கிறது. ஆகவே, அக்ஷய திருதியை தினத்தில், இல்லத்தைச் சுத்தம் செய்து, காலையிலோ அல்லது மாலையிலோ அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு சந்தனம் குங்குமத்தாலும், நறுமணம் வீசும் மலர்களாலும் அலங்காரம் செய்து, தூப தீபம் காட்டி, இயன்ற நிவேதனம் செய்து பூஜிக்கலாம். பால் பாயசம், தயிர் சாதம் நிவேதனம் செய்வது விசேஷம். விளக்கு பூஜையும் செய்யலாம். அக்ஷய திருதியை அன்று வாங்கிய பொருட்களை கட்டாயம் பூஜையில் வைக்க வேண்டும்.

 பூஜை அறையில் மாக்கோலமிட்டு, ஒரு பலகையில் அல்லது தாம்பாளத்தில் அரிசி நிரம்பிய கலசம், அல்லது வாசனைப் பொருட்கள் சேர்த்த நீர் நிரம்பிய கலசம் வைத்துப் பூஜிப்பது சிறப்பு. ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து வைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, துளசியால் அர்ச்சிப்பதும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பூஜையைச் செய்து விட்டு, யாரேனும் ஒருவருக்கு, தயிர் சாதம், நீர் மோர், பானகம், தேங்காய்த் துவையல், மாங்காய்ப் பிசறல் இவைகளைத் தானமாக அளிக்க வேண்டும். சுமார் கால்படி அரிசியை சாதமாக வடித்து, தயிர் சாதம் பிசைந்து கொடுக்க வேண்டும். முற்காலத்தில் ஒரு புதிய அங்கவஸ்திரத்தை வாங்கி, அதை நனைத்துப் பிழிந்து உலர்த்தி, அதில் கட்டிக் கொடுப்பார்கள். இக்கால வழக்கத்தை ஒட்டி, ஒரு புதிய பாத்திரத்தில்(எவர்சில்வர் தவிர்ப்பது நல்லது) தயிர் சாதம் வைத்துக் கொடுக்கலாம். நீர் மோருக்கு ஒரு சிறிய பாத்திரத்தையும் பானகத்திற்கு ஒரு டம்ளரையும் வசதிப்பட்டால் சேர்த்துக் கொடுக்கலாம். இவற்றோடு தாம்பூலத்தில் இயன்ற தக்ஷிணை வைத்துத் தானம் தர வேண்டும். குறைந்தது பதினோரு பேருக்கேனும் அன்னதானம் செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது. பூஜை முடிந்ததும், இயன்ற அளவு தக்ஷிணயுடன் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் தர வேண்டும்.

அன்றைய தினம் லக்ஷ்மிதேவியை எந்த ரூபத்திலும் துதிக்கலாம். சகல வைபோகங்களையும் தரும் வைபவ லக்ஷ்மியாக, ஐஸ்வரிய லக்ஷ்மியாக, யானைகளுடன் கூடிய கஜலக்ஷ்மியாக இப்படி எந்த ரூபத்தில் துதித்தாலும் அன்னையின் அருள் பன்மடங்காகப் பெருகி நமக்குக் கிடைக்கும்.

அக்ஷய திருதியை தினத்தில் வைபவ லக்ஷ்மியை பூஜிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட இணைப்புகளைச் சொடுக்கவும்.

1.சகல ஐஸ்வர்யங்களும் தரும் வைபவலட்சுமி பூஜை.

2.ஸ்ரீ வைபவலக்ஷ்மீ வ்ரத பூஜா வரலாறு.

பெங்காலிகள் அக்ஷய திருதியை தினத்தன்று புதுக் கணக்குத் துவங்குகிறார்கள். அவர்கள் 'ஹல்கதா' என்ற பெயரில், அக்ஷய திருதியை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவில் கௌரி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். ராஜஸ்தானில் 'அகாதீஜ்' என்று கொண்டாடுகிறார்கள்.

பித்ருகடன்களை நிறைவேற்றவும் அக்ஷய திருதியை உகந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.

மகத்துவம் வாய்ந்த அக்ஷய திருதியைத் திருநாளில் இயன்ற அளவு உதவிகள், தான தர்மங்கள் செய்து, இறைவழிபாடை மேற்கொண்டு, வாழ்வில் மேன்மையடைந்து,

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. thank you for sharing with us the information about akshaya thrithiyai. many of us didnt even know that this is celebrated on the day when kusear was blessed with all kinds of wealth and health by Lord Krishna.

  பதிலளிநீக்கு
 2. அட்ஷய திருதியை பற்றி
  அய்யருக்கு வேறு கருத்து உண்டு

  அது உங்களுக்கு
  ஆனந்தத்தை அளிக்காது என்பதினால்

  அமைதி கொள்கிறோம்
  அன்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தங்கள் புனைப் பெயர் மிகவும் நன்றாக இருக்கிறது. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..