நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

ANNABHISHEGAM .(29/10/2012)....அன்னாபிஷேகம்

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.
(திருவெம்பாவை, மாணிக்கவாசகப் பெருமான்)

தென்னாடுடைய சிவனே போற்றி!, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று விண்ணோரும் மண்ணோரும் போற்றித் தொழுதேத்தும் பரமன், ஐப்பசி பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கண்டருளுகிறார்.

அன்னம் பிராணமயம் என்பது பிரபலமான வாக்கியம். அன்னதானமே தானங்கள் அனைத்திலும் சிறந்தது. உண்டி கொடுத்தோ உயிர் கொடுத்தோரே. அன்னத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம். அன்னம் இல்லாமல் இருக்கவும் இயலாது. ஒரு அளவிற்கு மேல் போதும் என்று திருப்தி ஏற்படுத்துவதும் அன்னம்தான். அன்னமே அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரம். அன்னம் மும்மூர்த்திகளின் சொரூபம். அன்னமே ஜீவன்.

திருக்கயிலை மலை வாழும் அபிஷேகப்பிரியரான எம்பெருமான், அன்னத்தையே அபிஷேகம் செய்வதை மனம் உகந்து ஏற்கிறார்.

ஐப்பசி மாதம் அடைமழை மாதம். குளிர்ச்சி பொருந்திய மாதம். குளிர்ச்சி பொருந்திய பனிமலையில் வாழும் பரமனுக்கு இந்த மாதம் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. எத்தனையோ அபிஷேகங்கள், எல்லா கடவுளருக்கும் செய்யப்பட்டாலும், அன்னாபிஷேகம் எம்பெருமானுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.

பௌர்ணமி தினமே மிகவும் சிறப்பானது. சித்தர் பெருமக்கள் அனைவரும், சந்திர பகவானை, பௌர்ணமி தினத்தில் தரிசிப்பதாக ஐதீகம். ஆகவே, அன்று, சந்திர தரிசனம் செய்வது சித்தர் பெருமக்கள் அனைவரையும் தரிசிக்கும் நற்பலனைக் கொடுக்கும். அன்று, சந்திர பகவான், தனது 16 கலைகளுடன், பூர்ணமாகப் பிரகாசித்து, அமிர்த தாரையைப் பொழிகிறார்.

'பித்தா, பிறைசூடி' என்று நம்பி ஆரூரர் போற்றும் நாயகர், சந்திரனுக்கு சாப விமோசனம் தந்து, சந்திர கலையை சிரசில் சூடியருளிய எம்பெருமான், சந்திரனுக்குகந்த பௌர்ணமி நன்னாளில், துலா மாதமாகிய ஐப்பசியில் ஐம்பூதங்களின் வடிவாகிய அன்னாபிஷேகம் கண்டருளுகிறார்.

அரிசி,நிலத்தில் நெல்லாக விளைவது. நெல் விளைவதற்கு, ஆகாயத்திலிருக்கும் கருமேகம், காற்றின் உதவியுடன் மழையாகப் பொழிய வேண்டும். பின், இடித்து, குற்றி அரிசியானவுடன், நீரோடு சேர்ந்து, நெருப்பின் உதவியுடன் பக்குவமான அன்னமாகிறது.  அன்னத்தை அம்பிகை பாகனுக்கு அபிஷேகம் செய்வதில் அற்புதமான உண்மை மறைந்திருக்கிறது.

\
பொதுவாக இறைவனுக்கு அபிஷேகம் செய்வதில் பல தத்துவங்கள் மறைந்திருக்கின்றன. உதாரணமாக, பால் அபிஷேகம் செய்வதன் பலன், வாழ்வில்,சுகம் உண்டாகும் என்று அனைவரும் அறிந்திருப்பீர்கள். பால், மன அமைதியை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. கொதிப்பான மனநிலையில், ஒரு டம்ளர் பால் அருந்தினால், மனம் ஒரு சமநிலைக்கு வரும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அல்லவா!!!!. ஆகவே, மனமது சந்தோஷமானால், எல்லாம் சந்தோஷமாக, சுகமாகத்  தெரியும், எந்த பிர்ச்னையும் பெரிய அளவில் தெரியாது.  இது மறை பொருள். இதை குறிப்பால் உணர்த்துவதற்காகவே பால் அபிஷேகம் செய்கிறோம். இன்னொரு தத்துவமும் உள்ளது. நம் அனைவருடைய உள்ளத்துள்ளும் ஆத்ம ஸ்வரூபமாகிய இறைவன் உறைகிறார். கர்மவினைகளால் கட்டப்பட்டு, பிறவி எடுத்திருக்கும் நம் அனைவரையும் நம்முள் இருந்து, கண்காணித்துக் காக்கிறார் இறைவன். கோவிலில் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் அபிஷேக ஆராதனைகளின் மூலம், நம் ஆத்மாவும் புனிதமடைகிறது.

அன்னாபிஷேகம் செய்வதால், உணவுப் பஞ்சம் என்பதே வராது. தேசம் சுபிட்சமாகும். தான்ய விருத்தி ஏற்படும் என்று சிவாகமம் கூறுகிறது.  மாதொரு பாகனாகி மறைகள் போற்றும் எம்பெருமான் சிவனாரின் லிங்கத் திருமேனிகளுக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.



அன்னாபிஷேக நன்னாளில், பகலில், எல்லா அபிஷேகங்களும் முறையாகச் செய்யப்பட்டு, பின், நிறைவாக, சுத்த அன்னத்தால், இறைவன் திருமேனி அலங்கரிக்கப்படுகிறது. இறைவன் திருமேனி முழுவதும், அன்னம் சாற்றப்பட்டு,  கண்களாக, திராட்சைப்பழங்கள், நெற்றித் திலகமாக, உளுந்து வடை, இரண்டு பெரிய புடலங்காயை இணைத்து  மாலை  என்று அழகாக அம்மையப்பனை அலங்கரித்து தீபாராதனைகள் நடைபெறும். பின், இரவு சுமார், 7.30 மணியளவில் அலங்காரம் கலைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுவது பெரும்பாலான கோவில்களில் நடைமுறையில் உள்ளது.

ஆனால், என் பிறந்த ஊரான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை சத்தியகிரீசுவரப் பெருமானுக்கு, பகலே அன்னாபிஷேக அலங்காரம் செய்வது வழக்கம்.  (இறைவன், திருமுருகன் சன்னதியில், முருகப்பெருமானுக்கு, இடப்புறம் தனிச்சன்னதியில் கோவில் கொண்டுள்ளார்). என் முன்னோர்கள், அத்திருத்தலத்தில், சிவத்தொண்டு புரிந்தவர்கள்.  சிவார்ப்பணமாக, வருடத்தில் ஒரு நாள் ஐப்பசி பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து பிராத்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இப்போதும் அந்தத் திருப்பணி தொடர்கிறது.

அங்கு, அன்னாபிஷேகம் முடிந்து, நண்பகலில் ஆவுடையார் மேலிருக்கும் அன்னத்தை மட்டும் பிரசாதமாக வழங்குவர். லிங்கத்தின் மேலிருக்கும் அன்னம், கோவில் திருக்குளத்திலும், சரவணப்பொய்கையிலும் கரைப்பார்கள். ஐயனின் அருள் அனைத்துயிருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்வார்கள்.

தில்லைச் சிற்றம்பலத்தில் இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு தினந்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதனால், அது அன்ன க்ஷேத்திரம் என்று சிறப்பிக்கப்படுகிறது. அன்னாபிஷேக நாள் அங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

அன்னாபிஷேக தினத்தில், லிங்கத்தின் மேலிருக்கும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவ ஸ்வரூபம். ஆகவே, அன்றைய தினம் லிங்கத்தை தரிசிப்பது, கோடி லிங்க தரிசன பலனைக் கொடுக்கும்.

அன்று முழுவதும் உபவாசமிருந்து, அன்னாபிஷேக அலங்காரத்தைத் தரிசித்து, பின் பிரசாதத்தை உண்பது, மிகுந்த நற்பலன்களை அளிக்கக் கூடியது. வாழ்நாள் முழுவதும் உணவுக்கு குறையே ஏற்படாது. குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், பிரசாதத்தை உண்ண, ஈசனருள் முன்னிற்கும்.

இப்போது, அன்னம் மட்டுமல்லாமல், பலவகை பட்சணங்கள், காய், கனிகளாலும் எம்பெருமானுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு விதமாக அற்புதமாக அலங்காரம் நடைபெறுகிறது.

அம்மையும் அப்பனுமாகி அறியொணாப் பொருளுமான எம்பெருமானை அன்றைய தினம் காணக் கண் கோடி வேண்டும். சந்திரனுக்கு உகந்த தூய வெண்ணிறத்தில், சந்திர மௌலீசுவரரான‌ இறைவனைத் தரிசிப்பது சிறப்பு.

மெய்யன்பர்கள் சிலருக்கு கண் பார்வை குறைபாடுகள் சில இருக்கலாம். அவை தீர கண் பதிகம் சொல்லி வழிபடுவது இறையருளைப் பெற்றுத் தரும்.  தம்பிரான் தோழரென்று போற்றப்படும், நம்பிஆரூரப் பெருமான், திருவொற்றியூரில், தம் மனைவியான சங்கிலியாரைப் பிரிவதில்லையன எம்பெருமான்  மேல் வாக்குக் கொடுக்கிறார். ஆனால், சில நாட்களிலேயே, திருவாரூருக்குச் செல்லும் ஆவல் முன் நிற்க, புறப்பட்டு விடுகிறார். ஊர் எல்லையைத் தாண்டிய மாத்திரத்திலேயே, பார்வை பறிபோய் விடுகிறது.    திருவெண்பாக்கம், ஊன்றீஸ்வரர் கோவிலில், இறைவன், ஊன்று கோல் அளித்து, 'உளோம், போகீர்!!' என்று அருள,  காஞ்சி நகர் வந்தடைகிறார்.

திருக்கச்சி ஏகம்பனை பணிந்து சுந்தரர் பெருமான் இயற்றியதே கண்பதிகம். கண் பதிகத்திற்கு இங்கு சொடுக்கவும்.



அன்னாபிஷேக நன்னாளில் சிவாலயங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருட்களை வழங்குவது அளவில்லாத புண்ணியங்களை நல்கும். அன்பே சிவம். அன்பொடு வழங்கப்படும் அன்னம் பகவத் பிரசாதம். எனவே, அன்றைய தினம்   அன்னதானம் செய்வது பெரும் புண்ணியத்தை அளிக்கும்.

அன்னாபிஷேக நன்னாளில் பரமனடி பணிந்து, இறைவனைப்போற்றும் துதிகளை மகிழ்ந்து பாடி, சிவாலய தரிசனம்  செய்து,

வெற்றி பெறுவோம்!!!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

  1. அருமை..
    அண்ணாபிஷகத்தின் போது

    வாரணாசியிலிருந்து
    வாழ்த்தி வரும் சுயம்பு மூர்த்தியான

    திருகேதாரிசுவரரை தரிசிப்பது வழக்கம்
    திருந்திய நிலையில் இவ்வாண்டும் பயணம்

    தாங்களும் காசி புனித யாத்திரையில்
    தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை மகிழ்ச்சி தருகிறது..

    தங்களோடு புனித பயணம் செய்யும் நல்வாய்ப்பினை
    தரட்டும் அடுத்த வருடங்களில் என

    வாழ்த்துக்களும்..
    வணக்கங்களும்..

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..