நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 32...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.32 தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்தார்!..

Image result for lord baby krishna
தேவகியின் கூந்தலைப் பற்றியிருந்த கம்சனின் கைகள், அதனை விடவேயில்லை!.. வசுதேவர் வெகு நேரம் அவனை சமாதானப்படுத்தியும் அவன் விடவில்லை.!!..பின் வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை எல்லாம் அவனிடம் கொடுத்து விடுவதாக வாக்களித்த பின், கம்சன் ஒப்புக் கொண்டு, தன் வீட்டுக்குத் திரும்பி விட்டான்!!.. அவ்வாறே, தேவகிக்கு முதல் குழந்தை பிறந்ததும், அதனை எடுத்துக் கொண்டு போய், கம்சனிடம் சமர்ப்பித்த போது, மனதில் தோன்றிய இரக்கத்தால், கம்சன் அதனைக் கொல்லவில்லை!!..  துஷ்ட புத்தியுடையவர்களிடம் கூட ஒவ்வொரு சமயம் கருணையானது காணப்படுகிறதல்லவா?!!.
அந்த சமயம், பகவானின் திருவுளத்தை அறிந்திருந்த நாரத முனிவர், கம்சனிடம் சென்று, 'பிரபுவே, நீங்களெல்லோரும் அசுரர்கள், யது குலத்தோரே தேவர்கள்!!. இதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லையா?!.. தேவர்களுடைய பிரார்த்தனையாலேயே, மஹாவிஷ்ணு உங்களையெல்லாம் கொல்ல வேண்டி அவதரிக்கப் போகிறார்!!' என்று அறிவித்தார். இதைக் கேட்ட  கம்சன், வசுதேவரின் முதல் பிள்ளை உட்பட அனைவரையும் இரக்கமின்றி கொன்று வந்தான். யது குலத்தோரையும், அவர்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டி, துன்பம் தரத் தொடங்கினான்!!..

தேவகியின் ஆறு குழந்தைகள், பிறந்த வேகத்திலேயே பகவானை மீண்டும் அடைந்தன!.. ஏழாவது கர்ப்பத்தில், ' 

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு. (பொய்கையாழ்வார்).

 என்றெல்லாம் போற்றப்படும் ஆதிசேஷன், எம்பெருமானின் சேவைக்காக, தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் பிரவேசித்தருளினார். ஆனால் அவரை, யோக மாயையானவள், எம்பெருமானின் கட்டளைப்படி, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்த்து விட்டாள்!!.

இருளென்பது என்றும் நிரந்தரமில்லை.. துன்பங்களும் அப்படியே!.. துன்பம், நோய், பசி ஆகியவையே, நமக்குள் உறையும் பரம்பொருளை நோக்கி, நம்மைத் துரத்தும் காரணிகள்  என்பர் பெரியோர்!..தேவகியின் துன்பத்தை மட்டுமல்லாது, தேவர்களின் துன்பத்தையும் துடைக்கும் பொருட்டு, சர்வமும் படைத்த நாயகன், சச்சிதானந்த ஸ்வரூபன், சாதுக்கள் மனதில் சதா சர்வ காலமும் நிறைந்திருப்பவன், சாகா வரமான முக்தியருள வல்லவன், மூவா முதலானவன், முழு முதற் பொருள், முழுமையும் அறிந்த ஞானியருக்கும் கிடைத்தற்கரியவன், 

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

என்ற நம்மாழ்வார் திருவாக்கிற்கிணங்க, அடியார்களாகிய தேவர்கள் விரும்பிய காலத்து, தன் பெரு வடிவு  மாற்றி,  கருவுருக் கொண்டான்!..

பூரணமானவன், பெண்களில் சிறந்த தேவகியின் திருவயிற்றிலே  திருவுருக் கொண்டான்.  பேரொளியானது, தேவகியின் கர்ப்பத்திலே பிரவேசித்து ஒளிர்ந்தது.. தேவகியின் திருவுடலே ஆலயமானது!.. அவளின் கர்ப்பக்கிரகத்திலே பகவான் எழுந்தருளினார்!!!.. மூவுலகமும் மகிழ்ந்தது... தேவர்கள் பலவாறாக துதி செய்தனர்!!..

இவ்விதமாக, தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்த பகவான், (முன் வினையாகிய) வியாதிக் கூட்டத்தை  நீக்கி, தமக்கு பரம பக்தியைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..

( ப்ராப்தே ஸப்தமக³ர்ப⁴தாமஹிபதௌ 
த்வத்ப்ரேரணான்மாயயா
நீதே மாத⁴வ ரோஹிணீம்ʼ த்வமபி போ⁴​: 
ஸச்சித்ஸுகை²காத்மக​: | 
தே³வக்யா ஜட²ரம்ʼ விவேஸி²த² விபோ⁴ ஸம்ʼஸ்தூயமானஸ்ஸுரை​:
ஸ த்வம்ʼ க்ருʼஷ்ண விதூ⁴ய ரோக³படலீம்ʼ 
ப⁴க்திம்ʼ பராம்ʼ தே³ஹி மே || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, 'அதீதம்' மின்னிதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..