நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART 30..க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.30 . கார்த்தவீர்யன் நற்கதி அடைதலும், கேரள உத்தாரணமும்! !..(பரசுராமாவதாரம்).

Related image
ஆயிரம் கரங்களுடையவன் கார்த்தவீர்யன்!. ஒரு சமயம் அவன் நர்மதை ஆற்றில் ஜலக்ரீடை செய்யும் பொழுது, அந்த நதிக்கரையில் பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் கர்வத்தை நீக்கும்  பொருட்டு, ஆற்றின் போக்கை, தன் ஆயிரம் கரங்களினால் தடுத்து நிறுத்தி, ராவணனை ஆற்றில் மூழ்கி, தத்தளிக்குமாறு செய்தான். அத்தகைய பெருமை வாய்ந்த ஆயிரம் கரங்களினால்,  கார்த்தவீர்யன் ய்த அஸ்திர சஸ்திரங்களை பரசுராமர் எளிதாக அழித்தார். கார்த்தவீர்யன் ஏவிய விஷ்ணு சக்ரமும் பரசுராமரிடம் பயன்படாது போனது.
அந்தக் கணத்தில், கார்த்தவீர்யன், பரசுராமரை யாரென்று அறிந்து கொண்டான்!.. தன்னை முடிக்க வந்தவர், தான் வணங்கும் பரம்பொருளே என்று அறிந்து கொண்டு, மிக மகிழ்வுடன் துதித்தான். அதனால், அவன் பாவங்களெல்லாம் அவனிடமிருந்து விடைபெற்றன. பரசுராமர் அவனது உலக வாழ்வை முடித்து, அவனுக்கு வைகுண்ட வாசமும் அளித்தார்.

​ஆனால் உண்மையறியாத ஹேஹேய குமாரர்கள் கடும் கோபமடைந்தனர். தம் தந்தையைக் கொன்ற பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்றனர். ரேணுகா மார்பில் அடித்துக் கொண்டு கதறினாள். இதை கண்டு பொறுக்காமல், பரசுராமர் கோரமான பிரதிக்ஞை செய்தார். க்ஷத்ரியர்களின் குலத்தையே வேரறுப்பதாகச் சபதமிட்டார்!!.. தம் தபோ பலத்தினால் தியானம் செய்து, ஒரு தேரையும், ஆயுதங்களையும் வரவழைத்து, எல்லாத் திசைகளிலும் பயணித்து, தம் பரசுவாலும் பாணங்களாலும், இந்த பூமியை, க்ஷத்ரியர்கள் இல்லாததாகச் செய்தார்!!!.

தம் தந்தையை உயிர் பிழைக்கச் செய்தார் பரசுராமர் (சில புராணங்களில், பரசுராமர், ஸ்ரீதத்தரின் அருள் பெற்று, ஜமதக்னி முனிவரை உயிர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது).  இருபத்தோரு தலைமுறை க்ஷத்ரியர்களை வென்று, ஸமந்த பஞ்சகம் என்னும் இடத்தில், பெரிய  குருதி நிரம்பிய மடுக்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார். 

( நின்றிலங்கு முடியினாய். இருபத்தோர் கால்அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே.

என்ற நம்மாழ்வார் திருவாக்கினை, இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்!).

பின்னர்,  யாகம் தொடங்கி, தாம் வென்ற பூமியை, காசியபர் முதலானோருக்கு யாக தக்ஷிணையாகக் கொடுத்தார்.  அதன் பின்னர்,   ஸால்வ மன்னனுடன் போர் தொடங்கும் பொழுது, அவன் ஸ்ரீகிருஷ்ணனால் கொல்லப்படப் போவதை, ஸநத்குமாரர் முதலானோர்கள் தெரிவித்து, பரசுராமரை சாந்தியடையச் செய்தனர். 

( தாதோஜ்ஜீவனக்ருʼன் ந்ருʼபாலககுலம்ʼ த்ரி​:ஸப்தக்ருʼத்வோ ஜயன்
ஸந்தர்ப்யாத² ஸமந்தபஞ்சகமஹாரக்தஹ்ரʼதௌ³கே⁴ பித்ரூʼன் | 
யஜ்ஞே க்ஷ்மாமபி காஸ்²யபாதி³ஷு தி³ஸ²ன் ஸால்வேன யுத்⁴யன் புன​:
க்ருʼஷ்ணோ(அ)மும்ʼ நிஹனிஷ்யதீதி ஸ²மிதோ யுத்³தா⁴த் குமாரைர்ப⁴வான் ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).​

 அதன் காரணமாக,, பரசுராமர், தன் அஸ்திரங்களைத் தியாகம்  செய்தார். மாஹேந்திர மலையில் தவமிருக்கத் தொடங்கினார்.  அந்த வேளையில், , கோகர்ணம் வரையிலான பூமியானது கடலில் மூழ்கத் தொடங்கியது. இதைக் கண்ட தவசீலர்கள், பரசுராமரை பிரார்த்திக்க, தியானத்தினால் பரசுராமர் ஒரு வில்லை வரவழைத்து, அதில் அக்னியாஸ்திரத்தைப் பூட்டினார். இதைக் கண்டு அஞ்சி, பணிந்தது ஸமுத்திரம்.   பின், ஸமுத்திரத்தில் ஒரு ஹோம அகப்பையை எறிந்து, அந்த எல்லை வரை ஸமுத்திரத்தை விலகச் செய்து ஒரு நிலப்பரப்பை உண்டாக்கினார். அதுவே இன்றைய கேரள தேசம்.

இவ்விதமாக பரசுராமரின் அவதார லீலைகளை விவரித்த பட்டத்திரி, இத்தகைய மகிமை வாய்ந்த, ஸ்ரீகுருவாயூரப்பன், தன் நோய்களை நீக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்!..

கார்த்தவீர்யன் பரம பக்தன். அனுக்கிரக சக்தியை, ஸ்ரீதத்தாத்ரேயரிடமிருந்து வரமாகப் பெற்றிருந்தான். கார்த்தவீர்ய மந்திரத்தை, முறையாக உபதேசம் பெற்று ஜபிக்கிற பக்தர்களின் துன்பங்கள் விலகுவது இன்றளவும் கண்கூடாக நடக்கும் விஷயம். குறிப்பாக, பொருட்கள் காணாமல் போனால், கார்த்தவீர்யனை நினைத்து பிரார்த்தித்தால், அவை உடனடியாகக் கிடைக்க அருள்கிறான் கார்த்தவீர்யன்.

பட்டத்திரி, ஸ்ரீ குருவாயூரப்பனிடம், ஒவ்வொரு அவதார லீலையையும் ஸ்லோக ரூபமாக அர்ப்பணிக்கும் பொழுது, 'தாங்கள் இப்படியெல்லாம் செய்தீர்களா?' என்று வினவி, அதற்கு ஸ்ரீஅப்பன், 'ஆம்' என்று ஒப்புதல் அளிப்பது வழக்கம். அப்போது, ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படாத நிகழ்வுகளையும் ஸ்ரீஅப்பன் பட்டத்திரிக்கு எடுத்துரைப்பாராம். கேரள உத்தாரணம் பாகவதத்தில் கூறப்படவில்லை. ஸ்ரீமந்நாராயணீயத்தில், பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாக,  வெளிப்படுத்தப்படுகிறது

(அடுத்த தசகத்திலிருந்து, ஸ்ரீமத் பாகவதத்தின் மணிமுடியாக விளங்கும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதார லீலைகள் ஆரம்பம்...).

(தொடர்ந்து தியானிக்கலாம்!).

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..