நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 14 ஏப்ரல், 2018

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU... PART 25...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.25. !.ராவண மாயை!!!.

Image result for lord rama, surpanakha

பட்டத்திரி, சூர்ப்பனகையின் பிரவேசத்தைப் பற்றி அதிகம் விவரிக்கவில்லை.. புத்தி கெட்ட சூர்ப்பனகையின் வேண்டுகோள்களைப் பொறுக்க மாட்டாமல், அண்ணல் அவளை இளையவனிடம் அனுப்ப‌, பின் அவள் மூக்கறுபட்டதும், அவமானப்பட்ட சூர்ப்பனகையின் தூண்டுதலால் போருக்கு வந்த கர தூஷணர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரக்கர்களை ஸ்ரீராமர் முடித்ததும் பட்டத்திரியால் சொல்லப்படுகிறது.

( ப்ராப்தாயா​: ஸூ²ர்பணக்²யா மத³னசலத்⁴ருʼதேரர்த²னைர்நிஸ்ஸஹாத்மா
தாம்ʼ ஸௌமித்ரௌ விஸ்ருʼஜ்ய ப்ரப³லதமருஷா தேன நிர்லுனனாஸாம் | 
த்³ருʼஷ்ட்வைனாம்ʼ ருஷ்டசித்தம்ʼ க²ரமபி⁴பதிதம்ʼ  தூ³ஷணம்ʼ ச த்ரிமூர்த⁴ம்ʼ
வ்யாஹிம்ʼஸீராஸ²ரானப்யயுதஸமதி⁴காம்ʼஸ்தத்க்ஷணாத³க்ஷதோஷ்மா || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).

பட்டத்திரி, மேலும் சொல்லத் துவங்குகிறார்!.. சூர்ப்பனகையின் தூண்டுதலால், ராவணன் கோபாவேசம் கொண்டான்!. அவனுடைய நிர்ப்பந்தத்தின் பேரில், மாரீசன் மாய மானாக வந்தான்!.. ஸ்ரீராமர், சீதா தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, அதன் பின்னே ஓடி, அதனைக் கொன்று வீழ்த்தினார். 

( வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே. (குலசேகராழ்வார்) ).

மாரீசனுடைய மாயக் குரலைக் கேட்ட சீதை, லக்ஷ்மணரைக் கட்டாயப்படுத்தியதன் பேரில், அவர் சீதையை தனித்து விட்டு விட்டு  நீங்க, ராவணன், அவளை அபஹரித்துப் போனான். ஸ்ரீராமர், மிகவும் துன்பமடைந்த போதிலும்,  (அவதார நோக்கமான ) ராவண வதத்திற்கு உபாயமான உதவி கிடைத்ததில் ஒரு விதமாக ஆறுதலடைந்தார்.

இந்த  இடத்தில் பட்டத்திரி, மறைமுகமாக அத்யாத்ம ராமாயணத்தை நினைவூட்டுகிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. அத்யாத்ம ராமாயணத்தின்படி, ஸ்ரீராமர், தான் யார் என்பதை அறிந்திருந்த போதிலும் அதை வெளிக்காட்டவில்லை.  ராவணனும், தான் யார் என்று அறிந்திருந்ததால், கர தூஷணர்களின் வதம் குறித்த செய்தி வந்ததும், ஸ்ரீராமரே தன்னைக் கொல்ல வந்த ஸ்ரீமஹா விஷ்ணு  என்று அறிந்து கொண்டு, அவரைக் கோபப்பட வைக்க வேண்டியே சீதையைத் தூக்கி வந்ததாகவும், அவளை அசோக வனத்தில் வைத்து, தாயைப் போல பாதுகாத்தான் எனவும் அத்யாத்ம ராமாயணம் சொல்கிறது.

ஸ்ரீராமராகிய பரமாத்மா அருகிலிருந்தும், சீதையாகிய ஜீவன், (மாய) பொன் மானையே விரும்புகிறது. அதனால் அநேக துன்பங்களை அடைகிறது!. வால்மீகி ராமாயணத்தில், இது நமக்கு உணர்த்தப்படுகிறது.

பின், சீதையைத் தேடி, ஸ்ரீராமர் செல்லுகையில், படுகாயமடைந்திருந்த ஜடாயுவைக் காண்கிறார். தன்னை வதைத்து விட்டு, அன்னையை ராவணன் அபஹரித்த செய்தியை, ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு, மேலுலகம் அடைய, அவருக்கு ஸ்ரீராமர் அந்திமக் கிரியைகளைச் செய்கிறார். பின், வழியில் அண்ணலைப் பிடித்த கபந்தன், முடிக்கப்படுகிறான். பம்பை நதி தீரத்தில் சபரியைப் பார்த்த பின்னர், ஹனுமாரைச் சந்தித்து மிகவும் மகிழ்கிறார். இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீகுருவாயூரப்பன், தன்னைக் காத்தருள வேண்டுகிறார் ஸ்ரீபட்டத்திரி!!!.

(தொடர்ந்து தியானிப்போம்).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது!.

1 கருத்து:

  1. ஸ்ரீராமராகிய பரமாத்மா அருகிலிருந்தும், சீதையாகிய ஜீவாத்மா (மாய) பொன் மானையே விரும்புகிறது. அதனால் அநேக துன்பங்களை அடைகிறது !

    ’ஆசையே துன்பத்திற்கு மூல காரணம்’ என்பதை இதன் மூலம் வால்மீகி இராமயணம் நமக்கு உணர்த்துகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..