நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 24 நவம்பர், 2016

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM..PART 4.. கண்ணனை நினை மனமே... பாகம் 2...பகுதி 4.. கஜேந்திர மோட்சம்..

Image result for lord krishna images, gajendra moksha


கஜேந்திரனின் நிர்குண பரப்பிரம்ம ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் தரப்பட்டுள்ளது.. மிக உயர்வாக இந்த ஸ்துதியைப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம்..  இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.


"யாரால் இந்த உலகம் உருவாகி, உயிரூட்டப் பெற்றதோ, அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கிறேன்.

யாருடைய வடிவாகவே இந்தப் பிரபஞ்சம் விளங்குகிறதோ, யார் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ , அந்தப் பரம்பொருளைச் சரணடைகிறேன். யார், தேவர்களாலும் ரிஷிகளாலும் கூட அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து ரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம்,தொழில், வடிவம் முதலியவை இல்லாமல் இருப்பினும், உலகத்தின் நன்மைக்காக இவற்றை தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ,யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும் வடிவமற்றதுமான பரப்பிரம்மமோ, அவருக்கு என் வந்தனம்.

பரிசுத்தமான மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்குக் காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதவரும், சரணடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம் கொண்டவருமாக இருப்பவர் எவரோ அவருக்கு நமஸ்காரம்.

யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த‌ ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்ணால் காண்கின்றார்களோ, அந்த பரம்பொருளுக்கு நமஸ்காரம். நான் மோக்ஷத்தையே விரும்புகிறேன். மாயையால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றும் இல்லை. ஆகவே, ப்ரம்மமும் பரமபதமுமாகி விளங்கும் பகவானைச் சரணடைகிறேன்."

இவ்வாறு கூறித் துதித்தது கஜேந்திரன். இதை சுருக்கமாக 'ஆதிமூலமே, அநாத ரக்ஷகா, அரவிந்தா' என்று கஜேந்திரன் மனமுருகி, கதறி அழைத்ததாகக் கூறுவர். இந்த திருநாமங்களை அல்லும் பகலும் ஸ்மரிப்பவருக்கு தீராத துன்பம் என்று ஏதும் வராது என்பது நம்பிக்கை.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், இவ்விதம் சொல்லக் காரணம், பரம்பொருளின் எங்கும் நிறை தன்மையை இந்த ஸ்தோத்திரம் விரிவாகப் பேசுகிறது.. இதைப் படிப்பவருக்கு, எங்கும் நிறைந்த எம்பெருமான், தனக்கு வந்திருக்கும் துன்பத்தை அறிவான், அதைத் தீர்க்கும் சக்தியும் அவன் ஒருவனுக்கே உண்டு என்னும் திட நம்பிக்கை ஏற்படுகிறது.. அதனால், பூரணமாக, அவனைச் சரணடைந்தால், அவன் பார்த்துக் கொள்வான், தனக்கு எது நன்மையோ அதனைச் செய்வான் என்று உறுதி கொண்டு, எம்பெருமானைச் சரணடைகின்றனர். முழுமையான சரணாகதி என்னும் கட்டையைப் பிடித்துக் கொண்டால், பிறவிக் கடலையே கடந்து விடலாம் என்னும் போது, வரும் துன்பங்கள் ஏன் தூசாகாது??!!.

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. (நம்மாழ்வார்).


(தொடர்ந்து தியானிப்போம்)..

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

  1. கஜேந்திர மோட்சத்தின் மூலம் சொல்லியுள்ள பூரண சரணாகதித் தத்துவம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..