நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 27 மே, 2015

KANNANAI NINAI MANAME.....PART 29.....கண்ணனை நினை மனமே!.. பகுதி 29... கபில கீதை (தொடர்ச்சி..).கபில மூர்த்தி, தொடர்ந்து, பின்வருமாறு தேவஹூதிக்கு உபதேசிக்கலானார்.

'பெண்ணின் வயிற்றில் புகும் ஜீவனானவன், பல துன்பங்களை அடைகிறான். அவற்றினின்றும் நீங்குவதற்கு இயலுவதில்லை.. இருப்பினும், (கர்ப்ப காலத்திலேயே) தெளிந்த ஞானத்தை  அடைகிறான். ஆயினும், பிரசவ காலத்தில், ஞானத்தை இழந்து விடுகின்றான். பல வித தொல்லைகளுடனும்  பீடைகளுடனும் பால்யத்தைக் கடக்கிறான்.  இளமையில் மீண்டும் மதி மயக்கத்தை அடைகிறான்....இது என்ன கஷ்டம்!' என்று தேவஹூதிக்கு பகவான் உபதேசித்தார்.


ஸ்ரீமத் பாகவதத்தில், ஒரு ஜீவன், பெண்ணின் கருப்பையில், கருவாகி, முழு வளர்ச்சியடையும் பல்வேறு நிலைகள் விரிவாக விளக்கப்படுகின்றன. அதன்படி, ஏழாவது மாதத்தில், கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு முழுமையான ஞானம் ஏற்படுகின்றது. தன்னை, இவ்விதம் தாயின் கர்ப்பத்தில் புகுத்திய பகவானை, துதிக்கத் துவங்குகின்றது. 'கரம் கூப்பி, உம்மை நமஸ்கரிப்பதைத் தவிர, வேறு எதைச் செய்ய இயலும் என்னால்?!..' என்று வணங்குகின்றது . 'இந்த ஜென்மத்தை, பிறவிச் சுழலில் இருந்து கரையேறும் பொருட்டு, கட்டாயம் உபயோகப்படுத்தப் போகின்றேன். அதற்காக, பகவானின் கிருபை கட்டாயம் கிடைக்கும்...' என்றெல்லாம் நிச்சயித்துக் கொண்டிருக்கும் போதே, ஸூதிகா வாயு உந்தித் தள்ளுவதால், தலை கீழாக திரும்பி, பூமிக்கு வந்து, அஞ்ஞானப் போர்வையால் மதியானது மூடப்படுவதால், வீறிட்டு அழத் துவங்குகின்றது

நல்ல வழியில் செல்லும் தன்மையுடைய ஜீவன், பிறவியை வீணே கழிக்கும் குணமுடையோருடன் கூடியிருக்க நேர்ந்தால், மதி மயக்கம் ஏற்பட்டு, அவர் வழியிலேயே சென்று, அதன் பலனாக, மீண்டும் பிறவிச் சுழலில் அகப்படுகின்றான். இதையே பட்டத்திரி, சுருக்கமாக விவரித்திருக்கிறார். கபில மூர்த்தியின் உபதேசத்தை நாம் தொடரலாம்...

'பித்ருக்களையும், தேவர்களையும் முறைப்படி பூஜித்துக் கொண்டு, இல்லற தர்மத்தில் இருப்பவனும், அவன் காலம் முடிந்த பின், தக்ஷிண மார்க்கத்தில் சென்று, அவன் செய்த புண்ணியம் முடிந்த பின்னர், பூமியில் மீண்டும் பிறவி எடுக்கின்றான். எனக்கு அர்ப்பணமாகச் செய்யப்பட்ட செயல்களே (மீண்டும் பிறவி தராத) உத்தர மார்க்கத்திற்கு காரணமாகின்றன' என்று கபில மூர்த்தி,  தன் தாயாகிய தேவஹூதிக்கு உபதேசம் செய்தார்.

(படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. (நம்மாழ்வார்)).

இவ்விதம் கபிலர் செய்த உபதேசத்திலிருந்து, அறிய வேண்டுவதை நன்கு அறிந்து கொண்டாள் தேவஹூதி. தனக்குப் பிறந்தவராயினும், பகவானை இன்னாரென்று அறிந்து கொண்டவளாகிய அவள், அவரைத் துதித்தாள். கபிலர், தேவஹூதிக்கு அருள் செய்து விட்டு, பாரத நாட்டின் வடகிழக்கில்,  மக்களுடைய நன்மையின் பொருட்டு, யோகியர்களுடன் கூடி வாசம் செய்து வருகின்றார்.

பகவான் கூறியபடிக்கு பக்தி யோகத்தில் நிலைபெற்ற  மனதுடையவளான தேவஹூதி, நாளடைவில் பகவானிடமே நிலைத்த சித்தமுடையவளாய், முக்தியடைந்தாள்.

பட்டத்திரி, இவ்விதமாக கபில மூர்த்தியின் உபதேசங்களைச் சொல்லி விட்டு, பின்வருமாறு பிரார்த்திக்கிறார்.

பரம கிமு ப³ஹூக்த்யா த்வத்பதா³ம்போ⁴ஜப⁴க்திம்ʼ
ஸகலப⁴யவிநேத்ரீம்ʼ ஸர்வகாமோபநேத்ரீம் | 
வத³ஸி க²லு த்³ருʼட⁴ம்ʼ த்வம்ʼ த்வத்³விதூ⁴யாமயான்மே
கு³ருபவனபுரேஸ² த்வய்யுபாத⁴த்ஸ்வ ப⁴க்திம் ||

'பரமனே!, மேலும் பேசுவதால் ஆகப்  போவது என்ன? (ஒன்றுமில்லை). உமது திருவடி மலரிணைகளில் செய்யப்படும் பக்தி ஒன்றே எல்லா விதமான அச்சங்களையும் போக்கி, அனைத்து விதமான விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் என்று நீரே திடமாக அருளியிருக்கிறீர்!. அதனால், குருவாயூரப்பா!!...எனது நோயை நீக்கி, உம்மிடம் திடமான பக்தியை ஏற்படுத்தியருளும்!'...

இவ்விடத்தில், 'அவனருளாலே அவன் தாள் வணங்கி..' என்பது நமக்குப் புரிகிறது. பகவானை வணங்கவும் துதிக்கவும், அவனருள் அவசியம்.. அவனன்றி ஓர் அணுவும் அசையாது அல்லவா?!...'எல்லாம் அவன் செயல்' எனும் போது, அவனது திருவடிகளில் அசையாத, சஞ்சலமற்ற பக்தியை அருளுவதும் அவன் கருணையே!... 

போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை
ஆரப் பரு க,எனக்கு ஆராவமுதானாயே

முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந் தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ

என்ற நம்மாழ்வார் திருவாக்கினை உன்னி,  பகவானின் கருணை நம்மீது பொழிய வேண்டுவோம்!..

(தொடர்ந்து தியானிப்போம்!).

அடுத்த தசகத்தில்...'நரநாராயணாவதாரம்').


வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..