நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

AADI AMAVASAI,(6TH AUG 2013) BHEEMANA AMAVASYA VRATHA...ஆடி அமாவாசை (பீமன அமாவாசை விரதம்).


அன்பர்களுக்கு வணக்கம்.

சூரியனும், சந்திரனும் ஒரே  இராசியில், ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் தினமே அமாவாசை ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும், ஒரு வருடத்தில் வரும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியன மிகுந்த முக்கியத்துவம் பொருந்திய தினங்களாக சிறப்பிக்கப்படுகின்றன.

அமாவாசை தினம், பித்ரு பூஜைக்கும், இறை வழிபாட்டுக்கும் உகந்த தினமாகும். இம்மண்ணுலகில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடே பித்ரு பூஜை. இதன் முக்கியத்துவம் குறித்து, மஹாளய பட்சம் (சொடுக்கவும்) பதிவில் சொல்லியிருக்கிறேன்.

புண்ணிய நதிகளில் நீராடுவது ஏன்?
மனோகாரகனான சந்திர பகவானின் இராசி கடகம். கடகத்தில் சந்திரன், உடல்காரகனான சூரியனோடு சஞ்சரிக்கும் நேரத்தில் செய்யப்படும் புண்ணிய காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பான பலனைத் தரும் என்பது கண்கூடான உண்மை. அன்றைய தினம் புண்ணிய நதிகளில் நீராடுவது, உடல் மற்றும் மன நோய்களை நீக்கும். 

ஏனென்றால், அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில், ஏராளமான ரிஷிகள், முனிவர்கள், சூக்குமமாக மண்ணில் உலாவி வரும் சித்தர் பெருமக்கள் ஆகியோர் தம் தவத்திலிருந்து நீங்கி, புண்ணிய நதிகளில் நீராடி, அவர்களின் தவப்பலனை, இவ்வுலகில் வாழும் மக்கள் நலம் பெறும் பொருட்டு, அந்த நதி நீருக்குத் தருகின்றனர். ஆகவே, அந்த நல்ல நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடும் போது, நம் பிணிகள் யாவும் குணமடைகின்றன.

புண்ணிய நதிகள், கடல் ஆகியவற்றில் நீராடி, பின் அவற்றின் கரையில் செய்யப்படும் பித்ரு பூஜைகள், நாட்பட்ட துன்பங்கள், சோகங்களிலிருந்து விடுவித்து நன்மை அளிக்கும் சக்தி உடையன. ஆகவே ஆடி அமாவாசை தினத்தில், இராமேஸ்வரம், பவானி கூடுதுறை முதலான திருத்தலங்களில் நீராடி, பித்ரு கடன் நிறைவேற்றுவதை பெரும்பாலானோர் கடைபிடிக்கிறார்கள்.

அமாவாசை தினம் இறைவழிபாட்டுக்கும் உகந்த  தினமாகும். முற்காலத்தில், தெய்வ நம்பிக்கை மிகுந்திருந்ததால், பல்வேறு விரதங்களும் பூஜைகளும் அமாவாசை தினத்தில் கடைபிடிக்கப்பட்டன.பௌர்ணமி, அம்பிகை பூஜைக்கு உகந்த தினமாக அமைவது போல், அமாவாசை சிவபூஜைக்கு உகந்த தினம். சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முக்தியளிக்கும் எம்பிரான் வழிபாடு, அமாவாசை தினத்தில் நடைபெற்றால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும்.

சிவனார் வழிபாடு மட்டுமல்லாமல், இன்னமும் பல கிராமப்புறங்களில், காவல் தெய்வங்களுக்கு அமாவாசை தினத்திலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. உக்ர தேவதைகள் என்று அறியப்படும், ஸ்ரீ முனீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி முதலான தெய்வங்களுக்கு, அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. அதிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் பெருவாரியான மக்கள் கூடி, விழா எடுப்பித்து, அன்னதானம் முதலானவற்றை நடத்துகிறார்கள்.

இந்தப் பதிவில், ஆடி அமாவாசையன்று,சிவனாரைக் குறித்துச் செய்யப்படும் மகிமை பொருந்திய ஒரு விரதத்தையும், விரதக் கதையையும் காணலாம்.

பீமன அமாவாசை விரதம், ஜ்யோதிர் பீமேஸ்வர விரதம், பதிசஞ்சீவினி விரதம் முதலான பெயர்களால் அழைக்கப்படும் இந்த விரதம், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதம் பற்றி, மிகப் பெரிய புராணமான ஸ்காந்த புராணத்தில் மிக அழகுற விவரிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் அனைவராலும் கடைபிடிக்கப்பட்ட இந்த விரதமானது, காலப்போக்கில் மாற்றமடைந்து, இப்போது, கர்நாடக, ஆந்திர பிரதேச மக்களால் மட்டுமே பெருவாரியாகக் கடைபிடிக்கப்படுகின்றது. கர்நாடகாவில் ஆஷாட(ஆடி)அமாவாசை 'பீமன அமாவாசை' என்றே அழைக்கபடுகின்றது. இங்கு சந்திரமானன பஞ்சாங்கத்தைப் பின்பற்றும் வழக்கம் உள்ளதால், இது ஆஷாட மாதத்தின் நிறைவு தினமாகும். மறு நாள் பிரதமையிலிருந்து, சிராவண(ஆவணி) மாதம் துவங்குகின்றது.

இந்த விரதம் பெண்களுக்கானது. திருமணம் ஆன பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள், தம் கணவர் மற்றும் உடன் பிறந்தோர் நலன் வேண்டி இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர். குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் நலன் வேண்டுவதே இந்த விரதத்தின் முக்கிய நோக்கம்.

திருமணமான பெண்கள், சுமார் ஒன்பது வருடங்கள் வரையில் இந்த விரதம் செய்கின்றனர்.

விரதக் கதை:
முன்னொரு காலத்தில், சௌராஷ்டிர தேசத்தில், தேவசர்மா என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கங்கா என்ற பெயரில், அழகான ஒரு மகள் இருந்தாள். வயது முதிர்ந்த அந்த அந்தணர், காசி யாத்திரை செய்யத் தீர்மானித்தார். அக்காலத்தில் காசி யாத்திரை சென்று வர பல காலம் ஆகும். திரும்பி வருவது என்பதும் இறையருள் இருந்தால் தான் நடக்கும். இப்படியிருக்க, தம் இளவயது மகளை தம்முடன் அழைத்துச் செல்வது இயலாது என்பதால், திருமணம் முடிந்து தனியே வசிக்கும் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, காசி  செல்லத் தீர்மானித்தார்.

அவ்வாறே, தம் மகளை, மகனிடம் ஒப்படைக்கும் போது, சிறிது பணமும் நகைகளும், உடைமைகளும் கொடுத்து, ஒரு வேளை தான் திரும்ப வராவிட்டால், அவற்றை, அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு உபயோகிக்குமாறு கூறிச் சென்றார்.

அவர் சென்று ஒரு வருடமாகியும் திரும்ப வராததால், அவரது மகனும் மருமகளும் கவலை கொண்டனர். அந்தணர் வராதது குறித்த கவலையில்லை அது. தங்கைக்கு தக்க இடம் பார்த்து மணம் செய்ய வேண்டுமே என்பதே அந்தக் கவலை. 

மகனுக்கு, தந்தை கொடுத்துச் என்ற பணத்தையும் பிற உடைமைகளையும் தானே எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மீறியது. இந்த நிலையில், அவன் விநோதமான ஒரு அறிவிப்பைக் கேட்க நேர்ந்தது. அந்த நாட்டின் அரசனின் மகன்(இளவரசன்) திடீரென இறந்து விட்டதால், அவனை மணந்து, அவனோடு உடன்கட்டை ஏறுவதற்காக, ஒரு பெண் வேண்டுமெனக் கேட்டு அறிவிப்புச் செய்திருந்தான் அந்நாட்டு மன்னன். அக்கால வழக்கப்படி, மனைவி உடன்கட்டை ஏறினால், கணவன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்பது நம்பிக்கை.

யாரும் தங்கள் மகளை இந்தக் கொடூரத்திற்கு பலியிடத் துணியவில்லை. பேராசை பிடித்த அண்ணனும் அண்ணியும்  கங்காவை அழகாக அலங்கரித்து, அரசனிடம் ஒப்படைத்தனர். இந்தச் செயலுக்கு வெகுமானமாக  கங்காவின் எடைக்குச் சமமான  தங்கமும் அவனுக்குத் தரப்பட்டது.

கங்கா, தன் விதியை எண்ணி நொந்து அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. தன் தந்தையிருந்தால், இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்று எண்ணி மனம் புழுங்கினாள் அவள். கங்காவுக்கும் இறந்த இளவரசனுக்கும் திருமணம் நடைபெற்றது. உடன், இளவரசனின் உடலும் பாகீரதி நதிக்கரைக்கு அருகிலிருந்த‌ மயானத்திற்கு ஊர்வலமாகச் சென்றது. கங்காவும் உடன் அழைத்துச் செல்லப்பட்டாள்.

திடீரென்று பெருமழை பொழியத் துவங்கியது. வெகு நேரமாகியும் மழை விடாததால், அனைவரும், மயானத்திலிருந்து செல்லத் துவங்கினர். அரசனும், மறு நாள் வந்து எரியூட்டலாம் என்று தீர்மானித்து, கங்காவையும் தன்னுடன் வருமாறு அழைத்தான். ஆனால் கங்காவோ வர மறுத்து, தன் இறந்த கணவனின் சடலத்துடன் அங்கேயே இருக்கத் தீர்மானித்தாள். அரசனும் அவளை அங்கேயே விட்டுவிட்டு அரண்மனைக்குச் சென்றான்.

இரவு முழுவதும் கங்கா அங்கேயே இருந்தாள். மறுநாள் விடிகாலை, ஆடி அமாவாசை புண்ணிய தினம். அன்று தன் பெற்றோர்கள் அனுசரிக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கங்காவுக்கு நினைவு வந்தது. இக்கட்டான நிலையில் இறைவனைத் தவிர துணையேதுமில்லை என்று உணர்ந்த அவள், இந்த நிலையிலிருந்து மீள, தானும் அந்த விரதத்தைச் செய்து இறைவனை வேண்ட முடிவெடுத்தாள். உடனே அவள், அருகிருந்த பாகீரதி நதியில் நீராடி, நதிக்கரையிலிருந்த களிமண்ணை எடுத்து, இரு விளக்குகள் செய்தாள். அருகிலிருந்த, எண்ணையின் உதவியில்லாமல் எரியக்கூடிய ஒரு வித மரத்தின் வேரை எடுத்து வந்து, சிக்கிமுக்கிக் கல்லின் உதவியால் தீபமேற்றினாள்.

அந்த இரு தீபங்களிலும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து, தன் தாயார் அனுசரிக்கும் முறைப்படி பூஜை செய்தாள். நிவேதனம் செய்ய எதுவும் இல்லாத சூழலில், களிமண் உருண்டைகளையே கொழுக்கட்டை போல் செய்து நிவேதனம் செய்தாள்.

விரதத்தின் முக்கிய அங்கம், நிவேதனம் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை, ஆண்கள் யாராவது, தம் முழங்கையினால் உடைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அங்கு யாரும் இல்லை. அப்போது ஒரு அழகிய இளம் தம்பதியர் அந்த இடத்திற்கு வந்தனர். மயானத்தில் தன்னந்தனியாக பூஜை செய்து கொண்டிருக்கும் கங்காவைக் கண்டு, அவள் கதையைக் கேட்டு, அவள் நிலையைக் கண்டு இரங்கினர்.

பிணமாகக் கணவன் கிடந்த நிலையிலும் இறை நம்பிக்கையை விடாது, 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்று உளமார வணங்கித் துதிக்கும் அவள் பக்தி, அந்த இளம் தம்பதியை உருக்கியது.

தம்பதியருள், அந்த இளம் கணவன், கங்கா தயாரித்திருந்த களிமண் உருண்டைகளை உடைக்க ஒப்புக் கொண்டான். அவ்வாறே செய்து, அவளை, 'தீர்க்க சுமங்கலி பவ' என்று வாயார வாழ்த்தினான்.

கங்கா, அவன் வாழ்த்தினைக் கேட்டு வியந்தாள்.  'இது எப்படி சாத்தியம்?' என்று கேட்டாள்.

அந்த இளம் தம்பதியர் அவளை நோக்கி, 'நீ உன் கணவனை ஏன் எழுப்பாமல் இருக்கிறாய்?, சென்று எழுப்புவாயாக'. என்று கூறினர்.

எதுவும் புரியாமல், கங்காவும், தன் கணவனை எழுப்பினாள். என்ன ஆச்சரியம்?!!. அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. இறந்த இளவரசன், தூக்கம் கலைந்து எழுபவனைப் போல் எழுந்தான். 

நடந்தவற்றை கங்காவின் மூலம் அறிந்த இளவரசன், தனக்கு உயிர் தந்த இளம் தம்பதியைத் தேடிய போது அவர்கள் அந்த இடத்தில் இல்லை.

எல்லாம் சிவனருளால் நிகழ்ந்ததென்று உணர்ந்து, தம்பதியர் மகிழ்ந்தனர். அப்போது அங்கு வந்த அரசனும் மகிழ்ந்து, இறையருளைப் போற்றி, தம்பதியரை, தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அன்று முதல், அந்நாட்டிலுள்ளோர் அனைவரும் இந்தப் புண்ணிய விரதத்தைச் செய்யலாயினர். 

கதையின் சாரம்:
யார் கைவிட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தின் காவலனான இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை. நம்மிடம் இருந்து, அன்பு, பக்தி மற்றும் நம்பிக்கையை மட்டுமே அவன் எதிர்பார்க்கிறான். எந்நிலையில் இருந்தாலும் மனமுருகி வேண்டினால், அவன் நமக்கு உதவக் காத்திருக்கிறான். இனி ஏதும் செய்ய இயலாது என்ற நிலையிலும் இறைவனால் எந்தச் சூழலையும் இனிதாக மாற்ற இயலும். பக்தியின் சக்திக்கு எல்லையே இல்லை.

விரதம் அனுசரிக்கும் முறை:
களிமண்ணால் செய்யப்பட்ட இரு விளக்குகள் அவசியம். இவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது வாங்கலாம். தற்போது, ஜோடி பித்தளை அல்லது வெள்ளி விளக்குகள், சிவ பார்வதி திருவுருவப்படங்கள் அல்லது விக்ரகங்களை வைத்தும் பூஜிக்கிறார்கள்.

இவற்றுடன், பூஜைக்குத் தேவையான பூக்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், விரலி மஞ்சள், மஞ்சள் கயிறு(நோன்புச் சரடுக்காக), கஜ்ஜ வஸ்திரம் எனப்படும், பஞ்சினை, குங்குமம் தோய்த்து  உருவாக்கப்பட்ட மாலை (படம் பார்க்க. இரு விளக்குகளுக்கும் சேர்த்து அணிவிக்கப்பட்டிருப்பது). நிவேதனமாக, காசுகள் பொதித்து உருவாக்கப்பட்ட, கொழுக்கட்டைகள், மாவிளக்கு தீபங்கள்.

கொழுக்கட்டை பின்வருமாறு செய்யப்படுகின்றது. அரிசி அல்லது கோதுமை மாவில் நீர் கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டி, மத்தியில் ஒரு காசு வைத்து, சுற்றிலும் ஊற வைத்த பருப்புகளை வைக்க வேண்டும். மற்றொரு உருண்டையால் அதனை மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டைகளை உண்பதில்லை. ஆகவே, இவை தவிர வேறு நிவேதனங்களும் செய்யலாம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, விடிகாலையில் நீராடி, வீடு, பூஜையறை முதலியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். கொடுத்திருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர வேண்டும்.

விளக்குகளை சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அம்பிகையை ஆவாஹனம் செய்யும் விளக்கில், ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளைக் கோர்த்து அணிவிக்க வேண்டும்.

அரிசி அல்லது தானியங்கள் நிரம்பிய தட்டில், விளக்குகளை வைக்க வேண்டும். அம்பிகை விளக்கை வலப்புறம் வைக்கவும். ஒன்பது இழைகளாலான கஜவஸ்திரம் சாற்றி, நெய்யூற்றி திரி போடவும். விளக்குகளின் முன்பாக, சிவபெருமான், பார்வதி விக்ரகங்களோ, மங்கள கௌரி விக்ரகமோ வைக்கலாம். அவற்றுக்கும் பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, ஒன்பது முடிச்சுக்களிட்ட நோன்புச் சரடுகளைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். சரடுடன் ஒரு பூவையும் சேர்த்து முடிந்து வைக்கலாம். ஒன்பது வெற்றிலை, ஒன்பது, பாக்கு, இயன்றால் ஒன்பது வகைப் பழம் முதலியவற்றை, விளக்குகளின் வலது புறம் தயாராக எடுத்து வைக்கவும். நோன்புச் சரடுகளையும் ஒரு வெற்றிலையில் வைத்து, விளக்குகளின் வலப்புறம் வைக்கவும்.

பூஜை துவங்கு முன்பாக தீபமேற்ற வேண்டும். சிவனார், பார்வதி தேவி குறித்த துதிகளைக் கூறி அர்ச்சனை செய்யவும். மஞ்சள், குங்குமம், மலர்கள் முதலியவற்றை அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். கௌரி துதிகளும் சொல்லலாம்.

பூஜையின் முடிவில், தீபாராதனை செய்து, பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். நோன்புச் சரடுகளை, வீட்டில் உள்ள பெண்களில் வயதில் மூத்தவர், தான் கட்டிக் கொண்ட பின் மற்ற பெண்களுக்குக் கட்டி விட வேண்டும்.

மாவிளக்கு ஆரத்தி செய்வது இந்தப் பூஜையின் நியமங்களில் ஒன்று. பூஜை நிறைவில் கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு மாவிளக்குகள் செய்து ஆரத்தி செய்ய வேண்டும்.

அதன் பின், வீட்டில் ஆண் உறுப்பினர்கள், கொழுக்கட்டையை, வெற்றிலை பாக்கின் மேல் வைத்து, தமது முழங்கையால் நசுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, உள்ளிருக்கும் காசு வெளிவரும். சிறுவர்கள், காசை எடுத்துக் கொண்டு ஆசி பெறுவர். வயதில் மூத்தவர்கள், சிறியவர்களுக்கு ஆசி வழங்குவர். இவ்வாறு கொழுக்கட்டையை உடைப்பதால், துரதிருஷ்டங்கள், பிரச்னைகள் முதலியவை நீங்கி, நீண்ட ஆயுள், சுகம் முதலியவை உண்டாகும் என்பது ஐதீகம். 

அதன் பின்  பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி, பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிப்பர். அன்றைய தினம், வறுத்த, மற்றும் பொரித்த உணவுகளை உண்பதில்லை.

மறு நாள், புனர் பூஜை செய்து, இறைத் தம்பதியரை இருப்பிடம் எழுந்தருளச் செய்ய (யதாஸ்தானம்)வேண்டும். களிமண் விளக்குகளானால், துளசிச் செடியின் அடியில் அவற்றை வைத்து வணங்கி, ஒரு வாளியில் நீர் எடுத்து, அவற்றைக் கரைத்து, அந்த நீரை செடிகளுக்கு ஊற்ற வேண்டும். திருமணமான  பெண் அனுசரிக்கும் ஒன்பதாவது வருட விரதமானால், அந்த விளக்குகளை, புதிதாகத் திருமணமாகி, விரதம் அனுசரிக்கும் பெண்ணுக்குக் கொடுக்கலாம். சில வீடுகளில்,ஒன்பதாவது வருட விரத நிறைவின் போது,  ஒரு புதிய ஜோடி விளக்குகளை வாங்கி, சகோதரனுக்குக் கொடுக்கிறார்கள்.

ஒவ்வொரு விரதமும் பூஜையும் காரண காரியங்களால் உண்டானது. கர்மவினைகளில் அகப்பட்டு, உலக வாழ்க்கையில் அல்லலுற்று அரற்றும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நம்பிக்கையூட்டி, இறையருளால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம் என்ற வலியுறுத்துவதே விரத பூஜைகளின் நோக்கம்.

ஆடி அமாவாசை தினத்தன்று, அம்மையப்பனைப் பணிந்து, இறையருளால்

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.(google pictures).

6 கருத்துகள்:

 1. கதையின் சாரம் உட்பட அனைத்து விளக்கங்களும் மிகவும் அருமை அம்மா... நன்றிகள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி டிடி சார்!!

   நீக்கு
 2. சத்தியவான் சாவித்ரி கதையை ஒட்டி இது போல இறந்த‌ கணவனை மீட்ட பெண்களின் கதை(சரித்திரம்) எல்லா பகுதிகளிலும் வழங்குகிறது.சம்ப‌ந்தர் கூட‌
  ஒரு பெண்ணுக்கு தன் பதிகத்தால் வேண்டி கணவனை மீட்டுத்தருவார்.

  நல்ல சம்பிரதாயத்தினை விவரமாகக்கூறியுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா!!. சாவித்திரி சத்தியவான் கதையே வெவ்வேறு விதமாக வழங்குகிறது.

   ////சம்பந்தர் கூட ஒரு பெண்ணுக்கு தன் பதிகத்தால் வேண்டி கணவனை மீட்டுத்தருவார்.////

   ஆம் ஐயா!! திருமருகல் திருத்தலத்தின் தல புராணம் இதனை விரிவாகப் பேசுகிறது.

   தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..