நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

CHITHRA POURNAMI POOJA(25/4/2013)....சித்ரா பௌர்ணமி பூஜை.



சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நன்னாளே சித்ரா பௌர்ணமி. 

மற்ற எல்லா பௌர்ணமி தினங்களை விடவும் சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும்.

சித்ராபௌர்ணமி நன்னாளில், சித்ரகுப்தருக்கு விரதம் இருந்து, பூஜித்து வழிபடுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில், இது முக்கியப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பெண்களே விரதமிருந்து வழிபாடுகளைச் செய்கிறார்கள்.

சித்ரகுப்தர் புராணம்:
ஒரு சமயம், கயிலையில்  பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார்.   அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து  தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சிவபெருமான், மானிடர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியை அவருக்கு வழங்கினார். சித்ர குப்தரும் அவ்வாறே செய்யலானார்.

இவ்வாறு சித்ரகுப்தர் தோன்றிய தினமே சித்ரா பௌர்ணமி.

'சித்' என்றால் மனம், 'குப்த' என்றால் மறைவு எனவும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவபுண்ணியங்களைக் கண்காணிப்பதாலும் இவருக்கு இந்த திருநாமம் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.

பின்னொரு சமயம், தேவேந்திரனின் தவத்திற்கு மெச்சி, சிவபெருமான், சித்ரகுப்தரை, தேவலோகப் பசுவான காமதேனுவின் வயிற்றில் உதிக்குமாறு பணித்தார். அதன் படி, சித்ரகுப்தரும், காமதேனுவுக்கு மகனாகப் பிறந்தார்.   அவரை, யமதர்மராஜருக்கு உதவியாக, ஜீவராசிகளின் பாவபுண்ணியங்களைக் கணக்கிடும்படி சிவனார் பணிக்க, சித்ரகுப்தரும், அவ்வாறே செய்து வருகிறார்.

இது குறித்த மற்றொரு புராணக்கதை.

யமதர்மராஜர்,  தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக் கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர். அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன் தோன்றினார். காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர். அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், யமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார். இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.

சித்ரா பௌர்ணமி பூஜை:
சித்திரை மாதம் பௌர்ணமி பெரும்பாலும் சித்திரை நட்சத்திர தினத்தன்றே வரும். சித்ரா பௌர்ணமியன்று  அதிகாலை, வீடு வாசலை மெழுகி, மாக்கோலமிட வேண்டும். இல்லத்தில், தெற்கு பார்த்து வாசற்கதவு அல்லது ஜன்னல் இருந்தால் திறந்து வைத்து, அந்த இடத்தை ஒட்டி, பூஜை செய்யும் இடத்தை அமைத்தல் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தில், ஒரு ஆள் அமர்ந்திருப்பது போல, சித்ரகுப்தர் உருவை மாக்கோலமிட வேண்டும். அவரது திருக்கரங்களில் ஏடும் எழுத்தாணியும் இருப்பது போல் வரைய வேண்டும். பழங்காலத்தில், ஏட்டையும் எழுத்தாணியையும் பூஜைக்கு வைப்பார்களாம். சில வீடுகளில் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை, மாக்கோல மாவால் பாதங்கள் வரைவதும் வழக்கம்(ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு வரைவது போல்). ஆனால், சித்ரகுப்த பூஜைக்கு, 8 வடிவம் வரைந்து அதன் மேல் விரல்கள் இருக்குமாறு வரைவார்கள்.

சித்ரகுப்தரது படம் இருப்பின் அதனையும் வைத்துப் பூஜிக்கலாம்.சௌகரியப்பட்டால், கலசம் வைத்துப் பூஜிக்கலாம். இல்லாவிட்டால், சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தூப தீபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டி மனமுருகி வழிபட வேண்டும். ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவராதலால், வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், சித்ரகுப்தருக்குப் பலவண்ண வஸ்திரம் சாற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.நிவேதனத்துக்கு, தயிர்சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவை நிவேதனம் செய்ய வேண்டும்.

காமதேனுவின் திருவயிற்றில் உதித்தவராதலால், பசும்பால், தயிர் முதலியவற்றை சித்ரகுப்தருக்கு நிவேதிப்பதில்லை. அன்றைய தினம் விரதமிருப்போர், உப்பு, பசும் பால்,  தயிர் முதலியவற்றை உட்கொள்வதுமில்லை. எருமைப் பால், எருமைத் தயிர் முதலியவையே நிவேதனம். அபிஷேகத்திற்கும் பசும் பால் உபயோகிப்பதில்லை. அன்றைய தினம் எருமைத் தயிர் உபயோகித்து செய்த தயிர் சாதத்தை  பிரசாதமாக‌ விநியோகிப்பது வழக்கம்.

பூஜையுடன் கூட விரதமும் எடுப்பதானால், பெரும்பாலும் ஹவிஸையே நிவேதனத்துக்குப் பயன்படுத்துவார்கள். 'ஹவிஸ்' என்பது, சாதம் கொதிக்கும் பொழுது அதில் ஒரு கரண்டி நெய்யை ஊற்றித் தயாரிக்கப்படுவது. இது மிகவும் விசேஷமான நிவேதனமாகும். விரதம் எடுக்காவிட்டால் கூட, இதை நிவேதனத்திற்குப் பயன்படுத்தலாம்.

பூஜை முடிந்ததும், நெல், கோதுமை, எள், பயறு, உளுந்து, கடலை, காராமணி, துவரை அல்லது துவரம் பருப்பு, கொள்ளு முதலிய நவ தானியங்கள், மட்டைத் தேங்காய், கொத்துடன் மாங்காய் அல்லது இரண்டு மாங்காய்கள், தாம்பூலம் தக்ஷிணை முதலியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். சித்ரகுப்தரது புராணத்தை வாசிப்பது பூஜையின் முக்கிய அம்சமாகும்.

அன்று மாங்காய், மாம்பழம், வாழைப்பழம் முதலியவற்றை உணவில் சேர்க்கலாம். சிறியவர்கள், பெரியவர்கள் யாரானாலும், பூஜை செய்ய இயலாதவர்களானாலும் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவது மிகச் சிறப்பு.

சித்ரா பௌர்ணமி விரதம்:
சித்ரா பௌர்ணமி விரதம் எடுப்பதானால், ஒரு சித்ராபௌர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு மாதமும், பௌர்ணமியன்று மேற்கூறியவாறு பூஜை செய்து உப்பில்லாமல் சாப்பிட்டு விரதமிருக்க வேண்டும்(மொத்தம் பன்னிரண்டு பூஜைகள்). அடுத்த சித்ரா பௌர்ணமியன்று விரதத்தை முடிக்கலாம். சௌகரியப்படாவிட்டால், நடுவில் ஏதேனும் ஒரு பௌர்ணமி தினத்தில் முடிக்கலாம்.

விரதம் எடுப்பதற்கு என விசேஷமாகப் பூஜைகள் இல்லை. மேற்கூறியவாறே பூஜை செய்து ஆரம்பிக்கலாம். ஆனால் விரத நிறைவு தினத்தன்று, வழக்கமாகச் செய்யும் பூஜையைச் செய்து விட்டு, ஐந்து கலசங்களை வைத்து, கலச பூஜை செய்ய வேண்டும்.  ஐந்து வைதீகர்களுக்கு பஞ்ச தானம்(வேஷ்டி, தீர்த்த பாத்திரம், தீபம், மணி, புத்தகம்) முதலியவற்றைத் தானம் செய்து விட்டு அவர்களுக்கு உணவிட வேண்டும்.

சித்ரா பௌர்ணமி விரத மகிமை:
சித்ரா பௌர்ணமியன்று செய்யப்படும் வழிபாடுகள், எல்லா தேவர்களையும் திருப்தியடையச் செய்கின்றன. சித்ரகுப்தர், இந்த பூஜையால் அகமகிழ்ந்து, அதன் காரணமாக, பூஜை செய்பவரது பாவ புண்ணியங்களை பரிவுடன் தீர்மானிக்கிறார். இதை விளக்கும் ஒரு புராணக் கதை பின்வருமாறு.....

ஒரு சிறுவனுக்கு முரட்டுத் தனம் அதிகமாக இருந்தது. அவனுக்குப் படிப்பும் வரவில்லை.  நாளாக ஆக அவன் கெட்ட பழக்கங்களும் கூடிக் கொண்டே போயின. அவன் தாய் மிகக் கவலை கொண்டாள். மகனை அழைத்து, 'மகனே!!, சித்ரகுப்தய நம: எனத் தினமும் சொல்லி வா. சித்ரகுப்தர் உனக்கு நல்வழி காட்டுவார்' என்று கூறினாள். அவனும் அவ்வாறே கூறி வந்தான். அவன் வளர்ந்து பெரியவனானான். அவனுக்கு, அந்திமக் காலம் நெருங்கியது. சித்ரகுப்தர் அவன் ஏட்டைப் புரட்டினார். தனது பெயரைக் கூறிய ஒரு நல்ல செயலைத் தவிர அவன் ஏதும் செய்யவில்லை என அறிந்தார். அவன் மேல் இரக்கம் கொண்டார். அவனுக்கு இன்னும் ஏழு நாளில் மரணம் சம்பவிக்க இருந்தது.

சித்ரகுப்தர் அவன் கனவில் தோன்றி,' நீ உன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியமும் செய்யவில்லை.  இன்னும் ஒரு வாரமே உனக்கு ஆயுள். ஆகவே, நீ உன் நிலத்திலொரு குளம் வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் உனக்கு33/4 நாழிகை சொர்க்க வாசம் உண்டு. நிறைய மாடுகள் நீர் அருந்தினால் சொர்க்க வாசம் நிரந்தரமாகும். பசுவின் உடலில் அனைத்து தேவர்களும் நித்யவாசம் செய்கிறார்கள். நீ இறந்ததும், தர்மராஜரின் சபைக்கு அழைத்து வரப்படுவாய். நீ முதலில் சொர்க்க வாசம்  அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசம் அனுபவிக்கிறாயா? என்று யமதர்மராஜர் கேட்பார். நீ, சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொல்லிவிடு' என்று கூறினார்.

சித்ரகுப்தரின் அறிவுரைப்படி அவனும் ஒரு குளம் வெட்டினான். ஆறு நாட்கள் வரை அதில் நீர் வரவில்லை. அவன் செய்த பாவங்கள் அவனுக்குத் தடையாக நின்றன. ஏழாம் நாள், சித்ரகுப்தரின் கருணையால், அதில் ஒரு ஊற்று தோன்றியது. சித்ரகுப்தரே, ஒரு மாடாக ஓடி வந்தார். அதன் கரையில் நின்று, 'மா' என்று குரல் கொடுத்தார். உடனே, நிறைய  மாடுகள் ஓடி வந்தன. அதில் ஒரு மாடு அந்த குளத்து நீரை அருந்தியது.

உடனே, அந்த பாவியின் உயிர் பிரிந்தது. அவன் தர்மராஜ சபைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் பாவ புண்ணியக் கணக்குகளை அறிந்த யமதர்மராஜர், அவனை 'முதலில் சொர்க்க வாசம் அனுபவிக்கிறாயா அல்லது நரக வாசமா?' எனக் கேட்க, அவனும் தான் முதலில் சொர்க்க வாசம் அனுபவிப்பதாகச் சொன்னான்.

அதன்படி, முதலில் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். பூவுலகில் அவன் வெட்டிய குளத்தில் நீர் ஊற ஊற மாடுகள் வந்து நீர் குடித்த வண்ணம் இருந்தன. அவன் புண்ணியக் கணக்கும் ஏறிக் கொண்டே இருந்தது. அவன் சொர்க்கத்திலேயே நிரந்தரமாக இருக்கலானான்.

தன் நாமத்தை உச்சரித்ததற்காக மட்டுமே ஒருவனுக்கு சொர்க்க வாசம் வழங்கினாரென்றால்,  சித்ரகுப்தரது கருணையையும் சித்ரகுப்த பூஜையைச் செய்வதன் மகிமை எத்தகையது என்பதையும்  நாம் உணரலாம்.

புனர் பூஜை:
பூஜை முடிந்த தினத்தன்றோ அல்லது மறுநாள் காலையிலோ, இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம், கற்பூரம் காட்டி, சித்ரகுப்தரை இருப்பிடம் சேர வேண்டிப் பிரார்த்தனை செய்து, பூஜை செய்த படத்தை அல்லது கலசத்தை வடக்காக நகர்த்தி வைக்கவும். சித்திரத்தில் பூஜை செய்திருந்தால், நகர்த்துவது போல் பாவனையாகச் செய்யவும்.

இவ்வாறு முறையாகப் பூஜிப்பவர்களுக்கு, சித்ரகுப்தர் அருளால், இகபர நலன்கள் யாவும் கிடைப்பது உறுதி.

சித்ரா பௌர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு.
அம்பிகையின் அம்சமாக, சந்திர பகவான் கருதப்படுவதால், பொதுவாக,  எல்லா பௌர்ணமி தினங்களிலுமே, அம்பிகைக்கு பூஜைகள், வழிபாடு முதலியவை செய்வது வழக்கம்.  சித்ரா பௌர்ணமி தினம், அம்பிகைக்கு உகந்த ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி முதலியவை பாராயணம் செய்து பூஜிப்பது சிறப்பு. திருவிளக்கு பூஜையும் செய்யலாம். திருவிளக்கு பூஜை செய்யும் முறைக்கு இங்கு சொடுக்கவும்.

கடம்பவனம் எனப் புகழ்பெற்ற மதுரையில், தன் பாவச் சுமை நீங்கும் பொருட்டு, இந்திரன் சிவனாரை வழிபாடு செய்த நன்னாளே சித்ராபௌர்ணமி. அங்கு எழுந்தருளியிருக்கும் சுயம்பு மூர்த்தியின் விமானத்திற்கு இந்திர விமானம் என்றே  பெயர்.

சித்ராபௌர்ணமி தினத்தில் சிவனாரை வழிபடுவது அளப்பரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். அன்றைய தினத்தில் சிவனாருக்கு, வில்வம், மருக்கொழுந்து முதலியவைகளால் அர்ச்சனை செய்து சுத்த அன்னம் நிவேதித்து வழிபடுவது சிறப்பு. பெரும்பாலான சிவத் தலங்களில் அன்றைய தினம், ஐப்பசி பௌர்ணமி தினம் போல அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள். ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரின் ஜெயந்தி மகோத்சவமும் சித்ராபௌர்ணமி தினத்தன்றே கொண்டாடப்படுகின்றது.

ஆனை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரையின் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. தன் தங்கையான மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காணும் பொருட்டு, கள்ளழகர் பெருமான், வைகையாற்றில் இறங்கும் நன்னாள் சித்ராபௌர்ணமியே. அன்றைய தினம் அழகர் பெருமான் அணிந்திருக்கும் பட்டின் நிறமே, அந்த வருடத்தின் மழைப் பொழிவையும், விவசாயத்தையும் கணிப்பதற்கு உதவுகிறது. பச்சை வண்ணப் பட்டில் அழகர் பெருமான் வைகையாற்றில் இறங்கினால், மழை பொழிவு சிறந்து, விவசாயம் செழிப்பதாக ஐதீகம். வெண்பட்டு, அமைதியையும் சுபிட்சத்தையும் குறிக்கிறது.


இவ்வாறு சிறப்புகள் பல பொருந்திய சித்ராபௌர்ணமி தினத்தன்று இறைவழிபாடு செய்து, நலம் பல பெறுவோம்.

இறையருளால்,
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..