நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 14 மார்ச், 2013

KAARADAYAN NONBU(14/3/2013)....காரடையான் நோன்பு!.


மாசி மாதமும் பங்குனி மாதமும் சேரும் நேரத்தில் கடைபிடிக்கப்படுவதே, சாவித்திரி விரதம் எனப்படும் காரடையான் நோன்பு.  இந்த நோன்பு நோற்கும் முறைகளைப் பற்றி விரிவாக, என் உருகாத வெண்ணையும் ஓரடையும் பதிவில் எழுதியிருக்கிறேன்.

இந்த வருடம், 14/3/2013, வியாழன் அன்று மாலை சுமார் 3லிருந்து 3.45 மணி அளவில் காரடையான் நோன்பு வருகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில், நமது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருளும் ஸ்ரீ காமாக்ஷி அன்னைக்கு பூஜை செய்வது அன்னையில் ஈடிணையில்லாத அருளைப் பெற்றுத் தரும். பூஜையின் போது அம்பிகையைப் போற்றும் தீர்க்க சௌமாங்கல்யத்தை அளிக்கும் ஸ்லோகம் சொல்லலாம். மிகச் சிறிய ஆனால் மகிமை பொருந்திய துதியான, இதை தினமும் சொல்வது சிறப்பு.  ஸ்லோகத்துக்கு இங்கு சொடுக்கவும்.

அன்று நோன்பு நோற்றவுடன், சத்தியவான் சாவித்திரி விரதக் கதையைப் படிப்பது சிறப்பு.

பொதுவாக, சாவித்திரி சத்தியவான் விரதக் கதை அனைவருக்கும் தெரியும். பெரும்பாலும் சுருக்கமாகவே அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. உண்மையில் சாவித்திரி, தர்மத்தின் ஸ்வரூபமானவரும், 'தர்மராஜர்' என்றே போற்றப்படுபவருமான யமதர்மராஜனிடம் நடத்திய உரையாடல், மிகப் பெரும் ஆன்மீக உண்மைகளையும், நுணுக்கமான ஆன்ம ரகசியங்களையும் உள்ளடக்கியது. 'இதம் சரீரம் க்ஷேத்திரம்' என்பதற்கேற்ப, நம் ஆன்மா, ஒவ்வொரு உடலையும் பிறவியையும் ஒரு க்ஷேத்திரம் போலவே கடந்து செல்கிறது. 'உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இந்த பிறப்பு, இறப்பு சுழலின் நடுவில், ஒருவர் செய்யும் கர்மாக்களின் வகைகள், அவற்றின் பலன்கள் ஆகியவை, ஒருவரின் ஆன்ம யாத்திரையில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒருவரின் கர்மாக்களைப் பொறுத்தே அவர் மறுபிறவி எடுப்பதோ பரமபதம் அடைவதோ நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய நுண்ணிய ரகசியங்களைச் சொல்லும்அந்த உரையாடலை, இந்தப் பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் ஒரு சுருக்கமான முன்கதை. அஸ்வபதி ராஜனின் திருமகளான சாவித்திரி, தன் விருப்பத்திற்கேற்ப, சத்தியவானைக் கரம் பிடிக்கிறாள். தன் கணவன் அற்ப ஆயுள் உள்ளவன் என்று தெரிந்தும் அவள் உறுதி மாறவில்லை. நாரத மஹரிஷியின் சொற்படி, சாவித்திரி விரதம் இருந்து அம்பிகையை மனமாரப் பூஜித்து வந்தாள். தன் கணவனின் ஆயுள் முடியும் தினமாக, நாரத மஹரிஷி சொன்ன தினத்தில், விறகு வெட்டவும், பழங்கள் சேகரிக்கவும் கானகத்திற்குச் சென்ற கணவனுடன் தானும் உடன் சென்றாள்.

காட்டில் சத்தியவான், விறகு வெட்டும் சமயத்தில், உயிர் துறந்தான். தர்மராஜர், கட்டை விரல் பருமனுள்ள அவன் ஆன்மாவை கட்டி எடுத்துக் கொண்டு சென்றார். அது சாவித்திரியின் கண்களில் தென்பட்டது. தன் கணவனின் உடலை, மிருகங்கள் தீண்டாவண்ணம், இலை தழைகளால் மூடி வைத்து விட்டு, தானும் தர்மராஜரைப் பின் தொடர்ந்தாள்.

அதைக் கண்ட தர்மராஜர், 'பெண்ணே, உன் கணவன் பூவுலகில் வாழும் காலம் நிறைவடைந்து விட்டது. அவன் தன் கர்மாவை அனுபவிக்க என் உலகம் வருகிறான். ஆகவே நீ திரும்பிச் செல்!' என்று கூறினார்.

சாவித்திரி உடனே 'கர்மாவை அனுபவிக்க என்று கூறினீர்களே, கர்மம் என்றால் என்ன? அது எதனால் வருகிறது? என்று கேட்டாள்.

தர்மராஜர் 'பெண்ணே, கர்மங்கள் சுபம், அசுபம் என இரு வகைப்படும். யார் யாருக்கு என்னென்ன கடமைகள் என்பது வேதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவையே சுபமான கர்மாக்கள். செய்யக்கூடியவற்றைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாதவற்றைச் செய்வதும் அசுபமான கர்மாக்களை விளைவிக்கும். கர்மங்களுக்கு காரண ரூபிணியும், கர்ம பலனைக் கொடுக்கிறவளும் மாயா ஸ்வரூபியான பிரகிருதி தேவியே. பலனை எதிர்பாராது செய்யும் இறைவழிபாடே, கர்மங்களை நீக்கி, பரமபக்தியைக் கொடுக்கும். இவ்வாறு கர்மங்கள் நீங்கியவரை முக்தி அடையச் செய்பவளும், கர்மங்களின் பலன்களை அனுபவிக்க வேண்டியவரை மறுபிறவி அடையச் செய்பவளும் பிரகிருதி தேவியே' என்றார்.

சாவித்திரி, 'ஸ்வாமி, எந்த கர்மாக்களினால் ஜீவாத்மாக்கள் பிறவியையும், சொர்க்க நரக வாசத்தையும் அடைகிறார்கள்?' என்றாள்

இதைக் கேட்டவுடன், அவளது அறிவுத் திறனையும் ஞானத்தையும் கண்டு வியந்த தர்மராஜர், மிகுந்த சந்தோஷத்துடன், 'பெண்ணே, உன் ஞானத்தைக் கண்டு மிகுந்த சந்தோஷமடைகிறேன்!!. வேண்டிய வரங்களைக் கேள்!!' என்றார்.

சாவித்திரி, தனக்குத் தன் நாயகனிடத்தில் நூறு பிள்ளைகளும், தன் பெற்றோருக்கு நூறு பிள்ளைகளும், தன் மாமனாருக்குக் கண் பார்வையும், அவர் இழந்த தன் ராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தாள்.

அவள் கேட்டவாறு வரமளித்து, பின், சத்தியவானின் உயிரையும் திரும்பத் தர உவந்த தர்மராஜர், சாவித்திரி முதலில் கேட்ட கேள்விகளுக்குப் பின் வருமாறு விடையளித்தார்.

"சுப, அசுப கர்மாக்களைப் புரிபவர்கள், அதற்கேற்ப முறையே, சொர்க்கத்திலும் நரகத்திலும் வாசம் செய்து, பின் கர்மத் தளையிலிருந்து விடுபடுவதற்காக பூமியில் பிறக்கிறார்கள்.

தனக்கென எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் தான் செய்யும் கர்மாக்களை எல்லாம்,  இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்பவன், தன் ஆயுள் முடிந்ததும் எவ்விதத் துன்பத்தையும் அடைவதில்லை. பிறவித் தளையிலிருந்து விடுபட்டு விடுகிறான்.  அவனே நிஷ்காமன். இதற்கு மாறாக, தான் செய்யும் கர்மாக்களில் விருப்பு வெறுப்பு உள்ளவன் சகாமன்.

சுப கர்மாக்களைச் செய்யும் சகாமர்கள், எந்தெந்த தெய்வங்களிடம் பக்தி செலுத்துகிறார்களோ அந்தந்த தெய்வங்களுக்கான உலகங்களுக்குச் செல்கிறார்கள். தம் புண்ணியப் பலன்கள் நிறைவடையும் வரை அங்கிருந்து விட்டு,  பின் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள்".

இவ்வாறு கூறிவிட்டு, சுபகர்மாக்களில் முதன்மையான, தான தர்மங்களின் பலன்களைச் சொல்லத் துவங்கினார்.
தானங்களின் பலன்கள்:
"தானங்களில் சிறந்தது அன்னதானம்.  அன்னதானம் செய்பவர், பருக்கைக்கு  ஒரு வருடம் என்ற கணக்கில் சிவலோக வாசம் பெறுவார். அன்னதானத்திற்கு கால நியமம் என்று ஒன்றுமில்லை. எந்த சமயத்திலும் அன்னமிடலாம்.

கன்னிகாதானம் செய்பவர் பதினான்கு இந்திர காலம் வரையிலும், வஸ்திரங்கள், தங்கம் வெள்ளி முதலானவற்றை தானம் செய்பவர் ஒரு மன்வந்திரம் வரையிலும் சந்திரலோகத்தில் வாசம் செய்வார்கள்.

பூமியைத் தானம் செய்பவர்கள், சந்திர சூரியர் இருக்கும் வரையிலும் விஷ்ணு லோகத்தில் வாசம் செய்வார்கள். குளம் போன்ற நீர் நிலைகளை ஏற்படுத்துபவர்களும், அவற்றைத் தூர் வாரி சுத்தம் செய்பவர்களும், ஜனலோகம் என்ற உயர்ந்த லோகத்தை அடைவார்கள்.  நந்தவனத்தை தானம் தருபவர் துருவ லோகத்தை அடைவார்.

தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகளின் பலன்கள்:
இறைவன் கோவில் கொண்டருளும் ஆலயங்களுக்குச் செய்யும் சேவைகளும் இணையில்லாத நற்பலன்களை அளிக்கும். கோவிலுக்கு பல்லக்கு, சப்பரம் முதலியவை செய்து அளிப்பது சொர்க்க வாசம் பெற்றுத் தரும். இறைவன் திருவீதி  உலா வரும் வீதிகளைச் செப்பனிட்டுத் தருபவர், ஆயிரக்கணக்கான வருடங்கள் இந்திர லோக வாசம் செய்வார்கள். பசு தானம் செய்பவர்கள் கோலோகத்தையும், கஜ(யானை) தானம் செய்பவர்கள் இந்திரனுக்குச் சமமான நிலையையும், வெண்சாமரம் அளிப்பவர் பதினாயிரம் வருடம் வாயுலோக வாசத்தையும் பெறுவார்கள்.

இறைவனுக்கு டோலோற்சவம் செய்பவர் பரமபதத்தை அடைவர். தேவி உபாசகர்கள், ஸ்ரீ லலிதா தேவியின் இருப்பிடமான மணித்வீபத்தில், அம்பிகையின் ஸ்ரீபாத சேவையில் இருப்பார்கள். சித்திரை, மாசி மாதங்களில் சிவபூஜை செயபவர்கள், சிவலோகத்தை அடைவர்.  ஸ்ரீராமநவமியை பக்தியுடன் அனுஷ்டிப்பவர்கள் ஏழு மன்வந்திரங்கள் விஷ்ணு லோக வாசம் செய்து, பின்  பூவுலகில் ராமபக்தராய் அவதரிப்பார்கள். ஏகாதசியன்று விஷ்ணு ஆராதனை செய்பவர், பிரம்மதேவரின் ஆயுள் பரியந்தம் விஷ்ணு லோக வாசம் செய்து, பின் பூவுலகில் கிருஷ்ண பக்தராய்ப் பிறந்து கோலோகத்தை அடைவார்கள்.

ஞாயிறு, மாதப்பிறப்பு, சுக்கில பக்ஷ சப்தமி ஆகிய தினங்களில் சூரியனை ஹவிஸூடன் ஆராதிப்பவர்கள், பதினான்கு இந்திரர் காலம் வரை சூரிய லோக வாசம் பெறுவர். அதன் பின், நல்ல தேக ஆரோக்கியம் கொண்டவராக பூமியில் பிறப்பார்கள். மாசி மாதம் சுக்கில பஞ்சமியில் சரஸ்வதி தேவியை ஆராதிப்பவர்கள், பிரம்மனின் ஆயுள் பரியந்தம் மணித்வீபத்தில் வாசம் செய்து, பின் பூமியில் ஸ்ரீ விஷ்ணுவின் தேஜஸூடன் விளங்குவர்.

ஹரிநாம சங்கீர்த்தனத்தை நாராயண க்ஷேத்திரத்தில் செய்பவர் விஷ்ணுலோகத்தை அடைவர்.  மண்ணால் ஆன லிங்கத்தை பூஜிப்பவர்கள், ஒரு மண் துகளுக்கு ஒரு வருடம் வீதம் சிவலோக வாசம் செய்வார்கள். தீர்த்த யாத்திரை செய்பவர்கள், பரமபதத்தை அடைவார்கள்.

அம்பிகையைப் பூஜித்துத் தொழும் தேவி யக்ஞமே, யக்ஞங்களுள் தலை சிறந்தது. மும்மூர்த்திகளும், திரிபுர சம்ஹார நேரத்தில்  இந்த யக்ஞத்தைச் செய்து ஜகன்மாதாவின் அருளைப் பெற்றார்கள். இதைச் செய்தே, தக்ஷப்பிரஜாபதி அம்பிகையை மகளாகப் பெற்றார்.

புண்ணிய தீர்த்தங்களுள் கங்கை, பரிசுத்தமானவற்றுள் விபூதி, விரதங்களுள் ஏகாதசி, நக்ஷத்திரங்களுள் சந்திரன்,  வனங்களுள் பிருந்தாவனம், சம்பத்துக்களுள் லக்ஷ்மி தேவி, வித்தையோடு கூடியவர்களுள் சரஸ்வதி, பதிவிரதைகளுள் துர்க்கை, சௌபாக்யவதிகளுள் ராதை எவ்வாறு சிறப்பாகக் கருதப்படுகின்றனவோ அவ்வாறு தேவி யக்ஞம் யக்ஞங்களுள் சிறப்பாகப் போற்றப்படுகிறது".

இவ்வாறு தர்மராஜர் கூறி, சாவித்திரியை, தன் கணவனுடன் திரும்பிச் சென்று நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்குமாறு ஆசீர்வதித்தார்.  அப்போது சாவித்திரி, யமதர்மராஜரை, மிக மகிமை வாய்ந்த 'யமாஷ்டகத்தால்' துதித்தாள். யமதர்மராஜரின் திருநாமங்களையும் மகிமைகளையும் போற்றும்  யமாஷ்டகம், எப்பேர்ப்பட்ட பாவங்களிலிருந்தும் விடுபடச் செய்யும் மகத்தான ஸ்லோகம். யமாஷ்டகத்தைப் பாராயணம் செய்ய இங்கு சொடுக்கவும்.

சாவித்திரி பின், அசுப கர்மாக்களின் விளைவான நரக தண்டனைகள் குறித்தும், பிரளய காலத்தில் உயிரினங்கள் பரம்பொருளிடம் ஒடுங்கும் விதம் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தாள்.

பின், தர்மராஜரை வணங்கி தன் இருப்பிடம் திரும்பிய சாவித்திரி, தான் பெற்ற வரங்களின் பலனாக, ராஜ்யம், நன்மக்கள், சகோதரர்கள், என அனைத்தையும அடைந்து, சகல சௌபாக்கியங்களையும் பெற்றவளாக நீண்டகாலம் வாழ்ந்தாள்.

சாவித்திரி சத்தியவான் கதை, பெண்களின் மனவுறுதியையும் எதையும் சாதிக்கும் திறனையும் கோடிட்டுக் காட்டும் ஒரு சரித்திரமாகவே கருதப்படுகிறது. காரடையான் நோன்பு தினத்தில், இதைப் படிப்பது, தெய்வீக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு மிகப் பெரும் பலம் அளிப்பதாக இருக்கிறது. 

காரடையான் நோன்பு தினத்தன்று, விரத நியமங்களுடன் அம்பிகையைப் பூஜித்து, 

வெற்றி பெறுவோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
ஆதார நூல்கள்: ஸ்ரீ தேவி பாகவதம், ஸ்ரீமத் பாகவதம், பவிஷ்ய புராணம்.

9 கருத்துகள்:


 1. வணக்கம்!

  பார்வதியார் தந்த படைப்புகளில் வாழ்வினிக்கும்
  சீா்நதி பாயும் செழித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 2. very useful updated information.thanks a lot to Lalitha.May GOD bless you.

  பதிலளிநீக்கு
 3. சாவித்திரி சத்தியவான் கதை, பெண்களின் மனவுறுதியையும் எதையும் சாதிக்கும் திறனையும் கோடிட்டுக் காட்டும் ஒரு சரித்திரமாகவே கருதப்படுகிறது. காரடையான் நோன்பு தினத்தில், இதைப் படிப்பது, தெய்வீக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு மிகப் பெரும் பலம் அளிப்பதாக இருக்கிறது.

  பயன் மிக்க அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. கார அடை எப்படி செய்வது என
  கடைசியிலாவது ஒரு வரி

  சொல்வீர்கள் என எதிர்பார்த்தோம்..
  சொல்லவில்லையே சகோதரி..

  எங்களைப் போன்ற பேச்சு(இ)லர்கள்
  எப்படி செய்வது என அறிந்து

  சுவைத்து மகிழலாம் அல்லவா
  சுவை கூட்டும் உங்கள் எழுத்துடன்..

  பதிலளிநீக்கு
 5. /////கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...

  வணக்கம்!

  பார்வதியார் தந்த படைப்புகளில் வாழ்வினிக்கும்
  சீா்நதி பாயும் செழித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//////

  கவிஞர் அவர்களின் கனிவான வருகைக்கும் கவிதையில் தந்த கருத்துரைக்கும் கரங்கள் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். என் மனம் நிறைந்த, பணிவான வணக்கங்கள் கவிஞர் அவர்களே!!

  பதிலளிநீக்கு
 6. //// Usha said...
  very useful updated information.thanks a lot to Lalitha.May GOD bless you/////

  Thank, thanks, thanks a lot Usha.

  பதிலளிநீக்கு
 7. ////இராஜராஜேஸ்வரி said...
  சாவித்திரி சத்தியவான் கதை, பெண்களின் மனவுறுதியையும் எதையும் சாதிக்கும் திறனையும் கோடிட்டுக் காட்டும் ஒரு சரித்திரமாகவே கருதப்படுகிறது. காரடையான் நோன்பு தினத்தில், இதைப் படிப்பது, தெய்வீக ரீதியாக மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு மிகப் பெரும் பலம் அளிப்பதாக இருக்கிறது.

  பயன் மிக்க அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்../////


  தங்களின் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கும் ஊக்கங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!!.

  பதிலளிநீக்கு
 8. ////அய்யர் said...
  கார அடை எப்படி செய்வது என
  கடைசியிலாவது ஒரு வரி

  சொல்வீர்கள் என எதிர்பார்த்தோம்..
  சொல்லவில்லையே சகோதரி./////

  'உருகாத வெண்ணையும் ஓரடையும் பதிவில் இருக்கிறது ஐயா. சுட்டி, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கிறேன்.மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. அருமையான விளக்கம்...

  சுயநலம் என்கிற பேசிற்கே இடமில்லை...

  பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..