நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

"பணம் பாசத்தை விலைக்கு வாங்கி ......"



http://classroom2007.blogspot.in/

இது நான் பின் தொடரும் ஒரு வலைப்பூ. ஞாயிறு தோறும் 'மாணவர் மலர்' என்ற பகுதியில் மாணவர்களின் ஆக்கங்கள் வெளிவரும். இன்றைய தினம் எனது கட்டுரை ஒன்று அதில் வெளிவந்துள்ளது. அதன் பிரதி என் நண்பர்களுக்காக இங்கே..............

My sincere thanks to Thiru. SP.VR. SUBBIAH  avl.,

to see this post with feed back SEE here



வம்ச விருத்திக்கு எது முக்கியம்?
கட்டுரையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வையே இங்கு எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, அருகாமையில் உள்ள ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் இறைவனடி சேர்ந்தார். வாரிசு இல்லாத அவர்,தன் உடன் பிறந்தவர் மகனை எடுத்து வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஆளாக்கினார் .பையன், தற்போது வெளிநாட்டில். செய்தி அறிந்ததும் அவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
        
இங்கே பையனின் 'ஒரிஜினல்' தாயார், வளர்ப்புத் தாயிடம் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கணவனை இழந்த வளர்ப்புத் தாயோ மிகுந்த மனத்துயருக்கு ஆளாகி,கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தார். விஷயம் இதுதான். தன் மகன், வெளிநாட்டில் வசிப்பதால்,அவனை இனிமேல் அடிக்கடி அழைத்து தொல்லை தரக் கூடாதெனவும்,மற்ற மாதந்திர, ஆறாம் மாதச் சடங்குகளை எல்லாம் தன் மகனை செய்யக் கட்டாயப்படுத்தக் கூடா தெனவும் 'ஒரிஜினல்' தாயார் சொல்ல,(கொள்ளி மட்டும் வைக்கலாமாம். இல்லையின்னா சொத்து கிடைக்காதுல்ல)

வளர்ப்புத்தாயோ,'இதை எல்லாம் செய்யாததுனால நாளைக்கு வீடு வாசல தர மாட்டோம்னா சும்மாவிடுவீங்களா?' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா?, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,சத்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா?.சொத்தை வாங்கின கையோட, உன்னை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொல்லுவா பாரேன்' என்று 'ஏற்றி'விட, மேடையில்லா நாடகம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
    
பணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்.

குளித்து விட்டு,கொதிக்கும் மனதை அமைதிப்படுத்த, தியானம் செய்ய உட்கார்ந்தேன். ஏனோ,எனக்கு என் தாத்தா சொன்ன,   நான் பிறந்த குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.
        
இந்த நிகழ்வில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் உண்மையே. இதை,என் தாத்தா சொன்னபடி தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நிகழ்வு கி.பி.1890 களில் துவங்குகிறது.

நாட்டரசன் கோட்டை எனும் ஊர், சிவகங்கை அருகே உள்ளது.அங்கே கிருஷ்ண தீக்ஷிதர் என்ற‌ புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி மகள் பெயர் பூரணி. பெயருக்கேற்றார் போல் அழகும் அறிவும் பூரணமாக நிரம்பியவள்.ஆனால் தலையெழுத்து?. குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார்? 'வகுத்தான் வகுத்த வகையில்'எல்லாம் நடக்கும் என திடம் கொண்டார். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தைக்கு மணம் செய்து வைத்தார். ஆனால் விதி வலியது. அவருடைய செல்ல மகள் மிகச்சிறு வயதிலேயே, வாழ்விழந்தாள்

பூரணியின் கணவன் வீட்டார்,'கன்னிகாதானம் ஆகி விட்டதால் அவள் எங்கள் வீட்டுப் பெண்,ஆகவே அவள் இங்கேயே இருக்கலாம்' எனக் கூறியும் கேட்காமல், தந்தை அவளைப் பிறந்தகம் அழைத்து வந்தார்.சில  வருடங்கள் கழிந்தபின், மதுரை,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராகத் தொண்டுபுரிந்து வந்த தீக்ஷிதரின் மூத்த மகனின் மனைவி,முருகனடி சேர்ந்தார்.  மறு மணத்திற்கு மறுத்துவிட்ட, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அவர்,தன் தங்கையை தனக்கு உதவியாக தன்னோடு அனுப்புமாறு தந்தையை வேண்டினார். தீக்ஷிதரும் சம்மதித்தார்.

இதற்கிடையில்,வறுமையில் வாடிய தீக்ஷிதரின் மற்றொரு பெண்ணின் குழந்தைகளை,தீக்ஷிதரின் மகன்கள் ஆளுக்கொருவராக பொறுப்பெடுத்து வளர்த்துக்கொடுப்பது என முடிவாயிற்று.அதன்படி,மூத்த மகனின் பொறுப்பில் வந்த குழந்தையை,பூரணி தன் சொந்த மகனே போல் வளர்த்து வந்தாள். மூத்த மகனின் வீட்டில் சகலமும் பூரணியின் பொறுப்பில் நடந்தது. அவர் குழந்தைகளுக்கு அத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு.

பூரணியின் கணவன் வீட்டாரும் பூரணியை அடிக்கடி வந்து பார்த்து நலம் விசாரித்து வந்தனர். குறிப்பாக, பூரணியின் கொழுந்தனாரும் அவர் மனைவியும் மதுரைக்கு வரும் போதெல்லாம், பூரணியை வந்து பார்க்கத் தவறுவதில்லை.

காலம் உருண்டோடியது.கால காலன், தன்னடியில் பூரணியைச் சேர்த்துக் கொண்டான். அவருக்கு யார் இறுதிச் சடங்குகள் செய்வதென்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஆனால் இது வேறுமாதிரியான பிரச்னை.'அத்தை எங்களைத் தாய்போல் வளர்த்தார். அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார்.ஆகவே நாங்கள்தான் செய்வோம் ' என்று பூரணியின் அண்ணன் மகன்கள் வாதிட,பூரணியின் சகோதரி மகனோ, 'நான் தான் அபிமான புத்திரன் [முறைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுக்காமல் வளர்த்தால் அக்குழந்தை வளர்த்தவரின் அபிமான புத்திரன்],ஆகவே எனக்குத்தான் உரிமை' என்று அடம் பிடித்தான். அத்தையின் கொழுந்தனாரோ,'எங்கள் அண்ணன் சிறு வயதில் மாண்டு போனதால் அவர் உங்கள் வீட்டுக்கு வந்தார். இல்லையென்றால் எங்களுடன் தான் இருந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்ணாகி விட்ட அவருக்கு நாங்கள் செய்வதுதான் முறை' என்றார். 

இத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும், அத்தை உள்பட ,டாடா,பிர்லா இல்லை. அத்தையில் பெயரில்,மதுரை பண்டாபீசில், அவள் தமையன்,தனக்குப் பின் தங்கைக்கு உதவும் என்று போட்டுவைத்திருந்த சொற்பத் தொகையும் ஓரிரண்டு பவுன் சங்கிலியுமே (அந்தக் காலத்தில் தங்கம் என்ன விலை?) அத்தையின் சொத்து.

கடைசியில் முடிவு என்ன ஆயிற்று?.அத்தையின்அபிமான புத்திரனுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அக்கால வழக்கப்படி மறுமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலை அப்போது. ஆகவே அவர் கர்மம் செய்தால்,அத்தையின் ஆசீர்வாதத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்,ஒரு பெண்ணின் வாழ்வை மனதில் வைத்து மற்றவர்கள் இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வயதில் மூத்த உறவினர் ஒருவர் எடுத்துக்கூற,அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவர் கூற்றுப்படியே, மறுவருடமே அத்தையின் அபிமான புத்திரனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இதை கூறிவிட்டு எங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ் ஆஃப் தி ஸ்டோரி'.

1. வம்ச விருத்திக்கு முன்னோர்களுக்கு நீத்தார் கடன்களை விடாமல் செய்வது முக்கியம்.

2. ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும். யாரும் செய்ய முன்வராவிட்டால், பிரஜைகளின் தந்தை என்ற முறையில்,ராஜாவே செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).

3.பணத்துக்காக இக்காரியங்கள் செய்யப்பட்டால்,இறந்தவரின் ஏழு தலைமுறைப் பாவம்,கர்மம் செய்தவரைச் சேரும்.

4.தர்ம சிந்தனையுடன், இம்மாதிரி காரியங்கள் நடைபெற பண உதவி செய்வது,சிவலோகப் பிராப்தியைப் பெற்றுத்தரும்.

இந்த விஷயங்களை யார் இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்வார்கள்?.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்?.

ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.

ஆ, சொல்ல மறந்துட்டேனே. எங்க தாத்தவும் இதில ஒரு சின்ன காரெக்டர் (மெயின் அல்ல). இன்னமும் பூரணியின் அபிமான புத்திரன் உயிரோடு இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன் சின்னம்மாவிற்கு திதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாக்கம்: அன்புடன், பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு.

5 கருத்துகள்:

  1. Hi

    Nice one!

    Very informative!

    Keep up the good work

    asrams

    பதிலளிநீக்கு
  2. நேர்த்தியான கட்டுரை; உணர்ச்சி பூர்வமான கட்டுரை; நிதர்சனமான கட்டுரை. எனக்கு நீங்கள் சில நாட்களுக்கு முன் கண்ட மாதிரியான (நல்லவேளை; யாரும் இறக்கவில்லை) நிஜக்கதை ஒன்று தெரியும். சொல்ல முடியாது. நண்பருக்கு வருத்தம் ஏற்படும். வீட்டுக்கு வீடு வாசற்படி. வீட்டுக்கு வீடு கொல்லைப்புறம்.

    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு
  3. நேர்த்தியான கட்டுரை; உணர்ச்சி பூர்வமான கட்டுரை; நிதர்சனமான கட்டுரை. எனக்கு நீங்கள் சில நாட்களுக்கு முன் கண்ட மாதிரியான (நல்லவேளை; யாரும் இறக்கவில்லை) நிஜக்கதை ஒன்று தெரியும். சொல்ல முடியாது. நண்பருக்கு வருத்தம் ஏற்படும். வீட்டுக்கு வீடு வாசற்படி. வீட்டுக்கு வீடு கொல்லைப்புறம்.

    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையால் பெருமையடைகிறேன். தங்கள் கருத்துரை என்னை மிக மகிழ்ச்சியடையச் செய்தது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..