நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 23 ஜூலை, 2012

AADI POORAM...இன்றோ திருவாடிப்பூரம்!!!!

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

திருவைகுந்த வாசன், ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருத்தேவியருள் ஒருவரான, ஸ்ரீ பூதேவி நாச்சியாரே ஸ்ரீ ஆண்டாளாக திருஅவதாரம் செய்தருளினார்அவர் அருளிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும், வேத, வேதாந்த, உபநிஷத சாரமாகவே கருதப்படுகிறது.

திருவில்லிப்புத்தூரில் 'பெரியாழ்வார்' எனப் பின்னாளில் போற்றப்பட்ட, ஸ்ரீ விஷ்ணு சித்தரின் நந்தவனத்தில், திருத்துழாய்ச் செடியருகில், திருவாடிப்பூரத்தன்று, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதியும் கூடிய சுபதினத்தில், மண்ணுலகத்தோரை வாழ்விக்க, அழகே உருவாகி, ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்து அருளினார். அவருக்குக் 'கோதை' என்னும் திருநாமம் சூட்டி வளர்த்தார் ஸ்ரீ விஷ்ணு சித்தர்.பரம ஞானத்தை, தந்தையே குருவாக இருந்து போதிக்க, அல்லும் பகலும் கண்ணன் திருவடிகளையே எண்ணி வளர்ந்தார்.

கண்ணனையே தம் மணாளனாக வரித்து, 'மணந்தால் கண்ணனையே மணப்பது'என்று உறுதி பூண்டார்.

ஸ்ரீ வடபத்ரசாயிப் பெருமாளுக்குச் சூட்டுதற்காக தந்தை வைத்திருந்த பூமாலையை, தம் திருக்கழுத்தில் சூடி, கிணற்று நீரில் தம் திருமுகம் நோக்கி அழகு பார்ப்பார் (அந்தக் கிணறு 'கண்ணாடிக் கிணறு' என்ற பெயருடன் திருவில்லிப்புத்தூரில் இருக்கிறது). ஒரு நாள் இதைக் கண்ணுற்று, விஷ்ணுசித்தர் தம் திருமகளாரைக் கடிந்து கொண்டார். பின் வேறொரு மாலை கட்டிச் சென்று திருமாலுக்குச் சாற்ற, அவரோ, 'கோதை சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகப்பு' என்று திருவாய்மொழிந்தருளினார். அதன் பின், நாடோறும், கோதை சூடிக் கொடுத்த மாலையே திருமாலுக்குச் சாற்றலாயினர்

பூமாலையோடு அனுதினமும் அருந்தமிழ்ப் பாசுரங்களால் பாமாலையும் சூட்டிப் பரமனை வழிபட்டார் கோதை நாச்சியார். ஆண்டாள் என்ற திருநாமத்திற்கு, அளவிலா பக்தியால் எம்பிரானை ஆண்டாள், அற்புதப் பாசுரங்களால் தமிழை ஆண்டாள், அன்பால் பக்தர் நெஞ்சமெல்லாம் ஆண்டாள் என்று பலவாறு பொருளுரைக்கலாம்.

பெருமானையே மணாளனாக அடைதற் பொருட்டு, மார்கழி மாதம் 30 நாளும் பாவை நோன்பு நோற்றார். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று நியமங்களுடன்,   பரமன் திருவருளை தான் மட்டுமில்லாமல், அனைவரும் பெறுதற் பொருட்டு திருவில்லிப்புத்தூரிலிருக்கும் தம் தோழிப் பெண்களுடன் இணைந்து, இந்நோன்பைச் செய்த்ருளினார்.

தாம் வசித்த திருவில்லிப்புத்தூரையே கோகுலமாக, வடபத்ரசாயியின் திருக்கோவிலையே நந்தகோபன் திருமாளிகையாக, தாமும் தம் தோழியரும் கோபிகைகளாக மனதினுள் வரித்துக் கொண்டு கோதை நாச்சியார் பாடியருளிய முப்பது திருப்பாடல்கள் ஒவ்வொன்றும், மங்கலமான சொற்கள், பொருளுடன் அமைந்த தமிழ்ச்சுரங்கம். 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல' பொறுமையால் நம் அனைவரையும் தாங்கும் பூமாதா, அளவுக்கு மீறி அகழ்ந்தாலும் பொன்னும் மணியும் தம் மடியிலிருந்து மானுடர்க்கு வழங்கி மகிழும் நிலமகள், படிக்கப்படிக்கத் திகட்டாமல், அள்ள, அள்ளக் குறையாத ஆழ்ந்த தமிழ்ச்சுவையுடன் பாசுரங்களை வழங்கியதில் வியப்பென்ன?!!

தம் திருமணக் கோலத்தை கனவில் கண்டருளி, அந்தக் காட்சியை, 'வாரணமாயிரம்' எனத் தொடங்கும் திருப்பாசுரங்களாக இயற்றியருளினார். (பாசுரங்களுக்கு இங்கு சொடுக்கவும்).

'மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என்ற தம் இறையருட் செல்வியின் திருவுள்ளம் அறிந்த விஷ்ணுசித்தர், திருமாலிடம் முறையிட்டார். திருமால் திருவாய் மலர்ந்தருளியபடி, திருவரங்கத்துக்குத் தம் திருமகளாரை அழைத்துச் சென்றார். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் எம்பெருமான், கோதை எனும் திருப்பெயர் சூடி வளர்ந்த பூமாதேவி நாச்சியாரைத் தம்முடன் இணைத்துக் கொண்டார். திருவரங்கமே திவ்ய தேசங்களுள் முதலாவதாக அமைந்துள்ளது. நிறைவாக (ஸ்தூல சரீரத்துடன் தரிசிக்கும் வண்ணம்) அமைந்துள்ளது திருவில்லிப்புத்தூர். ஆகவே, பூமாலையும், பாமாலையும் சூட்டி வழிபட்ட கோதை நாச்சியார், திவ்ய தேசங்களை மாலையாகச் சூடியவராக வழிபடப்படுகிறார்.

திருமகள் போல் வளர்ந்த தம் செல்வி, திருமாலை அடைந்ததில் அகமகிழ்ந்தாலும்வளர்த்த பாசத்தால்,
ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்'
செங்கண்மால்தான் கொண்டு போனான்.
என மனம் கசிந்தார் விஷ்ணுசித்தர்

ஆண்டாள் நாச்சியார், பெருமான் மீது கொண்ட பக்தி மீதுற, அவர் திருவாய் எவ்வித மணமுடையது என்று அவர் திருக்கரங்களிலிருக்கும் 'பாஞ்சசன்யம்' என்ற திருப்பெயரையுடைய சங்கைக் கேட்பது போல் அமைந்த பாசுரங்கள் சிறப்புடையவை.

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே (ஏழாம் திருமொழி)
மேலும்,

மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா நிறைந்த வெண்ணை வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்காரவடிசல் சொன்னேன்.”
என்ற ஸ்ரீ ஆண்டாளின் வேண்டுதலை,  பின்னாளில் உடையவரான ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றி வைக்க, அதன் காரணமாக, அவர் திருவில்லிப்புத்தூர் திருக்கோவிலுள் திருமாலைச் சேவிக்கச் செல்லும் போது, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் இருந்து, 'வாரும் எம் அண்ணலே' என்ற முகமன் சொல் கேட்டது. ஸ்ரீ ஆண்டாள் விக்கிரகம், இரண்டடி முன் வைத்து, தம் வேண்டுதலை நிறைவேற்றிய, ஸ்ரீ ராமானுஜரை, தம் தமையனார் ஸ்தானத்தில் வைத்து இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியதன் காரணமாகவே, 'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே' என்ற வாழி திருநாமம் ஏற்பட்டது.

படிமம்:Andal pinnazhagu.jpg

ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியே, ஸ்ரீ ஆண்டாளின் திருக்கரங்களிலிருக்கும் கிளியாக அமர்ந்திருக்கும் பாக்கியம் பெற்றவர். திருவரங்க நாதனிடம் ஆண்டாளுக்காகத் தூது சென்ற காரணத்தால் இந்தப் பேறு அவருக்குக் கிட்டியது. ஸ்ரீ ஆண்டாளின் இடத்தோளை அலங்கரிக்கும் இந்தக் கிளி, தினமும் புதிதாகச் செய்யப்பட்டு, சாயரட்சை பூஜையின் போது நாச்சியாரின் திருக்கரங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. மறு நாள் காலையில் இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பெறுவோரின் பாக்கியம் அளவிடற்கரியது. குறிப்பாக, இந்தக் கிளியை வாங்கி வந்து தம் இல்லத்தில் வைப்பதால்  திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இதைப்போல, தம் திருமண சமயத்தில் திருவரங்கநாதர் எழுந்தருளத் தாமதமானதால் திருவரங்கநாதரை அழைத்து வரும்படி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், கருட பகவானை வேண்டினார். அவ்வாறு செய்தால் தம் அருகிலேயே இருக்கும் வரமருளுவதாக வாக்களித்தார். அவ்வண்ணமே கருடபகவான் செய்ததால், இன்றும், திருவில்லிப்புத்தூரில் மட்டும், பெருமாளுடன், கருடாழ்வார், ஆண்டாளின் அருகில் திருக்காட்சி அருளுகிறார்.

திருவில்லிப்புத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரானஸ்ரீ ஆண்டாளின் அவதார தினமான திருவாடிப்பூரம் மிகப் பெரும் விழாவாக எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. திருவில்லிப்புத்தூர் தேர் மிகப் பெரியதும் சிறப்புடையதுமாகும்.

திருவாடிப்பூரம் அனைத்து வைணவக் கோவில்களிலும் பெரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவாடிப்பூரத்தன்றுஅம்பிகைக்கு வளைகாப்பு நடந்ததாக ஐதீகம். ஆகவே, பெரும்பாலான கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, அம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள் மழை பொழிகிறாள். அம்பிகைக்கு அணிவித்த வளையல்கள்முளைகட்டிய பாசிப்பயறுடன் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்பிரசாதத்தைப் பெறுபவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

சில திருக்கோவில்களில், அம்பிகை தான்ய வளம் பெருக்கும் 'சாகம்பரி தேவியாக' காய்,கனி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறாள்.

எல்லாத் தலங்களிலும் பக்தர்கள் கொண்டாடி மகிழும் திருவாடிப்பூரத்தன்று ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளைச் சரணடைந்து.

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 21 ஜூலை, 2012

பார்வதிக்குக் கங்கணமாய் ... மாயனுக்கு வண்ணப் பாயாய்...(நாக பஞ்சமி சிறப்புப் பதிவு)

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!

மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய்
மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாகக் கொண்டா யாடு பாம்பே 
(பாம்பாட்டிச் சித்தர்)


நமது இந்து தர்மத்தில் நாகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளவிடற்கரியது. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவையாகக் கருதப்படும் நாகங்கள், விநாயகரின் பூணூல் மற்றும் உதரபந்தனமாகவும், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் படுக்கையாகவும், அம்பிகையின் சிறுவிரல் மோதிரமாகவும், விளங்குகின்றன. முருகப்பெருமானின் திருவடிகளின் அருகிலும் விளங்குகின்றன.
சிவனாரின் ஆபரணங்களாக விளங்குவது நாகங்களே. ஆயிரம் தலைகளும் ஆயிரம் நாவும் படைத்த சேஷநாகம், இப்பூவுலகைத் தன் ஒரு தலைப் பாரமாகத் தாங்குகிறது.

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு.

நாக வழிபாடு வேதகாலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. சிந்து சமவெளி நாகரிகக் கல்வெட்டுக்களில், பாம்புகள் உருவம் பதித்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

நாக வழிபாடு உலகெங்கிலும் பரவியிருந்ததென்றே கூறலாம். சீன,ஜப்பான், திபேத்திய புராணங்களிலும் நாக வழிபாடு குறித்துக் கூறப்படுகிறது. கம்போடியாவிலிருக்கும் ஆலய முகப்புகளில் நாக உருவங்கள் காணப்படுகின்றன. மூன்று அல்லது ஐந்து தலை நாகம் உள்ளவை, இந்துக்கோவில்களாகவும், ஏழு தலை நாக உருவம் உள்ளவை பௌத்த விஹாரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

'சர்ப்ப' என்ற சொல்லுக்கு 'வேகம்' என்றும் ஒரு பொருள் உண்டு. வேகமாக ஊர்ந்து செல்லும் திறன் கொண்டதால், நாகங்களுக்கு சர்ப்பம் என்றும் பெயர் வந்தது.

நாகங்களின் தோற்றம் பற்றிய புராணக்கதை:
மரீசி முனிவரின் மைந்தராகிய காஸ்யப முனிவரை, தக்ஷப் பிரஜாபதியின் பெண்களான, கத்ரு, விநதை ஆகிய இருவரும் மணந்தனர்.   விநதைக்கு, சூரிய பகவானின் சாரதியாக விளங்கும், அருணன்ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் வாகனமான‌, கருட பகவான் ஆகிய இருவரும் மைந்தர்கள்.  கத்ருவுக்கு, ஆதிசேஷன்,வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளியன், தாகபுராணன், புஞ்சன் முதலான அஷ்டமாநாகங்களையும் சேர்த்து 105 நாகங்கள் பிறந்தன(சில நூல்களில் ஆயிரம் நாகங்கள் என்று சொல்லப்படுகிறது).

அஷ்டமாநாகங்களுள் ஆதிசேஷனே முதல்வராகக் கருதப்படுகிறார். மஹாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து அவருக்குப் படுக்கையாகும் பாக்கியம் பெற்றவர் இவர். ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு அவதாரங்கள் தோறும் அவருக்குத் தொண்டு செய்வதற்காகத் தானும் அவருடன் அவதாரம் செய்தார்.

இராமாவதாரத்தில், லக்ஷ்மணன் என்ற திருநாமம் தாங்கிய இளையாழ்வாராகவும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பலராம மூர்த்தியாகவும் அவதரித்து அருளினார். மேலும், பதஞ்சலி முனிவராகவும், ஸ்ரீ ஆதிசங்கரரின் குருவான, கோவிந்த பகவத் பாதராகவும், ஸ்ரீ ராமானுஜராகவும் திரு அவதாரம் செய்தது, ஆதிசேஷனே என்பது புராணம்.

அஷ்டமாநாகங்களில் ஒன்றான வாசுகி நாகமே, அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, கயிறாக உதவியது. அதன் பின், வாசுகி நாகம், சிவனாரைக் குறித்துத் தவமிருந்து அவருக்கு ஆபரணமாகும் பேறு பெற்றது.



தேவர்களும், அசுரர்களும், அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடையும் நிகழ்வு நடந்த போது, ஸ்வபானு என்ற அசுரன் சூரிய சந்திரர்களுக்கு இடையில் தேவனைப் போல் உருமாறி அமர்ந்து அமுதம் பருகிவிட்டான். இதை உணர்ந்த திருமால், சக்ராயுதத்தால் அவன் தலையைத் துண்டிக்க, தலையும் உடலும் வெவ்வேறானது. ஆனால் அமுதம் பருகியதால் அவன உயிருடனிருக்கவே, தலைக்குக் கீழும், உடல் பகுதிக்கு மேலும் நாக உருவங்கள் ஏற்பட்டன. அந்த உருவங்களே, ராகு பகவானும் கேது பகவானும் எனப் பெயர் பெற்று, கயிலை நாதனைத் நோக்கித் தவமிருந்து, கிரகபதவியை அடைந்தார்கள்.

ஒருவரின் ஜாதகரின் கர்ம பலன்களுக்கேற்ப அவரது ஜாதகத்தில் ராகுபகவானும் கேது பகவானும் இடம் பெறுகின்றனர். புத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவை, ஜாதகத்தில் சர்ப்பக் கிரகங்களான இவர்கள் இருவரின் நிலை பொறுத்தே ஏற்படுகிறது. மோட்ச காரகன் எனப் போற்றப்படும் கேதுபகவானின், அதி தேவதையான, விநாயகப் பெருமானை, இடையில் நாகம் இருப்பதைப் போன்ற(உதர பந்தனமாக) உருவில் வழிபடுவோருக்கு, கேது பகவான் அருளால் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நாகங்கள் இறையுருவங்களில் இடம் பெற்றிருப்பதற்கு ஸ்தூல,(நேரடி), சூக்ஷ்ம(மறைமுக) காரணங்கள் உள்ளன. திருமுருகனின் திருவடியில் இடம் பெற்றிருக்கும் நாகம் அகந்தையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மாரியம்மன் தலையில் குடையாக இருக்கும் ஐந்து தலை நாகம், ஐம்புலன்களையும், பஞ்ச பூதத் தத்துவங்களையும் குறிப்பதாகும்.

காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகம் ஒன்று, சிவனாரின் கழுத்தில் இருக்கும் அரவை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. இதில்,

"திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!"

இதில் நாக உரு, மனித வேட்கைகளுக்குக் குறியீடாகச் சொல்லப்படுகிறது. பெருமான், பிறைச் சந்திரனைத் தன் தலையில் சூடி இருக்கிறார். மார்பில் வெண்பன்றிக் கொம்பை மாலையாக அணிந்திருக்கிறார். கழுத்திலிருக்கும் நாகம், மேலும், கீழும் பார்த்து, எது உண்மையான சந்திரன்(மதி) என்று மதி(அறிவு) மயங்குகிறதாம்.அது போல், மனித உயிர்களும், உலக இன்பங்களால் மதி மயங்குவதாகக் கொள்ளலாம்.

சூக்ஷ்மமாகப் பார்த்தோமானால், நாகங்கள் ஞானத்தின் குறியீடுகள். குண்டலினி, மனித உடலில், நாக உருவில் உறைந்திருக்கிறது. சிவனார் உடலில் நாகாபரணங்கள் இருக்கும் இடங்களில் முக்கியமான ஆதாரச்சக்கரங்கள் உள்ளன. "நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி" என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுகிறார் தமிழ் மூதாட்டி.

நாகங்கள், பாதாள லோகமான நாக லோகத்தில் வாழ்வதாக ஐதீகம். புற்றுக்கள் தோறும், அம்பிகையே உறைகிறாள். கருமாரி அம்மன் கோவில்கள் பலவும், புற்றுக்களை ஆதாரமாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. புன்னை நல்லூர் மாரியம்மன், புற்றுமண்ணால் செய்யப்பட்ட திருமேனியே ஆவாள்.
ஆதி சுப்பிரமணியர், குகே, கர்நாடகா
ஆந்திர, கர்நாடக, வடமாநிலங்களில், ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி, நாக உருவில் வழிபடப்படுகிறார். ஞானசக்தியாக விளங்குபவர் என்பதால் இவ்வாறு வழிபடப்படுகிறார்.
 
புத்திரபாக்கியத்திற்காகச் செய்யப்படும் பூஜை, நாகப்பிரதிஷ்டையாகும். நாக உருவங்களை, கல்லில் வடித்து, முறையாக நியமங்களை கடைபிடித்து, அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய நாக தோஷங்கள் விலகுகின்றன.

நாக சதுர்த்தி/ நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்கள் கொண்டாடப்படுவதன் காரணம்:

ஆந்திர மற்றும் வடமாநிலங்களில் இவ்விரதங்கள் பிரசித்தி பெற்றது. சிராவண சுக்ல சதுர்த்தி மற்றும் பஞ்சமியன்று நாகசதுர்த்தி/பஞ்சமி, மற்றும் கருடபஞ்சமி விரதங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இது தொடர்பான புராணக்கதையின் படி, கத்ருவும் விநதையும், ஒரு நாள் நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, வானில்,பாற்கடலில் திருமகளோடு உதித்த, இந்திரனின் குதிரையாகிய, 'உச்சைஸ்சிரவஸ்'  சென்று கொண்டிருந்தது.

'பாற்கடலில் உதித்ததன் காரணமாக,  அந்தக் குதிரை எவ்வளவு வெண்ணிறமாக இருக்கிறது பார்' என்று விநதை வியக்க, நாகங்களின் தாயான கத்ரு, தன் சகோதரி விநதையின் மேல் கொண்ட அசூயையின் காரணமாக, அதன் வால் கருநிறமுடையது வேண்டுமென்றே விநதையிடம் வாதம் செய்தாள். தான் அதை நிரூபித்தால், விநதை அவளுக்கு அடிமையாக வேண்டும் என பந்தயம் வைத்தாள். விநதையும் ஒப்புக் கொள்ள, அதை நிரூபிப்பதற்காக, தன் குழந்தைகளான, கருநாகங்களை, அதன் வாலில் சுற்றிக் கொள்ளும்படிச் செய்தாள். இதற்கு சம்மதிக்காத வாசுகி முதலான நாகங்களை, தாகத்தால் தவிக்குமாறும், ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்பயாகம் நடைபெறும் பொழுது அதில் வீழ்ந்து மடியக் கடவதென்றும் சபித்தாள்.{ஜனமேஜய மஹாராஜாவால் சர்ப்ப யாகம் செய்யப்பட்ட இடம், கர்நாடகாவில் சிக்மகளூர் டவுனில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் ஹீரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமஸ்வாமி கோவில். இங்கு, சர்ப்ப யாகம் செய்யப்பட்டதன் நினைவாக, ஜனமேஜயனால் எழுப்பப்பட்ட ஒரு கல்தூண் உள்ளது. இந்தத் தூணை,  நாக பஞ்சமி அன்று தரிசனம் செய்ய நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.}

பிரம்மதேவரை இதன் காரணமாகச் சரணடைந்த நாகங்களை அவர், 'யாயவர் வம்சத்தில் தோன்றும் ஜரத்காரு மஹரிஷிக்கு உங்கள் சகோதரியைத் திருமணம் செய்து கொடுத்தால், அவர்களுக்குப் பிறக்கும் புதல்வன் உங்களைக்  காப்பான்' என்று வரமளித்தார். {நாகங்களின் தாகத்தைத் தணிப்பதற்காகவே புற்றுக்குப் பாலூற்றி வழிபடும் முறை ஏற்பட்டது. நாக பஞ்சமி தினத்தன்று, நாகதேவதைகளான, அனந்தன், வாசுகி, குக்ஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க் கோடன், குளிஜன், பத்மன் ஆகியோரின்  திருப்பெயர்களைச்  உச்சரித்துக் கொண்டே  பாம்புப் புற்றிற்கு பால்   ஊற்றி வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தனையும்,புத்திரி பாக்கியம் கிடைக்க, வாசுகியையும், பலம் பெற தக்ஷகனையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்க்கோடகனையும், நற்குணங்களைப் பெற, பத்மனையும், நோயிலிருந்து நிவாரணம் பெற, கங்கு பாலனையும் சீதளத்தினால் ஏற்படும் பாதிப்பு விலக குளிஜனையும் பூஜிக்க வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன.}

பிறகு,கருட பகவான், தன் தாயின் அடிமைத் தளை நீக்குவதற்காக, தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு, அமுதக்கலசத்தைக் கொண்டு வந்து தன் தாயை மீட்டார். 

ஆகவே, இவ்விரதம் அன்னையர், தங்கள் குழந்தைகள் நலன் வேண்டிச் செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த விரதமாயிற்று.

இது தொடர்பான, விரிவான புராணக் கதைகள் மற்றும் தெளிவான பூஜை முறைகளுக்கு, சகோதரர் ஸ்ரீகணேஷின் வலைப்பூவிற்குச் செல்ல கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கவும். சகோதரர் பூஜை முறைகளை அருமையாக, மிகத் தெளிவாகத் தந்திருக்கிறார். இவை மூன்று பகுதிகளாக வெளியாகியுள்ளன.


சகோதரர்கள் நலன் காக்க வேண்டியே பெரும்பாலும் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக்கதை.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள். அவர்கள் அனைவரும் விறகு வெட்டும் வேலையைச் செய்து வந்தார்கள். ஒரு நாள் அவர்கள் அனைவருக்கும் அந்தப் பெண், கஞ்சி எடுத்துப் போகும் போது, வானில், ஒரு கருடன் கவ்விக் கொண்டு சென்ற நாகத்தின் வாயிலிருந்து வெளிப்பட்ட விஷம், கஞ்சியில் விழுந்து விட்டது. அதைப் பருகிய காரணத்தால், அந்தப் பெண்ணின் சகோதரர்கள் மரணமடைந்தனர்.

தன் சகோதரர்களின் நிலையைக் கண்டு அழுது புலம்பி, அவள் இறைவனிடம் மன்றாட, உடனே, சிவனாரும் பார்வதியும் தோற்றமாகி, அன்று கருட பஞ்சமி தினமாதலால், கருடபகவானுக்குப் பூஜை செய்ய மறந்ததால் ஏற்பட்ட நிலை இது என்பதை விளக்கினர்.

அவர்கள் சொல்படி, அங்கேயே பூஜை செய்த அந்தப் பெண், நோன்புக் கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, புற்று மண், அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் அண்ணன்மார்களின் முதுகில் குத்த அவர்கள் உயிர் பிழைத்து எழுந்தனர்.

ஆகவே, இவ்விரதம் சகோதரர் நலன் வேண்டி சகோதரிகள் செய்யும் விரதமாயிற்று. இதற்காக, சகோதரர்கள், சகோதரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.

புத்திர பாக்கியம் பெறுவதற்கு மிக உகந்ததாகச் சிறப்பித்துக் கூறப்படும் விரதம் இது. இந்தப் பஞ்சமி தினப் பூஜையை, நாக பஞ்சமியன்று துவங்கி, தொடர்ந்து 12 மாதங்கள், சதுர்த்தியன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு, பின் பஞ்சமியன்று உபவாசமிருந்து நாக தேவதையைப் பூஜிக்க வேண்டும். ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் பிராமண போஜனமும், அன்ன தானமும் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்த பிறகு, விரதம் முடிக்கும் தினத்தன்று, தங்க, அல்லது வெள்ளி நாகர்களைத் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்ரு கடன்கள் நிவர்த்தியாகின்றன.

விரத தினங்களை நியமத்துடன் பூர்த்தி செய்து, நாகபஞ்சமி விரதக் கதையைக் கேட்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சர்ப்ப தோஷங்கள் நீங்கி குலம் விருத்தி அடையும்.

நன்மைகள் கோடி பெற, நாகராஜரையும் கருடபகவானையும் தொழுதேத்தி,  நிறைந்த  வளங்களும் நிலையான‌ புகழும் பெற்று,

வெற்றி பெறுவோம்!!!!