நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 25 ஜூன், 2014

SRI PARAINAACHIYAAR AMMAN THIRUKKOIL, PA.KARUNGULAM..ஸ்ரீ பறைநாச்சியார் அம்மன் திருக்கோவில், ப. கருங்குளம்:

அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!

'மின் தமிழ்' குழுமத்தில், 'கிராம தேவதைகள்' இழையில், ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன்(பரநாச்சியம்மன்) குறித்து நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

கோயில் அமைந்திருக்கும் இடம்:
இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.

கோயிலின் முக்கிய அம்சங்கள்:

1. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.
2. மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.

3. ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலில் நுழைந்து வழிபட இயலும்.  அதுவும் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மேல்சட்டை அணியாது தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.
4. அன்னை, எட்டுத் திருக்கரங்கள் கொண்ட திருவுருவினள். ஏழு திருக்கரங்களில் சூலம் முதலான வெவ்வேறு விதமான ஆயுதங்கள், கீழ் இடது திருக்கரத்தில் அன்னக் கிண்ணம் தாங்கி அருளுகின்றாள்.
5. அன்னைக்கு நித்தியப்படி பூஜைகள் கிடையாது. வேண்டுதல்களின் படி பூஜை, அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது. இது 'சிறப்புக் கொடுப்பது' என்று அழைக்கப்படுகின்றது.
6.  கோயிலுக்கு வெளியே. வெளியே திறந்த வெளியில், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, நொண்டி, சப்பாணி என்ற பெயர்களில் காவல் பூதங்களும், பண்டாரம், சந்நியாசி பாம்பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் என்று பரிவார மூர்த்திகளும் இருக்கின்றனர்.
7. இவர்களின் பிம்பங்களும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.
8. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்திலேயே பிம்பங்கள் புதுப்பித்தலும் நடை பெறுகிறது.

கோயில் குறித்த கர்ண பரம்பரைக் கதை:

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், திண்டுக்கல் அருகில் கரந்தைமலை என்னும் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் இந்த அம்பிகை. அவருக்கு அந்தண அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒரு நாள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த அவர் மனைவி, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு திரும்பி விட்டாள். குழந்தை துறுதுறுப்பானவள். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அவளை கண்காணிக்க, அர்ச்சகரால் இயலவில்லை. வேலைப் பளு வேறு சேர்ந்து கொண்டது. குழந்தை அங்கிருப்பதை மறந்தே போனார் அவர்.

உச்சிக் கால பூஜை முடிந்தது. கோயிலைப் பூட்டி விட்டுத் திரும்பினார். மனைவி கேட்ட முதல் கேள்வி, 'குழந்தை எங்கே?'.

பொதுவாக, நடை சார்த்தி விட்டால், பின்னர் குறிப்பிட்ட காலத்தில் திறக்கும் வரை நடுவில் திறக்கக் கூடாதென்பது விதி. ஆகவே, கோயிலைத் திறவாமல், சாவித் துவாரம் வழியே, மகளின் பெயர் கூறி வருமாறு அழைத்தார். ஆனால் ஒலித்து ஓர் அசரீரி. 'உன் மகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாலையில் அழைத்துச் செல்'.

அர்ச்சகர் மகிழ்வுடன் வீடு திரும்பினார். ஆனால் 'பெற்ற மனம் பித்து' இல்லையா.. அம்பிகை தன் குழந்தையோடு விளையாடுகிறாள் என்பதை நம்ப மறுத்தது தாயுள்ளம். மனைவி கோபம் மிகக் கொண்டாள். அர்ச்சகரின் கூற்றை நம்பவில்லை. அவர் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டு வந்து, பொய் கூறுவதாகச் சந்தேகித்தாள். உடனே தன் குழந்தை வர வேண்டும் என்றாள். இல்லாவிட்டால், தான் இறக்கப் போவதாகக் கூறி பயமுறுத்தினாள்.

வேறு வழியில்லாமல், அர்ச்சகர் கோயிலுக்குச் சென்றார். தேவியிடம் மன்னிப்புக் கோரி, பூட்டைத் திறந்தார். ஆனால் அந்தோ.. கோயில் சருவறையில், குழந்தை இறந்து கிடந்தது.

'நான் கொடுத்த குழந்தை. இதோடு விளையாடுகிறேன் என்று கூறியும், நம்பாமல் கூட்டிப் போக வந்தாய். இது உனக்குக் கிடைக்காது' என்ற அசரீரி ஒலித்தது.

கோபம் கொண்டார் அர்ச்சகர். வேதனையுடன் சாபமிட்டார். 'நான் உனக்கு ஆத்மார்த்தமாகப் பூஜைகள் செய்தது நிஜமெனில், கற்கோயில் உனக்கில்லாமல் போகட்டும்.  (அக்காலத்திய) உயர்குலத்தோர் யாரும் உனக்குப் பூஜை செய்ய மாட்டார்கள்'.

அன்னையின் கற்கோயில் அழிந்தது. மூல விக்ரகம், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஊராரால் உப்பாற்றில் விடப்பட்டது.

இது மிதலைக் கண்மாயில் ஒதுங்கியதாகக் கூறப்படுகின்றது. இதை எடுக்க பலரும் முயன்ற போது, சேரியில் இருப்பவர்களின் கைகளில் மட்டுமே சிக்கியது இந்தப் பெட்டி.

பெட்டி திறக்கப்பட்டு, தேவியின் திருவுருவம் வெளியே எடுக்கபட்டது. ஊர் பெரிய மனிதரான அம்பலக்காரருக்கு ஒரு மனக்காட்சி தென்பட்டது. தனக்கு இந்த ஊரில் இடம் கொடுத்தால், இந்த ஊரை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும், தனக்கு கற்கோயில் அல்லாமல், விளாறிமார் கொண்டு கோயில் கட்ட வேண்டும் எனவும், ஒரு குழந்தையின் மறைவுக்குத் தான் காரணமாக இருந்ததால், தனக்கும் நிரந்தர உருவம் வேண்டுவதில்லை, சிதைந்து மாறும் மண் பொம்மையாகவே வழிபாடு செய்தால் போதும் என்றும், சேரியில் இருப்போரே தன்னை பூஜிக்க வேண்டும் என்றும் அன்னை கூறினாள். மேலும், ஒரு பெண்ணின் கோபத்தாலும் சந்தேகத்தாலுமே தனக்கு இந்த நிலை வந்ததால், தன்னை பெண்கள் தரிசிக்கக் கூடாது என்றும் கூறினாள்.

 அன்னையின் கட்டளைகளை ஊரார் ஏற்றுக் கொண்டனர். விளாறிமாரால் கோயில் கட்டப்பட்டு,   பிம்பம் கோயிலினுள் வைக்கப்பட்டது. அன்னைக்கு 'பறைநாச்சியார்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அம்பலக்காரர் அன்னையுடன் ஐக்கியமானார். அவரது திருவுருவும், சப்த கன்னியர் எழுவரின் திருவுருவங்களும் அன்னையின் அருகில் கோயிலில் இருக்கிறது.

புரவி எடுப்புத் திருவிழா:

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுகிறது. தை  மாதம், கோயில் பூசாரி, 'பிடி மண்' எடுத்து குயவர்களிடம் தருவார். குயவர்கள், பரம்பரையாக இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள். அவர்கள், மண்ணைப் பெற்றுக் கொண்டு, அதைச் சேர்த்து, அன்னைக்குப் புதிய  திருவுருவம்  செய்வர். பங்குனி மாதத்திற்குள்,  தேவிக்கும், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவருக்கும்  திருவுருவங்கள் செய்து விடுவார்கள்.

பங்குனி மாதம், ஊரே விழாக் கோலம் பூணும். பங்குனி கடைசி செவ்வாய் திருவிழா. அதற்கு சுமார் பத்து நாட்கள் முன்பே, ஊர்க்கட்டுப்பாடுகள் செயலுக்கு வரும். கர்ப்பிணிகள், வீட்டு விலக்கானோர், புதிதாகக் குழந்தை பிறந்தோர், ஊருக்கு வெளியே தங்க வைக்கப்படுவார்கள்.

கடைசி செவ்வாய்க்கு முந்தைய வெள்ளியன்று, கோயில் அமைக்கத் தேவையான விளாறிமார் சேகரிப்புத் துவங்கும்.

இதற்காக, நாச்சியார்புரம் என்னும் ஊருக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.

போகும் வழியெல்லாம், இவர்களுக்கு  உணவு, நீர் மோர் முதலியவை வழங்க மக்கள் கூட்டம் காத்திருக்கும்.

நாச்சியார்புரத்தில் இருக்கும் விளாறிமார் தழைகளை சேகரித்துக் கொண்டு, அன்று இரவு கம்பனனூர் ஊருணிக் கரையில் தங்குவார்கள்.  சனிக்கிழமை அதிகாலை மீண்டும் துவங்கும் யாத்திரை, கோயில் வந்து நிறைவுறும்.

சனிக்கிழமை, பழைய கோயில் அமைப்பு களையப்படும்.

ஞாயிறு அதிகாலை, கோயிலில் உரிமையுள்ளோர் புதுக் கோயிலை நிர்மாணிக்கத் துவங்குவார்கள். மாலைக்குள் விளாறிமார் கொண்டு, கோயில் அமைக்கப்படும்.

செவ்வாய் காலையில், கோயில் உரிமை பற்றி, பூசாரிகளுக்கு அம்பலக்காரர் எழுதிக் கொடுத்த பெரிய அரிவாள், ஊர்வலமாக ஊருக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அது திரும்ப கோயிலுக்கு வந்ததும், அனைவரும் அன்னையை அழைத்து வரப் புறப்படுவார்கள்.

ஊர் சதுக்கத்தில்,(இதை சவுக்கை என்றழைக்கிறார்கள்)  தைலாபிஷேகம் முதலியன செய்து அன்னையின் புது  திருவுருவம்  தயாராக இருக்கும்.  அன்னையின் புதிய திருவுருவம், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவ ரையும், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். இது 'புரவி எடுப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

அந்த சமயத்தில், ஊரில் மின் விளக்குகள் அனைத்தும், தெருவிளக்கு உள்பட அணைக்கப்படும்.  எண்ணை தீபங்கள் மட்டுமே எரியும். இந்த ஊர்வலம், கோயிலுக்கு வந்து நிறைவுறும். செவ்வாய் அன்று இரவு முழுவதும் வெளியே தரிசனத்துக்காக அன்னை கொலுவிருப்பாள். அன்று மட்டுமே பெண்கள் தரிசிப்பார்கள். புதன் விடியலில், கோயிலுக்குள் அன்னையின் திருவுரு வைக்கப்படும். பழைய திருவுரு, கோயிலுக்கு வெளியே சார்த்தி வைக்கப்படும்.

புதனன்று, வேண்டுதல்கள், பூசைகள் என்று மிகப் பெரிய விழாவாக நடைபெறும். 

பொதுவாக, அன்னைக்கு சுத்த பூசை என்னும் சாத்வீக பூஜையே நடைபெறுகிறது.  பலிகள் கொடுப்பதானால், பரிவார மூர்த்திகளுக்குக் கொடுப்பது வழக்கம்.

நிவேதனத்துக்கு கைக்குத்தல் அரிசி தான் பயன்படுத்துகிறார்கள். பத்து நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள். பால் பொங்கல் பிரதான நிவேதனம். கோயில் நிவேதனங்கள் வெளியில் இருந்து ஏற்கப்படுவதில்லை. கோயிலில் உள்ளோரே தயார் செய்கிறார்கள்.

அன்னை பறைநாச்சியார், மிகுந்த சக்தியுள்ள கண்கண்ட தெய்வமாக, ஆத்மார்த்தமாக வழிபடப்படுகின்றாள். அருள் தந்து காக்கின்றாள்.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்(படம் எடுக்க அனுமதி இல்லாததால், கூகுளாண்டவர் அளித்த படம் போட்டிருக்கிறேன்!!!)

5 கருத்துகள்:

  1. இதுவரை அறியாத கோயிலின் தகவல்கள்... சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான ஆலயம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. அறியாத கோயிலை பற்றி
    அறிய தந்த தகவலுக்கு நன்றி

    வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டு சென்று
    வர திட்டமிடலாம்...

    சுற்றுலா பயணம் ஒன்றிக்கு ஏற்பாடு செய்யுங்கள் உங்களை
    சுற்றி வரும் நாங்களும் பயன் பெறுவோமே

    பதிலளிநீக்கு
  4. பலே.. நன்றாக உள்ளது. வாழ்க,
    யோகியார்

    பதிலளிநீக்கு
  5. எனக்கு என் தனி மடலில் இக்கட்டுரை படத்துடன் தருக. எம் ஷண்முகக் கவசம் ஏட்டுக்கு. உடன் மடல் இடல் கடன். யோகியார்

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..