நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME... PART 50...கண்ணனை நினை மனமே!...பகுதி 50.பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).


தூணிலிருந்து வெளிப்பட்ட, பகவானின் நரசிம்ம ஸ்வரூபத்தைக் கண்டதும், ஹிரண்யன், ' இது நிச்சயமாக விஷ்ணுதான்' என்று உறுதி கொண்டு, தன் கதையை எடுத்துக் கொண்டு, தாக்குவதற்கு ஓடினான். பகவான், அவனைத் தம் கரங்களால் பிடித்தார். ஆயினும் அவன் நழுவி விட்டான்!.. அதன் பின்னரும், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் தன்னுடைய விசித்திரமான திறமைகளைக் காட்டியவாறு, மீண்டும் தாக்குவதற்கு ஓடி வந்தான்.

பகவான், ஹிரண்யனைத் தம் கரங்களால் மீண்டும் பிடித்தார்.அவனைத் தூக்கிச் சென்று வாயிற்படியில் அமர்ந்து கொண்டு, தம் தொடைகள் மீது படுக்க வைத்தார். அவனது மார்பினைத் தம் நகங்களால் கீறி, உதிரப் பெருக்கெடுக்க வைத்து, ஹிரண்யனை முடித்தார். பின் உலகே நடுங்கும் வகையில் கர்ஜனை செய்தார்.

( கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,
வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே (நம்மாழ்வார்) ).

ஹிரண்யனை முடித்த பின்னர், மற்ற அசுரர் கூட்டங்களை அழிக்கத் துவங்கினார். பகவானின் சினத்தைத் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர். மலைகளும் ஆடின. சமுத்திரங்கள் கலங்கின. நட்சத்திரங்கள் கீழே விழுந்தன. தேவர்கள் உட்பட, யாருக்கும் பகவானின் அருகில் வரத் துணிவு இல்லை... அவரது கர்ஜனையையும் கோபத்தையும் கண்டு பயந்தவர்களாக, தள்ளி நின்று கொண்டு அவரைத் துதித்தார்கள்.

பிரஹலாதன், பிரம்ம தேவரின் கட்டளைப்படி, சற்றும் பயமில்லாமல், பகவானின் அருகில் சென்றான். அவரை நமஸ்கரித்தான். பகவான், பிரஹலாதனைக் கண்டதும், சாந்த ஸ்வரூபியானார். அவன் தலை மேல் தம் திருக்கரத்தை வைத்து ஆசி கூறினார். பிரஹலாதன், பக்தியைத் தவிர, வேறெதையும் விரும்பாத நிலையில், அவனுக்கு பக்தியோடு கூட, உலகையும் அளித்து, (அவனை அரசனாக்கி) அனுக்கிரகம் செய்தார்.

( பூயோ(அ)ப்யக்ஷதரோஷதாம்னி வதி ப்ரஹ்மாஜ்ஞயா பா³லகே
ப்ரஹ்லாதே³ பத³யோர்னமத்யபபயே காருண்யபாராகுல​: | 
ஸா²ந்தஸ்த்வம்ʼ கரமஸ்ய மூர்த்னி ஸமதா​: ஸ்தோத்ரைரதோ²த்காயத
ஸ்தஸ்யாகாமதியோ(அ)பி தேனித² வரம்ʼ லோகாய சானுக்ரஹம் |( ஸ்ரீமந் நாராயணீயம்) ).

( தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே. (நம்மாழ்வார்)).

ஸ்ரீ நரசிம்மரின் பெருமைகளை, ந்ருசிம்மதாபினீ உபநிஷதம், அற்புதமாகப் போற்றித் துதிக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த, பிரஹலாதப் ப்ரியனான எம்பெருமான், தம் நோய்களை நீக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறார் பட்டத்திரி.

(தொடர்ந்து தியானிக்கலாம்!..).


அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!. இந்த ஆண்டு, எல்லாவகையிலும் அனைவருக்கும் நல்லனவற்றை அள்ளி வழங்கப் பிரார்த்திக்கிறேன்..

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..