நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015

KANNANAI NINAI MANAME.. PART 45...கண்ணனை நினை மனமே!...பகுதி 45..அஜாமிளன் சரிதம்...

இறை நாமங்களின் பெருமையை, எத்தனை எத்தனையோ விதங்களில் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நாமம், நாமிக்கு நிகர். இறைவனின் திருநாமமும் இறைவனும் வெவ்வேறல்ல.. கடக்க முடியாத துன்பங்களைக் கடக்க வைக்கும் உத்தம சாதனம் இறைவனின் திருநாமமன்றி வேறில்லை... பகவானின் திருநாமங்களை சதா சர்வ காலமும் சிந்திப்பவர்களுக்கு, இயலாத காரியமென்று ஒன்றில்லை..
அஜாமிளன் சரிதம், இறைவனின் திருநாமங்களின் பெருமையை விவரிக்கும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றாகும்.. ஒருவன், தன் வாழ்நாளெல்லாம் இறை நாமத்தைச் சொல்லாவிட்டாலும், அந்திம சமயத்தில் சொன்னாலும் போதும், இறைவனின் கருணை, தாயாக அவனை வாரி எடுத்துக் கொள்கிறது!!!!...

அஜாமிளன், தன் தந்தையையே குருவாகக் கொண்டு, சகல சாஸ்திரங்களும் கற்றுத் தேர்ந்தவன். மணமானவன். தர்ம மார்க்கத்தை விடாது அனுசரிப்பவன். ஆனாலும், விதியின் விளையாட்டு அவன் வாழ்வில் துவங்கியது.. அவன் காட்டிற்குச் சென்று, சமித்து முதலானவைகளைச் சேகரித்துத் திரும்பும் போது, நெறிகெட்ட வாழ்வு நடத்தி வரும் பெண்ணொருத்தியைக் கண்டு, காதல் கொண்டான்.

தன் இல்லத்தையும் இல்லாளையும் மறந்து, அவளோடு வாழத் துவங்கி, குழந்தைகளைப் பெற்றான். அவனது கடைசி புதல்வனின் பெயர், 'நாராயணன்' என்பதாகும். அவனிடம், அஜாமிளன் மிகுந்த பிரியம் கொண்டிருந்தான். அஜாமிளனின் இறுதிக் காலம் வந்தது... தன் முன் தோன்றிய யம தூதர்களின் பயங்கர ரூபத்தைக் கண்டு, பயத்தால், தன் கடைசி புதல்வனின் பெயர் சொல்லி அழைக்கலானான்.

உடனே, வைகுண்டத்திலிருந்து, பகவானின் சேவகர்கள் வந்து சேர்ந்தனர். அஜாமிளனை அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினர். அஜாமிளன் செய்த பாவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறிய யம தூதர்களிடம், பகவானின் சேவகர்கள், எவ்விதம் இறைவனின் திருநாமமானது, ஒருவன் செய்த பாவங்களையும், பாவங்கள் செய்வதற்குக் காரணமான முன் வினைத் தொடர்பையும் நீக்கி விடுகிறது என்பதைக் கூறினார்கள்.

அஜாமிளன், பயத்தால் புதல்வனை அழைத்தான் எனினும், அழைத்தது இறைவனின் திருநாமம் ஆகையால், அவனது பாவங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நெருப்பு, விறகுகளை எரிப்பது போலவும், மருந்து, நோய் தீர்ப்பது போலவும், பகவானின் நாமம், மனிதர்களின் பாவக் குவியல்களை எரித்து விடும் என்று எடுத்துரைத்தார்கள் பகவானின் சேவகர்கள்.

 ( ந்ருʼணாமபு³த்³த்⁴யாபி முகுந்த³கீர்த்தனம்ʼ
த³ஹத்யகௌ⁴கா⁴ன்மஹிமாஸ்ய தாத்³ருʼஸ²​: | 
யதா²க்³னிரேதா⁴ம்ʼஸி யதௌ²ஷத⁴ம்ʼ க³தா³நு
இதி ப்ரபோ⁴ த்வத்புருஷா ப³பா⁴ஷிரே || (ஸ்ரீமந் நாராயணீயம்)).

யம தூதர்கள் இதைக் கேட்டு விலகிப் போக, அஜாமிளன் நல்ல கதியடைந்தான். இந்த நிகழ்வை, தன் பணியாட்கள் மூலம் அறிந்த யம தர்மராஜன், பகவானின் திருவடிகளில் திடமாகப் பக்தி செய்பவர்களை அணுகலாகாதென்று தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.

( நம்பி பிம்பியென்று நாட்டு மானிடப் பேரிட்டால்
நம்பும் பிம்புமெல் லாம்நாலு நாளில் அழுங்கிப்போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட் டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன் னைநர கம்புகாள். (பெரியாழ்வார்)) .

இறைவனின் திருநாமங்கள் அனைத்தும் அளவற்ற மகிமை பொருந்தியவையே.. அதிலும் 'நாராயணா' என்ற திருநாமத்தின் ஒவ்வொரு அக்ஷரத்தின் மகிமையையும் பெரியோர்கள் அழகாக அருளியிருக்கிறார்கள்.. 'நா' என்ற அக்ஷரம், ஸ்வர்க்க லோக சுகத்தையும், 'ரா', ஸ்ரீ ராமரது கீர்த்தியையும், 'ய', யக்ஷ ராஜனாகிய குபேரனது சம்பத்தையும், 'ணா' என்ற அக்ஷரம், பிறவியின் நோக்கமாகிய மோக்ஷ ப்ராப்தியையும் சம்பாதித்துத் தரும்.. நாரத மஹரிஷி போன்ற உத்தமர்களது திருவாக்கில் நித்ய வாசம் செய்யும் திருநாமம் இது..

( கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம். ( திருமங்கையாழ்வார்))..

இந்த சரிதத்தைக் கேட்கும் போது, மற்றொன்றும் தோன்றலாம். பாவங்கள் எத்தனை வேண்டுமானாலும் செய்து விட்டு, அந்திம காலத்தில் இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் போதுமே என்று தோன்றுவது இயல்பு.. ஆனால், ஒருவரது வாக்கில், இறைவனின் திருநாமம் வருவது எளிதே அல்ல.. 'அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்' என்பது போல், அனுதினமும் ஜபித்துப் பழகியோருக்கே, அந்திம நேரத்தில் நாமம் கைவசப்படுவது கடினம்.. அஜாமிளனின் வாழ்வில், முன் செய்த புண்ணிய பலன் வலிமையாக இருந்ததாலேயே, அவன் தன் புதல்வனுக்கு பகவானின் நாமத்தைச் சூட்டி ,  அதன் பயனாக‌ நல்ல கதியடைந்தான்..

அடுத்த தசகத்தில் சித்ரகேது உபாக்கியானம்...

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து:

  1. ’அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்’ விளக்கம் வியப்பளிக்கும் விதமாக உள்ளது. அருமை. திடீரென்று கடைசிகாலத்தில் எப்படி பகவன்நாமா சொல்லவரும்? நியாயம்தான். இப்போதே அனுதினமும் சொல்லிப்பழக வேண்டும். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..