நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

KANNANAI NINAI MANAME....PART 39....கண்ணனை நினை மனமே.. பகுதி 39. த‌க்ஷன் புனர்ஜென்மம் (தொடர்ச்சி....).

உத்தம பக்தர்களான பிரசேதஸர்கள், தங்கள் முன் தோன்றியருளிய பகவானிடம் எந்த வரமும் யாசிக்கவில்லை.. பிறவியின் நோக்கம் கண் முன்னே பிரகாசிக்கும் போது வேறென்ன வேண்டும்!!!...
(( சொல்லினும்தொ ழிற்கணும்தொ டக்கறாத வன்பினும்
அல்லுநன்ப கலினோடு மானமாலை காலையும்
அல்லிநாண்ம லர்க்கிழத்தி நாத பாத போதினை
புல்லியுள்ளம் விள்விலாது பூண்டுமீண்ட தில்லையே. (திருமழிசை ஆழ்வார்))

 பிரசேதஸர்கள் யாசிக்காவிட்டாலும்,  கருணைக் கடலான எம்பெருமான், வரங்களைத் தந்தருளினார். 
'வன தேவதைகளான மரங்களின் மகளை (வர்க்ஷீ என்பது அவள் பெயர்) மனைவியாக அடைந்து, அவளோடு பத்து லட்சம் வருடம் மகிழ்வோடு வாழ்வீர்கள்.. தக்ஷன் உங்களுக்கு புத்திரனாகப் பிறப்பான். அந்த சமயம், நீங்கள் என்னை வந்து அடைவீர்கள்!' என்று பிரசேதஸர்களை ஆசீர்வதித்தார் பகவான்!.. பின் மறைந்தருளினார்.

பிரசேதஸர்கள், பகவானைத் தரிசிப்பதற்காக அருளப்பட்ட ஸ்தோத்திரமான‌ ருத்ரகீதை, வேண்டுவோர் வேண்டுவதைக் கொடுப்பதாக விளங்குகிறது என்கிறார் பட்டத்திரி!..

தவம் நிறைவடைந்ததால், குளத்தை விட்டு வெளியே வந்த பிரசேதஸார்கள், நடக்கக் கூட இடமின்றி, பூமண்டலம் முழுவதும் மரங்களால் மறைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு, தீயால் மரங்களை அழிக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்ட பிரம்ம தேவர், அவர்களைத் தடுத்தார். மரங்கள் இதனைக் கண்டு மகிழ்ந்து, தங்கள் மகளை பிரசேதஸர்களுக்கு மணம் செய்து கொடுத்தன. பகவான் குறிப்பிட்டிருந்த வருடங்கள் வரை, அவர்கள் சுகமாக வாழ்ந்தனர்.

பகவான் அளித்த வரத்தின்படி, தக்ஷனைத் தங்கள் மகனாகப் பெற்றனர் பிரசேதஸார்கள். பல யாகங்களைச் செய்த பின்னர், நாரத முனிவர் மூலமாகப் பெற்ற ஞானத்தின் காரணமாக, பிரம்மானந்தப் பதவியை அடைந்தனர். அத்தகைய மகிமையுடைய ஸ்ரீ குருவாயூரப்பன், நம்மை எல்லாம் காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து, தசகத்தை நிறைவு செய்கிறார் பட்டத்திரி!.

(அவாப்ய த³க்ஷம்ʼ ச ஸுதம்ʼ க்ருʼதாத்⁴வரா​: 
ப்ரசேதஸோ நாரத³லப்³த⁴யாதி⁴யா | 
அவாபரானந்த³பத³ம்ʼ ததா²வித⁴ஸ்த்வமீஸ² 
வாதாலய நாத² பாஹி மாம் || (ஸ்ரீமந் நாராயணீயம்)).

பிரசேதஸர்கள் செய்த சத்ரயாகத்திலேயே, நாரதர், முதன்முதலில் துருவ சரித்திரத்தை உபன்யாசம் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

(அடுத்த பகுதியில் ரிஷப தேவர் சரித்திரம்).

தொடர்ந்து தியானிக்கலாம்.....

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..