நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

PITHRU VAZHIPAADU( MAHALAYA PAKSHA (20/9/2013 TO 4/10/2013) SPECIAL POST)... பித்ரு வழிபாடு (மஹாளய பக்ஷம்..(20/9/2013 TO 4/10/2013).


அன்பர்களுக்கு வணக்கம்...

ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மாதம், பௌர்ணமியை அடுத்து வரும் பதினைந்து தினங்களும் மஹாளய பக்ஷம் என்று வழங்கப்படுகிறது. பித்ரு வழிபாடு எனப்படும் மூதாதையர், நீத்தார் வழிபாடு செய்ய உகந்த தினங்களாகப் போற்றப்படும் இந்த தினங்களின் சிறப்பைப் பற்றியும், சுவதா தேவியைப் பற்றியும், மிக விரிவாகவே சென்ற வருடப் பதிவொன்றில் சொல்லியிருக்கிறேன். சுட்டிக்கு கீழே சொடுக்கவும்.

1. மஹாளய பக்ஷம்.

'மறந்ததை மஹாளயத்தில் விடு' என்னும் சொல்லுக்கேற்ப, பித்ருக்களுக்கு உரிய திதியில் நீத்தார் கடன் நிறைவேற்ற மறந்தோர் மஹாளய பட்சத்தில் செய்யலாம். மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களும் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போதைய சூழலில், ஏதாவது ஒரு திதியில், அநேகமாக தந்தையார் மறைந்த திதியில் மட்டும் செய்கின்றனர்.

இவ்வாறு ஒரே ஒரு திதியில் செய்யப்படும் சிரார்த்தம் 'சக்ருன் மஹாளயம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்தப் பதிவில், மஹாளய பக்ஷத்தின் முக்கிய தினங்களாகக் கருதப்படும் மத்யாஷ்டமி, அவிதவா நவமி மஹாபரணி, வியதீபாதம், கஜச்சாயா யோகம் மாக ஸ்ரார்த்தம் ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

மத்யாஷ்டமி. 
மஹாளய பக்ஷத்தின் பதினைந்து தினங்களில் மத்தியில் அதாவது முன் ஏழு, பின் ஏழு தினங்களுக்கு நடுவில் வரும் அஷ்டமி திதியே மத்யாஷ்டமி.  மஹாளய பக்ஷத்தில், வேறு திதிகளில் செய்ய சௌகரியப்படாதோர் மத்யாஷ்டமியில் செய்யலாம். இந்தத் திதியின் சிறப்பு, திதி, வார, நக்ஷத்திர தோஷங்கள் எதுவும் இதற்கு இல்லை என்பதே.

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதியில் மறைந்தவர்களுக்கும், பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கும், மத்யாஷ்டமியில் சிரார்த்தம் செய்யலாம். பௌர்ணமி திதியில் மறைந்தவர்களுக்கு, மஹாளய அமாவாசையும் சிரார்த்தம் செய்ய உகந்ததே.

மத்யாஷ்டமியில் திருவாதிரை நக்ஷத்திரம் சேர்ந்து வருமாயின் அது ஆருத்ராஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய தினத்தில், பித்ரு காரியங்கள் மட்டுமின்றி, சிவபூஜை செய்வது மிகச் சிறப்பான பலனைத் தருகின்றது.

பொதுவாக, சிரார்த்தம் செய்ய ஏற்ற தலங்கள் என்று பலவற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால் அஷ்டமி சிரார்த்தத்துக்கு ஏற்ற இடம் எது தெரியுமா?. மதுரை அருகில் இருக்கும் அழகர் கோவில் திருத்தலத்தின் மலை மேலிருக்கும்(பழமுதிர் சோலை) நூபுர கங்கைத் தீர்த்தக் கரையே அந்த இடம்.

மத்யாஷ்டமி திதிக்கு அடுத்து வரும் நவமி திதி, அவிதவா நவமி என்று சிறப்பிக்கப்படுகின்றது. சுமங்கலியாக இறைவனடி சேர்ந்த பெண்களுக்கு அன்றைய தினம் சிரார்த்தம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் செயலாகக் கருதப்படுகின்றது. அவர்கள் புண்ணிய லோகம் அடைந்து அம்பிகையின் ஸ்வரூபத்தைப் பெறுவதால், அவர்களை அம்பிகைக்கு சமமாகவே மதிக்கின்றது நம் சம்பிரதாயம். சிரார்த்தம் செய்வதோடு, அன்றைய தினம் அன்னதானம் செய்வதும், சுமங்கலிகளுக்கு உணவளித்து, மங்கலப் பொருட்கள் தாம்பூலமாகத் தருவதும் மிக விசேஷமானதாகும்.

மஹாபரணி:

 மஹாளய பக்ஷத்தில், பரணி நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் வரும் போது செய்யப்படுவது பரணி சிரார்த்தம் .

முதலில் அபரான்ன‌ காலம் என்றால் என்னவென்று பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் பித்ரு காரியத்திற்கென நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது (ராகு காலம், நல்ல நேரம் போல்). அதன்படி ஒதுக்கப்பட்ட நேரமே அபரான்ன‌  காலம். சுமார் இரண்டு மணி நேரம் வரும் இது, ஒவ்வொரு நாளும் மதியம் ஒன்றரை மணியிலிருந்து மூன்றரை மணி வரை நீடிக்கும்.

இந்த அபரான்ன‌ காலத்தில் பரணி நக்ஷத்திரம் வந்தால் அதுவே 'மஹாபரணி' தினம். இது பொதுவாக, மஹாளய பக்ஷத்தில் சதுர்த்தி திதி அல்லது பஞ்சமி திதியில் வரும். சில சமயம் திருதியை திதியிலும் வருவதுண்டு. ஆகவே, மஹாபரணி சிரார்த்தம் செய்ய எண்ணுவோர் திதி குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

பரணி நக்ஷத்திரத்திற்கு ஏன் இத்தனை சிறப்பு என்றால், இது பித்ருக்களின் அதிகாரியாகிய யமதர்மரால் ஆளப்படுவது. அதனாலேயே பித்ருபக்ஷத்தில் இது சிறப்புப் பெறுகிறது.

மஹாபரணி சிரார்த்தம், கயாசிரார்த்தத்திற்கு ஈடானது. மிகுந்த புண்ணிய பலன்களைத் தர வல்லது.

மஹாவியதீய பாதம்:

வியதீபாதம் என்பது இருபத்தேழு யோகங்களுள் ஒன்று. இந்த யோகம் மஹாளய பக்ஷத்தன்று ஏற்படும் போது அது மஹாவியதீபாதம் என்றழைக்கப்பட்டு பித்ரு காரியம் செய்வதற்கு சிறப்பான நேரமாகிறது(மார்கழி மாதத்தில் வரும் மஹாவியதீய பாதம் வேறு).

வியதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை பிறந்தது குறித்த ஒரு புராணக் கதை உள்ளது.

தேவகுருவான பிரஹஸ்பதியின் மனைவி தாரை. அவளிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டான் சந்திரன். அவனை கோபமாகப் பார்த்தார் சூரிய பகவான். பதிலுக்கு, சந்திரனும் பார்க்க, அந்த உஷ்ணப் பார்வைகளின் சங்கமத்தில் உதித்தவனே வியதீபாத புருஷன். இந்த தேவதைக்கு அதிபதி சிவபிரானாவார்.

கஜச்சாயா யோகம்:

பொதுவாக, இந்த யோகம் ஏற்படும் அமைப்பு ஒவ்வொரு வருடமும் வருவது அரிது. ஆனால் இந்த யோகம் அமையுமாயின் அது  பித்ருபக்ஷத்திலேயே அமையும். அந்த நேரத்தில் செய்யப்படும் தானங்கள், தரும காரியங்கள், பித்ரு காரியங்கள் இவற்றின் பலனை எழுத்தில் வடிக்க இயலாது. அவ்வளவு நன்மையான பலன்களைத் தர வல்லவை அவை.

சூரியன் ஹஸ்த நக்ஷத்திரத்திலும், சந்திரன் மக நக்ஷத்திரத்திலும் இருக்க, அன்று திரயோதசி திதி சேரும் போது இந்த யோகம் ஏற்படுகின்றது.

சூரியன், சந்திரன் இரண்டும் இணைந்து ஹஸ்த நக்ஷத்திரத்தில் காணப்படும் மஹாளய அமாவாசை தினமும் இந்த யோகத்தைத் தருவதாகச் சொல்லப்படுகின்றது. 

ஆயினும் இந்த யோகம் பகல் நேரத்தில் ஏற்படுமாயின் மிகுந்த வலிமையுள்ளது என்றும் இரவு நேரத்தில் ஏற்படுமாயின் வலிமையிழக்கின்றது என்றும் ஒரு கூற்று இருக்கின்றது.

மக நக்ஷத்திரத்திற்கு அதிபதி பித்ரு தேவதை. ஆகவே, மஹாளய பக்ஷத்தில் அந்த நக்ஷத்திரத்திற்கு மிகுந்த சிறப்பு உண்டு.

மாக ஸ்ரார்த்தம் என்பது, மக நக்ஷத்திரம் அபரான்ன‌ காலத்தில் இருக்கும் தினத்தில் வருவதாகும். இரண்டு தினங்களின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரம் வருமானால், எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மிக நீண்ட நேரம் மக நக்ஷத்திரம் இருக்கின்றதோ அதை மாக சிரார்த்த தினமாகக் குறிப்பது மரபு.

எந்த தினத்தின் அபரான்ன‌ காலத்தில் மக நக்ஷத்திரமும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்றதோ அந்த தினத்தை மாக திரயோதசி சிரார்த்த தினமாகக் கொள்கிறார்கள்.

பித்ரு வழிபாட்டுக்கு உரிய இந்த சிறப்பான தினங்களில் நீத்தார் கடன் செய்ய வேண்டுவோர் முறையாகச் செய்து,  அவர்களது ஆசிபெற்று,

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013

MUZHU MUTHARKADAVUL (VINAYAKA CHATHURTHI SPECIAL POSTING(9/9/2013) ...முழு முதற்கடவுள்(விநாயக சதுர்த்தி சிறப்புப் பதிவு.)



அன்பர்களுக்கு வணக்கம்.

'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், நம் பாரத நாடெங்கும் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படுகின்றது. விநாயகரைப் பற்றிய செய்திகளுடன், விநாயக சதுர்த்தி பூஜை செய்யும் முறை பற்றி என் சென்ற வருட பதிவுகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சுட்டிகளுக்கு கீழே சொடுக்கவும்.



3.விநாயக சதுர்த்தி பூஜை.  (பகுதி 3)

'முழுமுதற்கடவுள்' என்ற பதம், பொதுவாக, ஆதி அந்தமில்லா பரம்பொருள் ஒன்றையே குறிக்கும்.  அப்படிப் பார்க்கும் போது, ஷண்மதங்கள் ஒவ்வொன்றும், தத்தமது முக்கியக் கடவுளரையே 'முழுமுதற்கடவுள்' என்று போற்றுகின்றன. ஆனால் பொதுவில் 'முழுமுதற்கடவுள்' என்றதும் நினைவுக்கு வருபவர், ஞானமூர்த்தியாகிய விநாயகரே ஆவார்.

அண்டமனைத்தும் விநாயகரில் அடங்கியிருப்பதன் குறியீடே அவரது பெருத்த வயிறு. மேலும் அனைத்து தெய்வங்களாலும் உபாசிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டவர் இவரே.

உமாதேவியார், முருகன், பிரம்மா, இந்திராதி தேவர்கள், மன்மதன், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணிதேவி, ஆதிசேஷன், சந்திரன், அங்காரகன்(செவ்வாய்), அகத்தியர், காசிபர் முதலான முனிவர்கள்  என, விநாயகரைத் தொழுது அருள் பெற்றோர் பலர். இது ஒன்றே, அவரே முழு முதற்கடவுள் என்பதைத் தெளிவாக விளக்கும்.

பார்க்கவ புராணமாகிய விநாயக புராணம், இந்த விருத்தாந்தங்களை பெரும் சுவையுடன் விளக்குகிறது. அதிலிருந்து சில பகுதிகளைச் சுருங்கக் காணலாம்.

உமாதேவியார் விநாயகர் அருள் பெற்றது.

இமவானின் மகளாக, பார்வதி தேவி என்ற திருநாமத்துடன் உமாதேவி வளர்ந்து வருகையில், சிவனார் கங்கையை மணக்கும் முன் தம்மை மணந்திட வேண்டுமென்று நினைத்து, முறையாக, விநாயக சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து, தன் மனோரதம் நிறைவேறப் பெற்றார்.

முருகப் பெருமான் விநாயகர் அருள் பெற்றது:

வள்ளி திருமண சமயத்தில், முருகப்பெருமானுக்கு விநாயகர் செய்த உதவி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் விநாயக புராணம், நமக்குத் தெரியாத வேறொரு செய்தியையும் விளக்குகின்றது. சூரபன்மனை வெல்வதற்காக, கிருஷ்ணா நதி தீரத்தில், ஷண்முகர், விநாயகரைக் குறித்துத் தவம் இருந்து, அதன் பலனாக, ஸ்ரீவிநாயகரது அருளும் அவரது மயில் வாகனமும் கிடைக்கப் பெற்றார்.  அந்த இடமே, 'மோர்காம்' என்று வழங்கப்படும், ஸ்ரீமயூரேச விநாயகர் கோயில் கொண்ட திருத்தலமாகும். அதன் பின்னரே முருகப்பெருமான், திருக்கயிலை அடைந்து, சிவனார் ஆணைப்படி, தேவசேனாபதி ஆனார்.

பிரம்மா விநாயகர் அருள் பெற்றது:

முதன்முதலில் சிருஷ்டியைத் தொடங்கு முன், பிரம்மதேவர், விநாயகரை வழிபட மறந்துவிட, அதன் பலனாக, அவர் சிருஷ்டி செய்தவை யாவும் குறைபாடுள்ளவையாக அமைந்து விட்டன. அதன் பின், அவர், விநாயகரைத் தொழுது, அவர் அருளால் சிருஷ்டியை முறையாகச் செய்து வரலானார்.

இந்திராதி தேவர்கள், விநாயகரை உபாசித்தது:

விநாயக பக்தனான, பலி என்னும் அசுரன், தேவாதி தேவர்களையும் போரில் வென்றான். அதன் காரணமாக, மிகுந்த அலைப்புண்ட தேவர்கள், இறுதியில் நாரத முனிவரின் ஆலோசனைப்படி கணபதியை உபாசிக்க, பின் அவர் அருளால், இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைந்தனர்.

ஆதி சேஷன் விநாயகரை உபாசித்தது:

முன்பொரு முறை,  ஆதி சேஷன், சிவனாரின் சிரத்திலிருக்கிறோம் என்றெண்ணி கர்வமடைந்த க்ஷணத்தில், பூவுலகுக்குத் தள்ளப்பட்டார். பூவுலகுக்குத் தள்ளப்பட்ட வேகத்தில், அவரது தலை பூமியில் மோதி ஆயிரம் பிளவாக ஆகியது. அவரது மகத்துவங்கள் யாவும் மறைந்தது. அதன் பின், நாரத முனிவரின் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை உபாசித்தார். அதன் பலனாக, சிவனார் சிரத்தில் ஐந்து தலைகளோடு அமர்ந்திருக்கவும், ஆயிரம் பிளவுகளும் ஆயிரம் சிரங்களாகி, பூவுலகைத் தாங்கவும், ஒரு தலையோடு கூடிய உருவினனாக, விநாயகப் பெருமானுக்கு உதரபந்தனமாக(இடுப்பில் இருக்கும் கயிறு) விளங்கவும் அனுக்கிரகிக்கப் பெற்றார்.

ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் அருளால், தமக்கு நேர்ந்த அபவாதம் நீங்கப் பெற்றதை 'சியமந்த்கோபாக்கியானம்' விவரிக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரது தர்மபத்தினியாகிய ஸ்ரீருக்மணி தேவி, தம் புதல்வன் பிரத்யும்னன், சம்பராசுரனுடன் யுத்தம் செய்யச் சென்று வெகு காலமாகியும் திரும்ப வராததால், நாரதர் ஆலோசனைப்படி, கணேச மந்திரத்தை, விநாயக சதுர்த்தி அன்று விதியுடன் ஜபம் செய்தார். அதன் பலனாக, சதுர்த்தியிலிருந்து ஆறாவது தினத்தில், பிரத்யும்னன் வெற்றியுடன் வந்து சேர்ந்தான். 

இவ்வாறாக, மனிதர்கள் மட்டுமல்லாது தேவர்களும் விநாயகரை உபாசித்து நன்மையடைந்தனர்.

விநாயக சதுர்த்தி பூஜையில் அருகம்புல், எருக்கம் மாலை, வன்னி இலை மூன்றும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அனலாசுரன் கதை அருகம்புல்லின் முக்கியத்துவத்தை விளக்குவது போல், வன்னி இலையின் முக்கியத்துவத்தை விளக்கும் அற்புதக் கதை ஒன்று விநாயக புராணத்தில் இருக்கிறது.

பிரம்ம தேவர், காயத்ரி தேவி, சாவித்ரி தேவி என்னும் தன் மனைவியர் இருவருள், காயத்ரி தேவியை மட்டும் அழைத்துக் கொண்டு, சஹ்யாத்ரி மலைச் சாரலில் ஒரு வேள்வியைத் தொடங்கினார். செய்தியைக் கேள்வியுற்ற சாவித்ரி தேவி, கடும் கோபமுற்று, வேள்விக்கு வந்த இந்திராதி தேவர்களை நோக்கி, 'நீங்கள், இந்த வேள்விக்கு எவ்விதம் உடன்படலாம்?' எனக் கேட்டாள். சரியான பதில் வராது போகவே, அவர்கள் அனைவரையும் நீராக உருமாறுமாறு சபித்து விட்டாள். செய்வதறியாது திகைத்த அவர் தம் தேவிமார்கள், பின்,  பிரம்ம தேவர்    ஆலோசனைப்படி, வக்ரதுண்ட கணபதியை பல காலம் உபாசித்தனர். ஆனால் அவர் பிரத்யக்ஷமாகவில்லை.

அதன் பின், ஆகாயத்திலிருந்து எழுந்த அசரீரி வாக்கின்படி, வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்தனர். விநாயகரும் அவர்கள் முன் தோன்றி, தேவர்களது சாபத்தை நீக்கினார். அதன் பின், தேவர்களனைவரும், மந்தார மரத்தடியில், ஹேரம்ப விநாயகரை பிரதிஷ்டித்து பூஜித்தனர். பிரம்மாவும், பன்னிரண்டு ஆண்டுகள், ஹேரம்ப விநாயகரை வன்னி இலையால் பூஜித்து, அதன் பலனாக, தம் யாகத்தை மீண்டும் தொடங்கி நிறைவேற்றினார்.

கணபதி, எளிய பூஜையில் அகமகிழ்பவர். ஆத்மார்த்தமாக பக்தி செலுத்துபவர்களுக்கு, வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடல். பிள்ளையார் சுழி போட்டுத் துவங்கும் செயல்கள், பெருவெற்றியாக நிறையுமாறு செய்யும் வள்ளல்.

அமைதியாக, ஆத்மார்த்தமாக, முழு மனதையும் செலுத்தி, விநாயகரைப் பூஜிப்பதால், எப்படிப்பட்ட தீவினையும் மாளும். நம்மால் ஆன எதையும் விநாயகருக்கு நிவேதிக்கலாம்.

கணேச‌ பஞ்சரத்ன ஸ்லோகத்தைச் சொல்லி, விநாயக சதுர்த்தி அன்று விநாயகரைத் துதிக்கலாம். கீழே இருக்கும் காணொளி இணைப்பில் கணேச பஞ்சரத்னம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காணொளியை வலையேற்றிய அன்பருக்கு நன்றிகள் பல.

கர்நாடகாவில், விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் கௌரி பூஜை செய்து கொண்டாடுகிறார்கள். கௌரி பூஜை செய்வது பற்றி, என்

1. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 1(சொடுக்கவும்)

2. ஸ்வர்ணகௌரி விரத பூஜை பகுதி 2 (சொடுக்கவும்)

ஆகிய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.  குலதெய்வப் பிரீதி, இந்த தினத்தில் கௌரி பூஜை செய்வதால் ஏற்படும்.

மறு நாள் விநாயகரைப் பூஜித்து, பின் விஸர்ஜன தினத்தில், கௌரி, கணேசர் இருவரையும் சேர்த்து நீர் நிலைகளில் சேர்ப்பிக்கிறார்கள்.கர்நாடகாவில் இது மிகப் பெரிய பண்டிகை. தீபாவளி போல் புதிய ஆடைகள் அணிந்து கொண்டாடுகிறார்கள். வீட்டில் பிறந்த பெண்களுக்கு, 21 வகை மங்கலப் பொருட்களுடன் சீர் செய்கிறார்கள். அன்றைய தினம் அவர்களை உணவருந்தவும் அழைக்கிறார்கள்.

கணேஷ் சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹாராஷ்டிராவில், விநாயக மூர்த்தங்களை, வீட்டுக்கு எடுத்து வந்து குறைந்தது ஒன்றரை நாள், அல்லது ஐந்து, ஏழு, பத்து தினங்கள் பூஜித்துக் கொண்டாடுவார்கள். பொதுவாக, சதுர்த்தி அன்று துவங்கி, அனந்த சதுர்த்தசி வரை மொத்தம் பத்து தினங்கள் விழா நடைபெறும். அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம் அல்லது பந்தலில் கணேச பிரதிமையை வைத்துப் பூஜிப்பார்கள்.

முதல் நாள் பூஜை, நாம் செய்வது போல், கணேச மந்திரங்கள் சொல்லி நடத்துவார்கள். அதன் பின், கணேசரின் பிரதிமை வீட்டில் இருக்கும் வரை, காலை, மாலை இரு வேளையும் ஆரத்தி நடைபெறும். வீட்டில் உள்ளோர், விருந்தினர் அனைவரும் அதில் பங்கு பெறுவர். அதன் பின், பூ, மஞ்சள் குங்குமம் ஆகியவற்றை, கணேசரின் பிரதிமை மீது தூவி வழிபாடு செய்வர். கொப்பரைத் தேங்காய், வெல்லம் சேர்த்த பிரசாதம் விநியோகிக்கப்படும்.

சதுர்த்தி தினத்தன்று மட்டும், ஐந்து முறைகள் ஆரத்தி நடக்கும்.

ஆரத்திகள் மந்திர புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெறும்.

குழுவாகச் சேர்ந்து, பெரிய பந்தல்களில், மிகப் பிரம்மாண்டமான பிரதிமைகளைச் செய்து பூஜிப்பதும் வழக்கம். பத்தாம் நாள் நிறைவில் பெரும் ஊர்வலமாக, கணேச பிரதிமைகள் எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். பத்து தினங்களுக்கு மேலாக, பிரதிமைகளை வீட்டில் வைப்பதில்லை.

இந்தியத் திருநாடே கொண்டாடாடி வழிபடும் விநாயக சதுர்த்தி தினத்தன்று, ஸ்ரீவிநாயகரை உளமார வழிபடுவோம். வேண்டும் வரங்களைப் பெறுவோம்.

வெற்றி பெறுவோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

PALALA GOWRI, POLALA AMAVASA VIRTHAM( 5/9/2013)....பல கௌரி (பலால கௌரி, போலால அமாவாசை) விரதம்


அன்பர்களுக்கு வணக்கம்!

நம் கலாசாரத்தில், அழகியலோடு கூடிய பலவிதமான பண்டிகைகள், விரதங்கள் கொண்டாடப்படுகின்றன.  ஒவ்வொரு பண்டிகை/ விரதத்துக்கும் பின்புலமாக, இறைநம்பிக்கையை வலுப்படுத்தும் கதைகள் சொல்லபடுகின்றன. பெரும்பாலும் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் வேண்டி செய்யப்படுவதாகவே இந்த விரதங்கள் இருக்கின்றன.

நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மற்றும் விரதங்களைக் கண்டறிந்து சொல்வதே இம்மாதிரி பதிவுகளின் நோக்கம்.  நம் நாட்டின் பெருமைப்படத்தக்க கலாசாரப் பின்புலத்தை அறிவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

நமக்குத் தேவையான நன்மைகளைப் பெறும் பொருட்டு, பலவிதமான கௌரி விரதங்கள், பூஜைகள் கொண்டாடும் வழக்கம் நம் பாரம்பரியத்தில் இருக்கிறது. கௌரி தேவி வேண்டும் வரங்களை அருள்பவள். வெண்ணிறத்தை கௌவர்ணம் என்று சொல்வது வழக்கம். சிவனாரிடமிருந்து மின்னலெனத் தோன்றிய வெண்ணிற ஒளியே கௌரி தேவியாக உருப்பெற்றதென புராணங்கள் கூறுகின்றன.

வெண்ணிறமாக இருப்பதாலும் மலைகளின் மேல் தங்கி அருள் புரிதலாலும் 'கௌரி' என அழைக்கப்பட்ட கௌரி தேவிக்கு, 108 விதமான ஸ்வரூபங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான சில வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் திருவடிவங்களைப் போற்றும் முகமாக கௌரி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

கேதார கௌரி, சம்பத் கௌரி, ஸ்வர்ண கௌரி, கஜகௌரி என பலவிதமான கௌரி விரதங்கள் இருக்கின்றன. திருமண முகூர்த்தத்திற்கு முன்பாக, மணமகள், கௌரி பூஜை செய்வது  பல சமூகங்களில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில்,  இந்தப் பதிவில், ஆந்திர, கர்நாடகா மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படும் பலகௌரி விரதத்தைப் பற்றிப் பார்க்கலாம்.இது போலால அமாவாசை விரதம், பலால கௌரி விரதம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் தினம்:
ஒவ்வொரு வருடமும் சிராவண(ஆவணி) மாத அமாவாசை தினத்தன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம், 5/9/2013, வியாழனன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வட இந்திய மாநிலங்களில், பிதோரி அமாவாசை, பய்ல் போலா அமாவாசை என்றும் அழைக்கப்படும் இந்த விரதம், சந்திரமானன பஞ்சாங்கத்தின்படி, சிராவண மாத கடைசி தினம்(அமாவாசை) அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

யார் விரதம் அனுஷ்டிக்கலாம்?
இந்த விரதம், பார்வதி தேவியால், தேவேந்திரனின் மனைவி இந்திராணிக்கு உபதேசிக்கப்பட்டது. அறிவும் ஆரோக்கியமும் நிறைந்த புத்திர பாக்கியம், இந்த விரததை அனுஷ்டிப்பதால் கிட்டும்.

ஆகவே திருமணமான மங்கையர், புத்திரப் பேறு வேண்டியும், குழந்தைகள் இருப்போர், தம் குழந்தைகளின் நலனுக்காகவும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த விரதம், தென்னிந்தியாவில், குழந்தைகளைக் காக்கும் கௌரி தேவியாகிய‌ பார்வதி தேவியின் ஒரு அம்சமாகிய போலெரம்மா, போச்சம்மா என்ற பெயர்களால் வழங்கப்படும் தேவியைக் குறித்துச் செய்யப்படுகின்றது.  தமிழ்நாட்டில் இந்த தேவி,  சீதலா தேவி என்ற  வழங்கப்படும் மாரியம்மனைக் குறிக்கின்றாள். அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்கள் குழந்தைகளை அண்டாது காக்கும் மகிமையுள்ள தேவி இவள்.

வட நாட்டின் சில பகுதிகளில் துர்காதேவியை குறித்தும்,64 யோகினிகள்,  பிரம்மாணி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி, கௌமாரி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய‌ சப்த மாத்ருகா தேவியரைக் குறித்தும் இந்த விரதம் செய்யப்படுகின்றது.

விரதம் அனுஷ்டிக்கப்படும் விதம்:

இது, 'சீதலா சப்தமி'என்று சில வட மாநிலங்களிலும், 'சீதலா சஷ்டி' என்று ஒரிசாவிலும் வழங்கப்படும் விரதங்களைப் போன்றே அனுஷ்டிக்கப்படுகின்றது.  'பிதா, பித்' என்றால்  மாவு என்று பொருள் சொல்லப்படுகின்றது. மாவினால் ஆன தேவியின் உருவம் வைத்துப் பூஜிப்பதால், இது பிதோரி அமாவாசை விரதம் என்று அழைக்கப்படுகின்றது. 64 யோகினிகளைப் பூஜிக்கும் வழக்கம் இருக்கும் இடங்களில், 64 சிறிய உருவங்கள், (கோதுமை அல்லது அரிசி)மாவினால் செய்து பூஜிக்கின்றார்கள்.

பெண்கள் தனித்தனியாக, தம் இல்லங்களிலோ அல்லது அம்மன் திருக்கோயில்களில் ஒன்று கூடியோ இந்த விரதத்தை நடத்துவார்கள்.

தேவி போச்சம்மாவின் திருவுருவப்படம் அல்லது அன்னையின் கோயிலின் படம் ஒன்று, பூஜையறையில் வரையப்படுகின்றது. மாவினால் திருவுருவங்கள் வைத்துப் பூஜிக்கப்படும் வழக்கமுள்ளவர்கள் அவ்வாறு வைத்துப் பூஜிக்கிறார்கள். பின், தூப தீப ஆராதனைகள் செய்து ஷோடசோபசார பூஜைகள் செய்யப்படுகின்றது. கௌரி அஷ்டோத்திரம் (சொடுக்கவும்), துர்கா ஸ்துதி, பவானி அஷ்டகம் முதலியவை சொல்லித் துதிக்கின்றார்கள்.

அம்மை, வைசூரி முதலிய கொடிய நோய்களை விரட்டும் மகிமையுள்ள சீதலாஷ்டகம், சீதலா தேவி ஆரத்தி முதலியவற்றைப் படிக்க கீழே சொடுக்கவும்.

1.சீதலாஷ்டகம்.

2.சீதலாதேவி ஆரத்தி.

அன்றைய தினம், குழந்தைகளுக்கு மங்கள ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அணிவிக்கிறார்கள். விரத பூஜை முடிவில், நோன்புச் சரடுகள் வைத்து வழிபட்டு, தம் குழந்தைகள் நலன் வேண்டி அவர்களது கரங்களில் கட்டி, அவர்களது நலனுக்காக வேண்டுவார்கள்.

சில வித்தியாசமான நிவேதனங்கள் இந்த பூஜையின் போது படைக்கப்படுகின்றன.

தாலிகாலு பரவான்னம்(அரிசி மாவினால் செய்யப்பட்ட சேவையை உபயோகித்துச் செய்யப்படும் பாயசம்) பில்லாலு(அரிசி மாவினால் செய்யப்படும் சப்பாத்தி) முதலிய நிவேதனங்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன.

சற்று வித்தியாசமான இவற்றின் செய்முறையின் லிங்க் கொடுத்திருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.

நிவேதனங்கள் (சொடுக்கவும்).

போலால அமாவாசை விரதக் கதை:
ஒரு ஊரில் ஏழு அண்ணன் தம்பிகள் வசித்து வந்தார்கள். அனைவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. கடைசித் தம்பிக்கு ஏழு குழந்தைகள். அந்தக் குடும்பத்தின் ஏழு மனைவிமார்களும், போலால அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க ஆவல் கொண்டனர். ஆனால் சோதனையும் வேதனையும் சேர்ந்தது போல், ஒவ்வொரு வருடமும், கடைசித் தம்பியின் ஒரு குழந்தை இறைவனடி சேர்ந்தது. அதனால், ஒவ்வொரு வருடமும் இந்த விரதம் அனுஷ்டிப்பது தடை பட்டது. இம்மாதிரி நிகழும் போது ஒரு வருடத்திற்கு எந்தப் பண்டிகையும் கொண்டாடக் கூடாதென்பது சம்பிரதாயம்.

அண்ணன் மனைவியர் அறுவரும், கடைசி ஓரகத்தி, தன் குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளாததே இதற்குக் காரணம் என்று நினைத்தனர். சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதைச் சொல்லிக் காட்டி அவளை மன வேதனைப்படுத்தினர்.

ஏழாவது வருடம். கடைசி தம்பியின் ஒரு குழந்தை மட்டுமே உயிரோடு இருந்தது. அவன் மனைவி, மிகுந்த கவனமுடன் அதைப் பராமரித்து வந்தாள்.ஆனால், விதி செய்த சதி, போலால அமாவாசை தினத்தன்று, காரணம் தெரியாமல் திடீரென அந்தக் குழந்தையும் மரித்தது.

இந்தப் பேரதிர்ச்சியால் அவள் செய்வதறியாமல் திகைத்தாள். இந்த வருடமாவது போலால அமாவாசை விரதம் கொண்டாட, அவள் ஓரகத்தியர் செய்திருக்கும் ஏற்பாடுகளை அவள் அறிவாள். இது தெரிந்தால் நிச்சயம் பெரும் பிரச்னை வெடிக்கும். புத்ர சோகத்திற்கென அழுவதா அல்லது ஓரகத்தியரின் கொடுமைக்கு அஞ்சுவதா என அவளுக்குத் தெரியவில்லை.

திடீரெனத் தோன்றிய உணர்வினால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, குழந்தையை மறைத்தாள். தானும் கோயிலுக்குச் சென்று, விரதத்தில் கலந்து கொண்டு, அம்பிகையை விழிகளில் நீர் பெருக, பூஜை செய்தாள்.

கருணைக் கடலான அம்பிகை, அந்தப் பெண்ணுக்கு கருணை புரிய திருவுளம் கொண்டாள்.

அன்று இரவு, அனைவரும் தூங்கிய பின், இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் போலெரம்மா கோயிலுக்குச் சென்றாள் அந்தப் பெண். அம்பிகையிடம் முறையிட்டு, கதறி அழுதாள். அச்சமயம், இரவு பத்தி உலாத்துதல்(ஊர் எல்லையை காவலுக்காகச் சுற்றுதல்) செய்வதற்காக, அம்பிகை விக்ரக உருவிலிருந்து வெளிப்பட்டாள். ஏதும் அறியாதவள் போல், அந்தப் பெண்ணிடம் வந்து, அவள் அழுகைக்கான‌ காரணம் கேட்டாள்.

அழுது கொண்டே அந்தப் பெண் தன் நிலையைக் கூறி விட்டு, 'இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையின் நிலையைச் சொன்னால் பெரும் பிரச்னை வெடிக்கும். குழந்தையைப் பாதுகாக்காததோடு, குழந்தை இறந்த செய்தியை மறைத்து விரதம் செய்தது தவறு என்று குற்றம் சாட்டுவார்கள். இதை சொல்லாமல் விட்டால், நாளைக்குக் குழந்தை எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வேன்? என்று கதறினாள் அந்தப் பெண்.

அம்பிகை போலால அமாவாசை விரதப் பலனைத் தர திருவுளம் கொண்டாள். மந்திர அக்ஷதையை அவளிடம் கொடுத்து, இறந்த பாலகன் மீதும், மற்ற ஆறு குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீதும் தூவி, அவர்களது பெயரைச் சொல்லி அழைக்குமாறு கூறி விட்டு மறைந்தாள். அன்னையின் ஆணைப்படி செய்தாள் அந்தப் பெண்.

என்ன ஆச்சரியம்!. இறந்த எழுவரும் உறங்கி எழுந்ததைப் போல் உயிர்பெற்று வந்தனர். அந்தப் பெண்ணின் ஆனந்தம் தாளமுடியாததாக இருந்தது. பெருமகிழ்வுடன், அனைத்து குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இல்லம் சேர்ந்தாள் அவள்.

குழந்தைகளோடு அவளைக் கண்ட அனைவரும், அதிசயித்து விசாரிக்க, நடந்ததைக் கூறினாள் அந்தப் பெண். அனைவரும் அன்னையின் அருள்மழையை வியந்து போற்றினர். தம் குழந்தைகளின் நலனுக்காக 'போலால அமாவாசை விரதத்தை' தொடர்ந்து செய்யத் துவங்கினர். அது முதல் இந்த விரதம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

வட இந்தியாவின் சில பகுதிகளில், இது பிதோரி அமாவாசையாகக் கொண்டாடப்படுகின்றது என்பதை முன்பே பார்த்தோம். இந்தக் கொண்டாட்டம், நமது மாட்டுப் பொங்கலை பெரும்பாலும் ஒத்திருக்கின்றது.

அன்றைய தினம், உழவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் முகமாக, அவற்றை அலங்கரித்து வழிபடுகின்றனர். மறுநாளிலிருந்து, விதை விதைத்தலும், நிலத்தை உழுதலும் ஆரம்பமாகும்.

போலா அமாவாசைக்கு முன் தினம், மாடுகளின் மூக்கணாங்கயிறுகள் அவிழ்க்கப்படுகின்றன. மஞ்சள், கடலை எண்ணை கலந்த கலவை கொண்டு அவை குளிப்பாட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் செய்வது போல், அவற்றின் உடலெங்கும் வண்ண, வண்ணப் பொட்டுக்கள் வைத்து, கொம்புகளுக்கு வண்ணமடித்து, மலர்கள், வண்ணக் காகிதங்கள் இவற்றால் அலங்கரிக்கின்றனர்.

அதன் பின், மாடுகளை நிறுத்தி வழிபாடு செய்து, கிச்சடியை உணவாகத் தருகின்றனர். மாலை வேளைகளில் மாடுகளின் ஊர்வலமும் நடக்கின்றது

சில மாநிலங்களில், இந்த தினத்தை ஒட்டி விளையாட்டுப் போட்டிகளும் நடக்கின்றன.

வேறு சில மாநிலங்களில், பசுவுக்கும் காளை மாட்டுக்கும் மழை வேண்டி திருமணம் செய்கிறார்கள். மனிதர்களுக்குச் செய்வது போலவே அனைத்துச் சடங்குகளும் நடைபெற்று, கோவில்களைச் சுற்றி பிரதக்ஷிணமாக மாடுகளை அழைத்துச் செல்கின்றார்கள்.

இந்த அமாவாசை தினத்தன்று பித்ருவழிபாடு மிக விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆகவே அன்றைய தினம் தர்ப்பணம் முதலியவை செய்வதும் மிக நல்லது.

தொன்று தொட்ட நம்பிக்கைகளின் விளைவாக எழுந்த இந்த விரத பூஜைகள், ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்வோருக்கு அளவில்லாத நற்பலன்களைத் தருவது கண்கூடு.

இம்மாதிரியான விரதங்கள் செய்யும் வழக்கமில்லாதவர்களும் இந்தக் குறிப்பிட்ட தினங்களில் தங்களால் இயன்ற இறைவழிபாட்டினை மேற்கொண்டு நலமடையலாம்.

இறையருளால்

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.